Wednesday 30 May 2012

சுனிதா ராணியும் பேஸ்புக் புரட்சியும்


சுனிதா ராணி பார்க்க அவ்வளவு அழகாய் இருப்பாள் .போட்டோவை ஒரு தடவை பார்க்கும்போதே ஒன்பது தடவை பார்க்க தோன்றும் அழகு .ஆண்டவன் படைப்பில் அவ்வளவு அழகாய் இருப்பாள் .நீங்க பார்த்து இருந்தால் மலைத்து இருப்பீர்கள் பேரழகி என .அவள் ஆல்பத்தில் இருந்த போட்டோக்களுக்கு அவ்வளவு பின்னூட்டம் வந்தது .நானும் கூட அந்த பெண்ணின் நண்பர் இணைப்பில் இருந்தேன் .

ஒருவாரம் போனவுடன் பேஸ்புக் முகப்பில் வேறு ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்தது .அந்த பெண்ணின் புகைப்படமும் சில ஷேர் செய்யப்பட்டு இருந்தது .பார்த்தவர்கள் நண்பராக இருக்கும் என எண்ணி அந்த போட்டோக்களுக்கும் பின்னூட்டம் போட்டு இருந்தனர் .நாள் ஆக ஆக நிறைய பெண்கள் அதுவும் அழகாய் இருக்கும் பெண்கள் படங்களாக ஷேர் செய்ய ஆரம்பித்தாள்.அது போல நேற்றும் நிறைய படங்கள் வெளியாக நண்பர்கள் இணைப்பில் இருக்கும் அனைவருக்கும் லேசாக சந்தேகம் வர ஆரம்பித்தது போலி முகவரி என .இன்று காலையில் இன்னும் ஐம்பது பெண்கள் படம் வெளியாகவும் பொங்கி எழுந்துவிட்டது பேஸ்புக் நண்பர்கள் கூட்டம் .

இன்று நான் பேஸ்புக் முகப்பில் விழிக்கையில் நிறைய பதிவு சுதா ராணி போலி முகவரி .உடனே கம்ப்ளைன்ட் செய்யுங்கள் என .மதியம் ஆவதற்குள் ஒரு புரட்சியே நடந்து அந்த போலி முகவரி நபர் பேஸ்புக்கில் இருந்து விரட்டி அடிக்கபட்டுள்ளார் .அந்த பன்னாடை வேறு முகவரியில் வரும் அது வேறு விஷயம் .இனி நான் விசயத்திற்கு வருகிறேன் .

ஒரு நபர் போலி முகவரியில் இருக்கிறார் என்று தெரிந்து கொந்தளித்து ஆளை விரட்டி விட்டோம் .நேற்று நீயா நானா கோபிநாத்தை புரட்டி எடுத்தோம் .நமது வீரமும் புரட்சியும் இதுதானா .எங்கே போரடவேண்டுமோ அப்பொழுது ஒன்றாக இணைத்து இருக்கோமா .கேள்வி கேட்டு பாருங்கள் இல்லையென்றே பதில் வரும் நம்மகிட்டே இருந்து .

பஸ் கட்டணத்தில் இருந்து பசுமாட்டு சாணி வரைக்கும் விலை ஏறியபோது என்ன செய்தோம் .பேஸ்புக்கில் இருந்து ப்ளாக் வரை ஆளுக்கு ஒரு பதிவை எழுதி மனநிறைவுடன் ஒதுங்கி கொண்டோம் .அரசியல் வாதி நாலு நாளைக்கு அறிக்கை விட்டு அவர்கள் வேலையை பார்க்க போய்விடுவார்கள் .நாம என்ன செஞ்சோம் .டீக்கடை பெஞ்சில் ஓசி பேப்பரையோ அல்லது நெட்ல பேசி ஓஞ்சு விடுவோம் .அது முடிஞ்சவுடனே அன்னைக்கு என்ன செய்தி முக்கியமா இருக்கோ ஆளுக்கு ஒரு பார்வையில் எழுதி நாலு கமண்டும் இருபது லைக்கும் வாங்கிட்டு அடுத்தநாள் செய்திய எப்படி எழுதலாம்னு ஓடிருவோம் .

பேஸ்புக்கில் முந்தாநாளு பெட்ரோல் விலை ஏற்றம் ,நேற்று கோபிநாத் ,இன்னைக்கு காலைல சுனிதா ராணி ,மத்தியானம் கலைஞர் பேச்சு என பதிவு போடவும் பேஸ்புக் புரட்சி பண்ணவும் தெரிந்து இருக்கு .அப்புறம் அரை லிட்டர் பெட்ரோலுக்கு அலைமோதி வாங்க தெரிந்து இருக்கே தவிர நம்மளுடைய கோபம் எங்கே போனது.

விலை ஏற்றம் வந்தபொழுது கட்சிபேதம் மறந்து மக்களை ஒன்றிணைக்க தெரிந்ததா .கரண்ட் பிரச்சினைக்கு வீட்டில் இருந்து திட்டியும் பதிவு போடதெரிந்ததே தவிர மக்களை ஒன்று திரட்டி புரட்சி செய்ய தெரிந்ததா .இப்ப பெட்ரோல் பிரச்சினை வந்த போதும் அவன் அவன் வண்டிக்கு பெட்ரோல் போட அலைவோம் தவிர அடுத்தவன் எப்படி போனா நமக்கு என்ன .

வாங்க நாம் புரட்சி பண்ணுவோம் சமூக வலைதளங்களில் மட்டும். நானும் உங்க கூடத்தான்

Monday 28 May 2012

நீயா நானா கோபிநாத் ஒட்டுமொத்த தமிழகத்தின் அறிவாளியா?



கோபிநாத் எதை முன்னெடுத்து செல்கிறார் .அறிவுசார் விவாதங்களா  அல்லது அசிங்கத்தின் மறுபக்கங்களை திறக்க முயற்சித்து வருகிறாரா .முன்பு  நான் இணையத்தில் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியில் முதல் நிகழ்வாக நீயா நானா இருந்தது .இன்று சில நேரங்களில் கோபிநாத் நடத்தும் நிகழ்சிகள் அசிங்கத்தின் உச்சியை தொட்டு விடுகிறது .



இந்தவார தலைப்பு போலி கவுரவம் .சரியான தலைப்புத்தான் .நிகழ்வும் தலைப்பை ஒட்டி போய்க்கொண்டு இருந்தது .சிறப்பு அழைப்பாளராக பவர் ஸ்டார் என அழைக்கப்படும் டாக்டர் சீனிவாசனை அழைத்தார் .கோபிநாத் அவரிடம் என்ன கேட்டு இருக்க வேண்டும் .போலிகவுரவம் பற்றியல்லவா .கோபிநாத் அதை விட்டுவிட்டு சீனிவாசனையே அசிங்கத்தின் உச்சமாக திரும்ப திரும்ப கேள்விகள் கேட்கிறார் நீங்க ஏன் அதில் இருந்து வெளிவர மறுக்குறீங்க என .ஒரு சபைக்கு ஒருவரை சிறப்பு அழைப்பாளராக அழைத்து அவரை கோபிநாத் அவர்களே அசிங்கபடுத்த வேண்டுமா .

பவர் ஸ்டார் சீனிவாசன் எந்த ஒரு கேள்விக்கும் சிரித்துக்கொண்டே பதில் சொல்லிக்கொண்டு இருந்தார் .அதே இடத்தில் வேறு ஒரு நடிகரை கேள்வி கேட்டுவிட முடியுமா கோபிநாத் .சீனிவாசன் புரிந்து பதில் அளித்தாரா இல்லை புரியாமல் பேசினார தெரியவில்லை ,இப்பொழுது யோசிக்கும்போளுது கோபிநாத் கேட்ட கேள்விக்கெல்லாம் ஜென்டில்மேனாக இருந்து இருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம் .

....................................................................................................................................

மூன்று வாரங்களுக்கு முன்பு நடந்த இரண்டு விவாதங்கள் .ஒரு விவாதத்தில் ஒரு பக்கம் கணவர்களும் ஒரு பக்கம் மனைவிகளும் .அந்த விவாதத்தில் ஒரு பெண் பேசியதை மட்டும் எழுதுகிறேன் .அவர் சொல்கிறார் அடுக்களையில் நின்ற என்னிடம் என் கணவர் என்னிடம் கேட்ட கேள்விக்கு நான் கோபப்பட்டு தெருவில் போகும் நாயும் சும்மா பேசும் வாயும் அடிவாங்காமல் போகாது என கணவனை பார்த்து கேட்டேன் என சொல்கிறார் .கணவன் மனைவிக்குள் நடக்கும் சண்டையை உலகறிய பார்க்கும் ஒரு விவாதத்தில் ஒரு பெண் இப்படி சொல்கிறார் .அன்று பேசிய அத்தனை ஆண்களும் பெண்களும் அபத்தமாக பேசினர்.இதை சிரித்துக்கொண்டே கோபிநாத் வழிநடத்துகிறார் .
........................................................................................................................................

அடுத்த வார  தலைப்பு பெண்களின் உடை சுதந்திரம் பற்றி .பெண்கள் காலத்திற்கு ஏற்ப உடை நாகரீகமாக அணிவதில் தவறில்லை .ஆனால் அசிங்கமாக உடை அணிவதையோ அல்லது தவறான வாசகங்கள் பொறித்த டீ சர்ட் அணிவதை நாகரீகம் என சொல்லமுடியுமா .அந்த நிகழ்சியில் ஒரு பெண் பேசியது .உடை அணிவது என் சுதந்திரம் .நான் எப்படி வேண்டுமானாலும் உடை அணிவேன் .நீ அதை பார்ப்பதோ விமர்சனம் பண்ணுவதோ தவறு என பேசுகிறது .இந்த நிகழ்வுக்கு வந்து இருந்த குட்டி ரேவதி ,டாக்டர் ஷாலினி ,கவிதா போன்றவர்கள் அது சரி என வாதிடுகின்றனர் .நாங்கள் பாலியல் தூண்டும் விதமாக உடை அணிவோம் ,நீங்க பார்த்து பொத்திக்கொண்டு போகவேண்டும் என பேசியது அந்த பெண் .

நிகழ்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்து இருந்த கல்லூரி பேராசிரியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான கல்லூரி பெண்கள் என்னிடம் சொன்னது எங்கள் உடைகள்தான் காரணம் என .அவரையே மறுத்து இந்த பெண்ணியவாதிகள் பேசினர் .பாதி நிகழ்விலேயே அவரை அனுப்பி விட்டனர் .

கோபிநாத் நினைத்துக்கொண்டு இருக்கிறார் அறிவுசார் நிகழ்சிகள் படித்துக்கொண்டு இருக்கிறேன் என .சில நேரங்களில் அசிங்கங்களையும் அரங்கேற்றிகொண்டு இருக்கிறார் என்பதே இன்று நிஜம்

Sunday 13 May 2012

அம்மா

அம்மா என எழுதும்போதே மெல்லியதாய் மனம் பரவசம் அடைகின்றது .அம்மாவிற்கு அன்னையர் தினம் என ஒரு நாளை ஒதுக்கி வாழ்த்து சொல்வதை விட வாழ்நாளெல்லாம் நன்றி சொல்லலாம் அன்பே உருவான அம்மாவிற்கு .

அம்மா என எப்பொழுது அழைக்க தொடங்கினேன் என்பது தெரியாதபோதும் நான் அம்மா என முதன்முதலில் அழைத்தபொழுது என் அம்மாவின் முகத்தில் எவ்வளவு ஆனந்தம் இருந்து இருக்கும் .

சின்ன வயது அம்மா கோட்டோவியாமாய் மனதுக்குள் .கை புடித்து நடக்கையில் என் அம்மா என கம்பீரமாய் நடப்பதாய் தோணும் எனக்கு எல்லோருக்கும் அம்மா இருக்கின்றார்கள் என்பதை மறந்து .

என் அம்மா அழுகை ஒன்றையே வாழ்க்கையாக கொண்டிருந்தபோதும் பிள்ளைகளுக்காக வாழ்வை தொலைத்தவர்கள் என்பது பின்னாளில்தான் உணர ஆரம்பித்தேன் .

தொலைவில் இருந்து தொலைபேசியில் அம்மா என அழைக்கும்போது நல்லா இருக்கியா என அம்மா  கேட்க்கும்போது அந்த ஒற்றைவார்த்தை தரும் ஆறுதல் இந்த உலகம் எனக்கு தந்துவிடாது .

சின்ன வயதில் அம்மாவிடம் கோபித்துகொண்டு இரவில் எங்காவது படுத்து அழுதுகொண்டு இருப்பேன் .கோபம் எனக்குள் இருந்தாலும் பசியெடுக்க மறப்பதில்லை என் வயிற்றுக்கு .வீட்டிற்கு போகவும் மனம் இல்லாமல் பசியும் தாங்காமல் அவஸ்தையோடு அம்மா வரவுக்காக காத்திருப்பேன் .அரிக்கேன் விளக்கை ஏந்திக்கொண்டு தேடிவரும் அம்மாவிடம் அதற்குமேல் வீம்பு வருமா எனக்கு .

பிள்ளையின் வாழ்வுக்காக பிள்ளையின் காலில் விழுந்து கேட்கும் அம்மாக்களில் என் அம்மாவும் ஒருவர் .வாழ்நாளில் மறக்கமுடியாத நாளாகவும் நான் வெட்கப்படும் நாளாகவும் அமைந்த நாளாகிவிட்டது என் அம்மா என் காலில் விழுந்து என் வாழ்க்கை தொலைந்து போககூடாது என்பதற்காக மன்றாடியது .

என் வீட்டில் எல்லோருக்காகவும் விட எனக்காக என் அம்மா அழுதது அதிகம் .அழுத அம்மாவுக்கு அன்பை காமிக்க தெரியாதவனாக இருக்கிறேன் நான் .

உலகெங்கும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் அம்மாக்கள் இருக்கிறார்கள் .உறவுகளில் மாமியார்களும் ,மருமகளும் ,அக்காக்களும் ,தங்கைகளும் இருந்தாலும் இவர்களுக்குள் முரண்பட்ட வாழ்வுகள் இருக்கின்றன .ஆனால் முரண் இல்லா வாழ்வு ஒன்று உலகில் இருக்கு என்று சொன்னால் அது அம்மாக்களிடம் மட்டுமே இருக்கின்றது .

உலகில் உறுதியிட்ட நிஜம் ஒன்று உண்டெனில் அது அம்மா மட்டுமே .

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

Sunday 6 May 2012

கபடி...கபடி......கக்கக்கபடி...கபடி




கபடி கபடி என உச்சரிக்க தொடங்கும்போதே கடந்து போன வருடங்களுக்குள் கலையாத நினைவுகளாய் இன்னும் இருக்கு கிராமங்களுக்குள் நடக்கும் வரலாற்று போர்களாய் கபடி .


எனக்கும் கபடிக்கும் என்ன தொடர்பு இருக்கு என நீங்க நினைத்தால் அது ஆள் பற்றாக்குறைக்கு இறங்கும் துணை ஆளாக மட்டுமே கபடி போட்டியில் இறங்கி இருக்கிறேன் .எப்பொழுதும் கபடி விளையாடும் எங்கள் ஊர் கபடி விளையாட்டு வீரர்களுக்கு துணிகளை பாதுகாத்து வைக்கும் பாதுகாவலனாய் எல்லா கபடி போட்டிகளுக்கும் போய் வந்து இருக்கிறேன் .


இன்று தேசிய விளையாட்டு ஹாக்கியா ,கிரிக்கெட்டா என கேட்டால் ஹாக்கியை மறந்துவிடும் சமூகத்துக்குள் இன்று கபடியை சொன்னால் கில்லி படத்திலும் ,வெண்ணிலா கபடிக்குழு படத்திலும் கபடியை பார்த்துவிட்டு அதுதான் கபடி என நினைத்துக்கொண்டு இருப்போம் .முன்பு கபடி விளையாடபோனால் கபடி மட்டுமே அல்ல அதையும் தாண்டி நிறைய இருந்தது கிராமத்து கபடி போட்டியில் .


ஒரு கிராமத்தில் கபடி நடக்குது என்றால் அது பெரும்பாலும் சனிக்கிழமை இரவுகளில் ஆரம்பம் என நோட்டிஸ் அடித்து வெளியாக்கி இருப்பார்கள் .எனக்கு விவரம் தெரிந்த வயதில் முன்னூற்றி முப்பத்து மூன்று ருபாய் முதல் பரிசாக இருந்தால் அது பெரிய பரிசு .நுழைவுக்கட்டணம் பதினொரு ரூபாயாக இருக்கும் .



எங்கு கபடி நோட்டிஸ் ஒட்டி இருந்தாலும் யாரவது பார்த்து வந்து சொல்லிவிடுவார்கள் இந்த ஊரில் கபடி நடக்குது என .கபடிக்கு ஒரு வாரம் முன்பே எங்கள் ஊர் பள்ளி திடலில் காலையிலும் மாலையிலும் பயிற்சி விளையாட்டு விளையாட ஆரம்பித்து விடுவோம் அணி பிரித்து .கபடி நடக்கும் அன்று இரவு எழு மணிக்கு எங்கள் ஊரை விட்டுகிளம்புவோம் சைக்கிள் டயரை வெட்டி கொளுத்தி கையில் பிடித்துக்கொண்டே .டயர் பற்றி எறிந்தால் அவ்வளவு சீக்கிரம் அமந்து விடாது .


கபடி நடக்கும் ஊரை சென்று அடைந்தால் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்துகொண்டு இருப்பார்கள் .வெளியூர்களில் இருந்து வந்து இருக்கும் அணிகளை பதிந்து நுழைவுக்கட்டணம் கட்டுங்கள் என .சில அணிகள் பெயரை மட்டும் பதிந்துவிட்டு நுழைவுக்கட்டணம் கட்டாமல் காலதாமதம் செய்வார்கள் .வந்து இருக்கும் சில அணிகள் தங்கள் அணியை இரண்டு குழுவாக பதிவர்கள் .கடைசி நேரத்தில் ஒரு அணியை கேன்சல் செய்துவிடுவார்கள் .


சில குழுக்கள் வெளியில் நட்பாக இருந்தாலும் கபடி என்று வந்துவிட்டால் பரம எதிரியாக இருப்பார்கள் .அவர்களில் யாரவது ஒரு குழு கபடி நடத்தும் அமைப்பினரிடம் எங்களோடு முதல் ரவுண்டில் இந்த அணியை போடுங்கள் என கேட்பார்கள் .அப்படி கேட்டு வாங்கி முதல் ரவுண்ட் நடந்தால் அந்த விளையாட்டில் பொறி பறக்கும் .பார்க்கும் பார்வையாளர்களுக்கும் மிக சந்தோசமா இருக்கும் .


எங்கள் ஊரில் இரண்டு கபடி  அணிகள் இருந்தன .ஒரு அணியின் பெயர்  இளைஞர் மன்றம் , இன்னொரு அணியின் பெயர் முத்தமிழ் கபடிக்கழகம்.இரண்டில் ஒரு அணி எங்காவது சென்று பரிசு வாங்கி வந்துவிடுவார்கள் .இளைஞர் மன்றம் பின்பு செவன் ராபின்ஹூட் என பெயர் மாறியது ,காரணம் அப்பொழுது நான் சிகப்பு மனிதன் படம் வெளியாகி இந்த ராபின்ஹூட் பெயர் பிரபலமாக இருந்தது .இதே போல ராஜேந்தர் ஒரு படத்தில் தனது பெயரை சூலக்கருப்பன் என வைத்து இருப்பார் .அந்த பெயரை இடயன்காடு சூலகருப்பன் என தங்கள் ஊரோடு சேர்த்து வைத்து அணியின் பெயரை கூப்பிட்டார்கள் .




எங்கள் ஊரை சுற்றி இருந்த அணியின் பெயர்கள் முன்பு இப்படி இருந்தன. முதுகாடு வானவில் ,அறந்தாங்கி செவன்புல்லட். அரசர்குளம் ஏ எஸ் சி, அரசர்குளம் செவன் லயன்ஸ் .மணக்காடு கபில் தேவ், வீரியன்கோட்டை வெண்புறா என நினைவில் நின்ற அணிகள் நிறைய .
என் நினைவில் நிற்கும் புகழ் பெற்ற வீரர்கள் கஸ்டம்ஸ் அலி . திருமயம் அப்பாதுரை , பழுக்காடு கணேசன் , மணக்காடு சூசை ராஜ். அரசர்குளம் அக்கு வீட்டு ராஜ் . அரசர்குளம் மதி . கொடிவயல் செல்வம் . அறந்தாங்கி காளையன், வீரியன்கோட்டை சடகோபன்  .மங்களநாடு ராஜாமுகம்மட், மங்களநாடு ஜபருல்லா , ஒக்கூர் ஆசைத்தம்பி, இடையங்காடு தாஜ்  என நிறைய .இவர்கள் சிலர் இன்று பெரிய பதவிகளில் இருக்கிறார்கள் .சிலர் என்ன செய்கிறார்கள் என்பது தெரியவில்லை .


முன்பு கபடி நடக்கும் கிராமங்களில் பெண்களும் விளையாட்டை பார்க்க வருவார்கள் .சில விளையாட்டு வீரர்களுக்கு அவர்கள் மனதிற்கு பிடித்த தாவணியும் வந்து இருந்தால் அவரின் ஆட்டத்தை பார்க்கவேண்டுமே .தன் மனதுக்கு பிடித்த பெண் பார்க்கிறாள் என்பதற்காகவே ஆட்டத்தின் ஸ்டைலே வேறு மாதிரி இருக்கும் .விடிந்தும் கபடி நடந்தால் அருகில் இருக்கும் எல்லா வீடுகளிலும் சாம்பார் சோறும் ,இட்லியும் வீரகளை அழைத்து சாப்பிட கொடுப்பார்கள் .இப்படி கபடி விளையாட போன வீரர்களுக்கு அதே ஊரில் சம்மந்தம் பேசி கல்யானங்களும் நடந்து இருக்கு .
இதே கபடியால் ஊர் பிரச்சினையாகி பஞ்சாயத்தில் கை கட்டி நிற்பதும் நடந்து இருக்கு .எப்படி இருந்தாலும் அதே சண்டைக்காரகள் இதே கபடியால் ஒன்று சேர்ந்தும் விளையாடுவார்கள் .


இன்று நீண்ட காலங்களுக்கு பின்பு எங்கள் ஊர் பக்கம் மறுபடியும் கபடி விளையாட்டு துளிர்த்து இருக்கு .கிரிக்கெட் மோகத்தால் காணாமல் போய்க்கொண்டு இருந்த கபடி மறுபடியும் நடக்க ஆரம்பித்து இருப்பதில் சின்ன மகிழ்வோடு இந்த பதிவு

Wednesday 2 May 2012

அஞ்சல் செய்யப்படாத கடிதம்.......



என்னால் உனக்கு அஞ்சல் செய்யப்படாமல் போன கடிதம் காதலி 

அன்புள்ள என ஆரம்பிக்கிறேன் இந்த கடிதத்தை ,அதன் பின்பு என்ன எழுதுவது என யோசிக்கிறேன் .அன்பே எனவா இல்லை காதலி எனவா .உன் கைக்கு சேரும் முன்பு உன் அப்பாவோ இல்லை அண்ணனோ இந்த கடிதத்தை பிரிக்கலாம் .பிரித்தவுடன் என் மேல் கொலைவெறி கோபமோ இல்லை உன்னை அடிக்கவோ முற்படலாம் இல்லை இது நடக்காமலும் போகலாம் .எது நடப்பினும் நம் காதல் நிஜமன்றோ.


உன் வீட்டை நான் கடக்கும் ஒவ்வொருமுறையும் ஒரு மலைதாண்டிய உணர்வு எனக்கு .உன் கண்களை உன் வீட்டின் ஜன்னலில் தேடி இல்லையெனில் உன் வீட்டின் முற்றத்தில் தேடி கடக்கிறேன் தினமும் .உன் பொக்கைவாய் பாட்டி பார்வையிலேயே ஜாக்கிரதை என சொல்வதுபோல இருக்கும் எனக்கு .என் சைக்கிள் ஜெயின் உன் வீட்டு வாசலில் சரியாக கலண்டுகொல்லும்போது உன் அப்பாவின் மொட்டோர்சைக்கில் பயணமும் சரியாகவே இருந்து இருக்கிறது .அவர் பார்வையில் அன்பு இருக்கிறதா ஆணவம் இருக்கிறதா அறியமுடிவதில்லை என்னால் .உன் அண்ணனுக்கும் என்னைப்போல யார்மீதாவது காதல் இருக்கலாம் ,சோதித்து பாரேன் உன் அண்ணன் விட்டம் பார்த்துகொண்டு யோசிப்பதை .






நான் உன்னை எப்பொழுது பார்த்தேன் எனக்குள் எப்பொழுது நீ அரும்பாக மலர்ந்தாய் என்பதை யோசிக்கிறேன் .பதிலற்ற கேள்வியாக இருக்கிறது .காலம் நேரம் குறித்து வைக்கவில்லை நீ என்னுள் காதலாக அரும்பியதை ,நான் என்ன ஜோசியமா பார்க்க போகிறேன் நாள் நேரம் குறித்து .

நீ எல்லா நாட்களிலும் என்னை கடந்து இருக்கிறாய் புன்னகைக்க மறந்து .அது கூட என்னுள் சலனத்தை உருவாக்கி இருக்கலாம் .பேசிக்கொண்டே வந்த உன் தோழியிடம் பேசாமல் இறேன் என நீ எரிந்து விழுந்ததும் என்னுள் ஏதோ ஒன்றை உருவாக்கி சென்று இருக்கலாம் .ஏன் இப்படி இருக்கிறாய் என காரணம் தேடியளைந்தே நான் காதலுக்குள் விழுந்து போனேன் உன்னிடம் .

உன்னிடம் ஒரு வார்த்தை பேசுவதற்கு முன்பு உன் தோழிகளிடம் ஓராயிரம் முறை பேசி இருப்பேன் உன்னைப்பற்றி .அனைவரும் சிரித்தனர் அசடு நான் என .எங்களுக்கே புரியாத எங்கள் தோழியிடம் என்ன கண்டீர்கள் என கேட்டனர் .பதில் எங்கே என்னிடம் இருக்கு ,பதில் தெரிந்தா எனக்குள் காதல் பூத்தது .







இன்னும் எழுதலாம் நான் இடம் இல்லை இந்த கடிதத்தில் .ஒன்றை மட்டும் சொல்லி இந்த கடிதம் முடிக்கிறேன் ,உன் வெட்கத்தின் புன்னகை பார்த்தது பள்ளியின் முக்கில் சைக்கிள் வளைக்கிறேன் என போட்டு விழுந்து தூக்கிவிட ஆளில்லாமல் அதிரிச்சியும் வெட்கமுமாய் அண்ணார்ந்து நீ பார்க்க அசடாட்டம் நான் பார்க்க உன் இதழோரம் மெல்லியதாய் அரும்பிய புன்னகை இன்னும் ஏன் கண்ணுக்குள் என் காதலி....

Tuesday 1 May 2012

மே தினமும்...முன்னேறிய நானும்....



மே தினம் எல்லா வருடமும் என்னை கடந்து சென்ற நாள்தான் .இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் யாருக்கேனும் இந்த நாளில் வாழ்த்து சொல்லி இருக்கேனா என்று யோசித்தால் இல்லை என்ற பதிலே வருகிறது .இந்த முகநூலுக்கு வந்த பிறகு எல்லா நாளிலும் யாருக்கேனும் பிறந்தநாள் வாழ்த்தோ அல்லது விஷேச தின வாழ்த்தோ எழுதிகொண்டுதானிருக்கிறேன்.

உழைப்பாளர் தினம் தொழிலாளிக்கு மட்டுமா அல்லது ஊதியம் கொடுக்கும் முதலாளிக்குமா என்று எனக்கு தெரியவில்லை .எல்லோருக்குமே வாழ்த்துக்கள் சொல்லுவோம் .

நான் முதலாளியாகவும் இருந்து இருக்கிறேன் கிராமத்தில் என் விளைநிலத்தில் வேலை பார்த்த தொழிலாளிகளுக்கு .நான் தொழிலாளியாகவும் இருந்து இருக்கிறேன் மலேசியா வந்து .சில வருடங்கள் உழைத்து கொஞ்சம் பணம் சேர்த்துக்கொண்டு சிறு தொழில் ஒன்றை இங்கே ஆரம்பித்து அதற்க்கு நானே முதலாளியாகவும் நானே தொழிலாளியாகவும் இருந்து இருக்கிறேன் .

சின்ன சறுக்கலில் அந்த தொழிலை இழந்து மறுபடியும் தொழிலாளியாக வேலை பார்த்து இருக்கிறேன் .அந்த முதலாளியிடமே அவரது சிறு தொழில் ஒன்றை விலைபேசி குறைந்த வருமானமாக இருந்தாலும் நிம்மதியா சில மாதங்கள் நடத்திக்கொண்டு இருந்தேன் .என் போதாத காலம் நான் தாயகம் திரும்ப வேண்டி இருந்ததால் அந்த கடையை தெரிந்த நண்பரிடம் பார்த்துக்க சொல்லி விட்டு வந்தேன் ,ஆனால் அவர் வேறு ஒருவரிடம் கடையை கொடுத்து அந்த ஆள் அந்த கடையின் மேல் கடன் வைத்து அந்த கடனால் நான் மலேசியா மறுபடி வந்தபோது உதடு தெறித்து மூக்குடைந்து ரத்தம் வழிய வழிய அடி வாங்கி இருக்கிறேன் ,என்னால் என் தம்பியும் அடி வாங்கினான் .

அதில் இருந்து மீண்டு மறுபடியும் வேலை செய்தேன் .வேலை செய்யும்போதே வினை ஒன்று பக்கத்தில் வேலை செய்பவன் ரூபத்தில் இருந்தது .அவனால் மீண்டும் அந்த வேலையை உதறிவிட்டு மறுபடியும் சிறு தொழில் ஒன்றை நண்பர்களிடம் கடன் வாங்கி ஆரம்பித்து நடத்தினேன் .அதில் என் நண்பன் ஒருவனும் பங்குதாரர் .திடிரென அவன் கடையில் நான் இருந்து பார்த்துக்கொள்கிறேன் .நீ வேறு கடை பார் என்றான் .அதற்கும் தலையாட்டிவிட்டு வெளியில் வந்தேன் .

மறுபடியும் சிறிய கிராமம் ஒன்றில் கடை திறந்தேன் .அந்த கடையையும் மூடிவிட்டு நான் பார்க்க தொழிலாளியாக இருந்த ஒருவரிடம் தொழிலாளியாக சேர்ந்தேன் .அப்பொழுது நான் அடைந்த மன உளைச்சலுக்கு அளவே இல்லை .

இப்பொழுது எல்லாம் கடந்து சிறு தொழில் ஒன்றை வெற்றிக்கரமாக நடத்திக்கொண்டு வருகிறேன் .வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் சகஜம் .எப்பொழுதும் நம் மனதினை எல்லாவற்றிலும் பொருந்திகொல்லுமாறு வைத்து இருக்கவேண்டும் .முதலாளியா இருந்த நாம் வேலை பார்ப்பதற்கு சங்கடபட்டோம் என்றால் நாம் வீழ்வதை யாரும் தடுக்க முடியாது .

நம்மால் முடியாது என்பது எதுவும் இல்லை என நினையுங்கள் நம்மால் எதுவும் முடியும் .இதுவே நான் என் வாழ்வில் கற்றுக்கொண்ட பாடம் .

உங்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்