Tuesday, 12 June 2012

கனவுகள்தானோ வாழ்க்கை எல்லாம்..


"அம்மா போன் அடிக்குதும்மா" செல்வி சத்தம்போட்டு அம்மாவை கூப்பிட்டாள்.

“எடுத்து யாருன்னு கேளும்மா” .

”ஹலோ யாரு பேசுறது?” .

”நான் அண்ணன் பேசுறேன் செல்வி”
.
”நல்லா இருக்கியா அண்ணே?” .

”நான் நல்லா இருக்கேம்மா ,நீ அம்மா அப்பா எல்லாம் எப்படி இருக்கீங்க?”

”எல்லோரும் நல்லா இருக்கோம்ணே ,அம்மாவை கூப்பிடவா ,
கூப்பிடுமா” .

செல்வியிடமிருந்து அம்மா போனை வாங்கினாள்.

”ஹலோ சேகரு நல்லா இருக்கியாய்யா?”

”நல்லா இருக்கேம்மா ,நீங்க அப்பா தங்கச்சி எல்லோரூம் நல்லா இருக்கீங்களா ,அப்பா எங்கேம்மா?” .

”எல்லோரும் நல்லா இருக்கோம் சேகரு .அப்பா வயக்காட்டுக்கு போயிருக்காங்க”

”சரிம்மா ,செல்விக்கு மாப்பிள்ளை வந்துச்சே என்னம்மா சொன்னாங்க” .

”புடிச்சு இருக்குன்னு சொன்னாங்க சேகரு .நம்ம குடும்பத்தில் எல்லோருக்கும் மாப்பிள்ளைய புடிச்சு இருக்கு .மாப்பிள்ளை குடும்பமும் நல்ல குடும்பம்தான்” .

”அப்புறம் என்னம்மா பேசி முடிச்சிற வேண்டியதுதானே?” .

”இல்லைப்பா கொஞ்சம் கூடுதலா செய்முறை எதிர்பார்க்குறாங்க” .

”கவலை படாதீங்கம்மா செஞ்சுறலாம்.எனக்கு இருக்குறது ஒரே தங்கச்சிதான் என்ன என்ன கேக்குறாங்களோ அவ்வளவையும் செய்வோம் பேசி முடிங்கம்மா .கொஞ்சம் பணம் இங்கே சேர்த்து வைத்து இருக்கேன் அதோடு முதலாளியிடம் கேட்டால் பணம் தருவாரு .என் முதலாளி நல்ல குணம் .கண்டிப்பா கேட்ட பணம் தருவாரு .நீங்க கல்யாணத்துக்கு ஆகவேண்டிய வேலைய பாருங்க .அப்பாவிடம் கவலைப்பட வேணாம்னு சொல்லுங்க .நானும் முடிந்தால் கல்யாணத்திற்கு வருவதற்கு முயற்சி செய்றேம்மா .
நீங்க உடம்பை கவனித்து பார்த்துக்குங்க அம்மா .போனை வைக்கவாம்மா”.
................................................................

போனை வைக்கவாம்மா ,போனை வைக்கவாம்மா ,போனை வைக்கவாம்மா .

”டேய் சேகரு எழுந்திரிடா மணி ஆறு ஆகப்போவது .சீக்கிரம் வேலைக்கு இறங்காட்டி முதலாளி கத்துவாருடா.என்னடா புலம்புறே எப்போதும்போல கனவாடா” .

”ஆமாடா கனவுதான் .சீக்கிரம் கல்யாணம் நடக்கும்னு காத்துகிட்டு இருக்குற தங்கச்சி ,ஏதாவது என்னால் நடந்துறாதா என ஏங்கும் அம்மா ,எந்நாளும் ஆஸ்பத்திரியும் வீடுமா அலையுற சீக்காளி அப்பா எல்லோருக்கும் இருக்குற ஒரே நம்பிக்கை நான் .ஆனால் நான் சம்பாரிக்கும் பணம் வாங்கிய பணத்துக்கு வட்டி கட்டவே சரியா இருக்கு .இதுல நான் என்னடா பண்ணமுடியும் .கனவுதான் காணமுடியும் .வாடா எப்போதும்போல வேலைக்கு போவோம் .இல்லாட்டி திட்டி தொலைவாரு”

3 comments: