Monday 30 April 2012

காலமாற்றங்களும் இசைவட்டுக்களும் நானும்


நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு போகும் முன்பு எப்பொழுதும் போல் உணவகம் சென்றேன் .உணவருந்தி முடித்துவிட்டு அங்கிருக்கும் வை பை உபயோகபடுத்தி எனது செல்போனில் பாடல்கள் பதிவிறக்கம் செய்தேன் .முப்பத்து எட்டு பாடல்கள் ஒன்றரை மணிநேரத்தில் பதிவிறக்கம் செய்து முடித்தேன் .

காலமாற்றங்கள் மிக விநோதங்கள் கொண்டது .கிராமபோன் எனும் இசைதட்டுக்களில் ஆரம்பித்து இன்று ப்ளுரே குறுந்தகடுகளில் வந்து நிற்கிறது .



எனது சிறுவயது பாடல்கள் கேட்கும் அனுபவங்கள் இலங்கை வானொலியை சேர்ந்தே இருந்தது .அந்த வானொலி அறிவிப்பாளர்கள் பாடல் ஒளிபரப்பும் முன்பு பேசுவது அந்த தமிழ் உச்சரிப்பு இன்று கேட்க முடிவதில்லை .





எங்கள் வீட்டு ரேடியோ மிக பெரியதாக இருக்கும் .எங்கள் ரேடியோ போலவோ நான்கைந்து ரேடியோக்கள் எங்கள் கிராமத்து வீடுகளில் இருந்தது .அவை எல்லாம் மலேசியாவில் இருந்து கொண்டுவரப்பட்டவை .


வருடத்தில் கிராமங்களுக்கு இரண்டொதொரு தடவை அதிகாரிகள் வீடு தேடி வரும்பொழுது எல்லா வீட்டு ரேடியோக்களும் துணிகள் சுற்றப்பட்டு அறைகளில் ஒளித்து வைக்கப்படும் .அன்று ரெடியோக்களுக்கு லைசென்ஸ் எடுக்கவேண்டும் .அந்த ரேடியோவில் தான் குரு,திரிசூலம் போன்ற திரைப்படங்களின் ஒலிசித்திரங்கள் ஞாயிறுகளில் கேட்பது .வீட்டில் உள்ள பெண்கள் விவித பாரதியில் இரவு ஏலே முக்கால் மணிக்கு ஒலிபரப்பாகும் நாடகங்கள் கேட்பர் 




.

ரேடியோக்களுக்கு பிறகு கல்யாணவிடுகளில்,காது குத்து விழாக்களில் பெரிய இசை தட்டுக்களில் கேட்ட பாடல்கள் .எல்லா கல்யாண வீடுகளிலும் வாராயோ தோழி வாராயோ இல்லாமல் பாடல்கள் கிடையாது .பாடல் குழாய்களில் ஒலிக்கும்போது கிராமபோன் அருகே ஆள் கண்டிப்பாக அமர்ந்து இருக்கும் .சரியான வேகத்தில் சுழலா விட்டால் பாடல் வாய்க்குள் கூழாங்கற்கள் போட்டு பாடுவது போல் இருக்கும் ,அதனால மைக்செட் ஓட்டுபவர் பக்கத்திலேயே இருப்பார் .நான் அவர்களோடு அமர்ந்து அந்த பெரிய தட்டுக்களின் அட்டை படத்தில் இருக்கும் படத்தையும் பாடல் பாடியவர்கள் பெயரையும் படித்துக்கொண்டு இருப்பேன்.



இதன் பிறகுதான் கேசட் பிளேயர் வந்தது .கேசட்டுக்களில் பிடித்த பாடல் பதிந்து கேட்பது ஒரு சுகம் .ஆனால் எங்கு நல்ல பாடல்கள் கிடைக்கும் ,எங்கே நன்றாக பாடல் பதிந்து கொடுப்பார்கள் என்று தேடியலைந்து பாடல்கள் பதிந்தது இன்று நினைத்தாலும் வேடிக்கையாக இருக்கிறது .நான் பாடல்கள் பதிந்தது பெரும்பாலும் அறந்தாங்கி தாலுகா ஆபிஸ் ரோட்டில் இயங்கிய பொன்னி மியூசிக்கல் கடையில் தான் .இங்கு பதிந்த கேசட்டுக்கள் நன்றாக இருக்கும் கேட்க .ஒவ்வொரு ஊரிலும் இரண்டு மூன்று மியூசிக்கல் கடைகள் இருக்கும் .பெரும்பாலும் கடைகள் பெயர் இளையராஜா பெயர்களில் ஆரம்பித்து இருக்கும் .நிறைய கடைகள் பெயர் ராகதேவன் மியுசிக்கல்ஸ் .




 யார் வெளிநாட்டில் இருந்து வந்தாலும் DTK,SONY 60,90,120 என்ற அளவுகளில் கேசட் வாங்கி வருவார்கள் .இன்று இந்த கேசட்டுக்கள் இருக்கா என்பது தெரியவில்லை .சில நேரங்களில் ஒன் டச் கேசட் வாங்கி பதிவோம் .இந்த ஒன் டச் கேசட் பாடல் பதிந்து வெளிவந்த கேசட்டுக்கள் .

ஒரு கேசட் பதிவதற்கு பாடல் தேர்வு செய்ய ஒருவாரம் ஆகிவிடும் .நண்பர்களிடம் என்ன பாடல் நல்லா இருக்கும் என கேட்டு அம்பது பாடல் தேர்வு செய்து அதிலும் பின்பு பாடல்கள் கழித்து ஒருவழியாக கேசட் கடைக்கு சென்றால் நாம் தேர்வு செய்து வைத்து இருக்கும் பாடல்களில் சில பாடல்கள் அவரிடம் இருக்காது .மறுபடியும் பழைய லிஸ்ட்ல இருந்து சில பாடல்கள் தேர்வு செய்து கொடுத்தால் அவர் வாங்கி கொண்டு இரண்டு வாரம் சென்று வாங்கி கொள்ளுங்கள் என தேதி கொடுப்பார் ,இவ்வாறு ஒரு கேசட் பதிந்து அதை கேட்க ஒரு மாதம் ஆகிவிடும் .அந்த கேசட் வீட்டுக்கு வந்ததில் இருந்து ஒரு வாரம் வரைக்கும் திரும்ப திரும்ப ஓடிக்கொண்டு இருக்கும் .



இதன் பின்பு என் சித்தப்பா கென்வூட் காம்பாக்ட் சீடி பிளேயர் கொண்டு வந்தார் .அதில் முதன் முதலில் பாடல் கேட்க்கும்போது பாடல்களின் இசை பிரிந்து தனியாக ஒலிக்கும்போது மிக வித்தியாசமாக இருந்தது ,நான் பள்ளிக்கூடம் விட்டவுடன் போவது சித்தப்பா வீட்டுக்கு பாடல் கேட்ப்பதற்கு .

இன்றோ ஒரு இணைய இணைப்பு உள்ள செல்போன் இருந்தால் போதும் இருக்கும் இடத்தில் இருந்து விரும்பிய பாடலை இலவசமாக பதிவிறக்கம் செய்து கேட்கலாம் ,ஆனால் பாடல் தேடியலைந்து பதிந்து கேட்ட சுகம் இதில் இல்லை

Sunday 29 April 2012

முதல் பயணமும் என் முதல் வெளிநாட்டு வேலை அனுபவமும்



டேய் நான் நாளைக்கு மலேசியா போறேண்டா ,சந்தோசமும் வருத்தமுமாக நண்பனிடம் சொன்னேன் .எங்கேடா வேலையில் சேரப்போறே  என கேட்டவனிடம் தெரியலடா அங்கே போனால்தான் தெரியும் என்று சொன்னேன் .

பயணம் கிளம்பும் அன்று என் உறவினர்கள் எல்லோர் வீட்டிற்கும் சென்று பயணம் சொன்னேன் .அனைவரும் வெத்திலை பாக்கு வைத்து நூறு ரூபாய் கொடுத்தார்கள் .கூடவே பணத்தோடு சின்ன அறிவுரையும் சேர்த்தே தருவார்கள் .போகிற இடத்தில் நல்ல படியாக வேலைபார்த்து பணம் சம்பாரிக்கணும் என்று .இப்ப எல்லாம் பயணம் சொல்வதே இல்லை .எப்ப வெளிநாடு போறாங்க ,எப்ப ஊருக்கு திரும்பி வருகிறார்கள் என்பது தெரியவில்லை .காலையில் ஊர்  டீ கடையில் பார்த்தால் நேற்று வெளிநாட்டில் இருந்தவன் இன்று ஊர் கடையில் டீ குடித்துக்கொண்டு இருப்பான் .

பயணம் அன்று மாலை வீட்டில் எல்லோரிடமும் பயணம் சொல்லிவிட்டு கிளம்புமுன் அம்மா கிழக்கு பார்த்து உட்கார சொல்லி கையில் காய்ச்சிய பசும்பால் குடிக்க கொடுத்தார்கள் .இந்த பசும்பால் குடிக்கும் நிகழ்வு மட்டும் என் அம்மாவின் சந்தோசத்திற்காக நான் ஊருக்கு வந்துவிட்டு திரும்பும் ஒவ்வொருமுறையும் தொடர்கிறது .

பயணத்திற்காக எங்கள் ஊர் பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் ஒரே ஒரு பேருந்திற்காக சொந்தங்கள் சூழ நின்றிருந்தேன் என் நான்கு மாத குழந்தையை கையில் வைத்து இருந்தபடி .பேருந்து வரும் கொஞ்சநேரதிர்க்கு முன்பாக என் மகன் எனது சட்டையில் வைத்துபோக்கு ஆகிவிட்டான் .சட்டை மஞ்சள் நிறமாகி வாசம் எடுக்க ஆரம்பித்து விட்டது .இதை பார்த்த பெருசுங்க பயணத்தின்போது குழந்தை வெளிக்கு போனது உனக்கு இரணம் வந்து சேரும் கவலைபடாதே என சொன்னார்கள் .சட்டையயை அலசி மறுபடியும் போட்டுக்கொண்டு என் பயணத்தை தொடர்ந்தேன் .

முன்பு வெளிநாட்டு பயணங்கள் இன்றுபோல் திருச்சிவரை கிடையாது .சென்னை சென்றுதான் கிளம்பவேண்டும் .என் முதல் விமானபயணம் சென்னையில் இருந்து மலேசியன் ஏர்லைன்சில் கோலாலம்பூர் சென்று அடைந்தேன்  மார்ச் முப்பதாம் தேதி .இப்பொழுது இருக்கும் பிரமாண்டமான விமானநிலையம் அப்பொழுது இல்லை .அது பழைய விமானநிலையம் .

அங்கு சென்றதில் இருந்து என் உறவினர் வீட்டில் தங்கி இருந்தேன் .தினமும் அவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு தொலைக்காட்சி முன்பு அமர்ந்துவிடுவேன் .உறவினர் வேலை முடிந்து திரும்பும்போது தினமும் வேலை கிடைத்துவிட்டதா என கேட்பேன் .அவர் பொறுமையுடன் இரு என்பார் .

சரியாக பத்துநாள் கழித்து என்னை தனது மொட்டோர்சைக்கிளில் அழைத்துசென்றார் உறவினர் .ஒரு உணவகத்தின் முன்பு நிறுத்திவிட்டு என்னை உள்ளே அழைத்து சென்று உணவக மேலாளரிடம் பேசிவிட்டு என்னை உனக்கு இங்குதான் வேலை பார்த்து நடந்துக்க என சொல்லிவிட்டு சென்றார் .நானும் சரியென தலையாட்டிவிட்டு மேலாளரை பார்த்துக்கொண்டு நின்றேன் .அவர் என்னை அடுக்களைக்கு அழைத்து சென்றார் .அங்கே ஒரு இந்தோனிசியன் பெண் நின்றுகொண்டு இருந்தாள்.அவளிடம் இவர் மலாய் மொழியில் பேசிவிட்டு அவள் சொல்லுவதுபோல் வேலை செய் என என்னிடம் சொன்னார் .நானும் தலையாட்டினேன் .மொழி தெரியாத எனக்கு இவள் எப்படி சொல்லி புரியவைக்கபோகிறாள் என எண்ணிக்கொண்டு நின்றேன் .அதற்கெல்லாம் அவசியம் இல்லையென ஆகிவிட்டது அவள் செய்து காட்டியவேலை.



நான் பார்த்த முதல் வேலை என்ன தெரியுமா .எச்சில் தட்டு மங்கு கழுவுவது .இதற்க்கு எதற்கு மொழி .ஒரு நிமிடத்தில் செய்கையில் வேலையை விளக்கி சொல்லிவிட்டாள்.ஊரில் என் வீட்டில் எனக்கு ஒரு செல்லப்பெயர் இருந்தது .அவ்வபோது சொல்லும் வேலைகளை தட்டிக்கலித்துவிடுவேன்.அதனால் வேலை களவாணி என்பதுதான் அது .அப்படி சுற்றி திரிந்த எனக்கு முதல் வேலை தட்டு மங்கு கழுவுவது என்றால் எப்படி இருந்து இருக்கும் எனக்கு .சில வாரங்கள் கண்ணீரில் கழிந்தது என் நாட்கள் .

நான் முதன் முதலில் வேலை பார்த்த நாள் எது தெரியுமா .சரியாக என் பிறந்தநாளான ஏப்ரல் பத்து அன்று .என்றுமே வாழ்வில் மறக்கமுடியாத நாளாக போய்விட்டது என் முதல்நாள் வேலை அனுபவம் .

விக்ரமன் படத்தில் வருவதுபோல ஊஊஊஊஊ லாலாலாலா என ஒரே பாட்டில் வசதியாக வருவதுபோல இருந்தாள் எப்படி இருக்கும் .ஆனால் நிதர்சனம் வேறு அல்லவா .பாடுபட்டு உழைத்தால்தான் வாழ்வில் முன்னேறலாம் .முன்னேற்றப்பாதையில் சில அடிகளை கடக்க ஆரம்பம் செய்து இருக்கிறேன் நீண்டகால காத்திருப்பிக்கு பின்பு வலிகள் நிறைந்த வாழ்வில்

Saturday 28 April 2012

மெளனம்



மெளனம்
உங்களுக்கும்
எனக்கும் மட்டுமல்ல
உலகுக்கானது

ஒரு மெளனம் உடைபடும்போது
அங்கே காதல் உருவாகலாம்
ஒரு மெளனம் உடைபடும்போது
அங்கே நட்பு உருவாகலாம்

மெளனம் தராத ஒன்றை
மொழிகள் தந்துவிடுவதில்லை

ஒவ்வொரு பயனங்களோடும்
மௌனமும் சேர்ந்தே
பயணிக்கிறது

யாரும் சொல்லிதராத ஒன்றை
மெளனம் சொல்லிக்கொடுக்கிறது

அழுத பொழுதுகளை விட
மௌனித்தல் அதிகம்

Friday 27 April 2012

வயலோடு சில நினைவுகள்



எல்லோருக்குள்ளும் நினைவுகள் என்ற ஒன்றை சுமந்துகொண்டுதான் அலைகிறோம் .
வாழ்ந்து வந்த தடங்களின் தொகுப்புகளாக அவை நெஞ்சில் நிலைபெற்று இருக்கும் .
எனக்குள்ளும் சில நினைவுகளை சுமந்தே அலைகிறேன் .

நான்.., 
இன்று செய்வது ஒன்றும் அறியாமலேயே..
ஒன்றையும் செய்ய இயலாமலேயே 
உலகத்தைக் கணிணிமுன் அமர்ந்து 
வெற்றாய்ப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் .
காலமாற்றத்தில் விவசாயக்
குடும்பத்தில் பிறந்து விவசாயம் மறந்த ஒருவனாக நானும் இருக்கிறேன் .

திரும்பி வராத நாட்கள் அவை .
இன்றும் எங்கள் வீட்டிற்கு விவசாய இடங்கள் சொந்தமாய் இருந்தாலும் யாரோ அவற்றை குத்தகைக்கு விவசாயம் செய்கிறார்கள் .

காவிரி ஆற்றின் கடைநிலை விவசாயிகள் நாங்க... ,கல்லணையில் தண்ணீர் திறந்தால்..,
தண்ணீர் இரண்டு வாரம் கழித்தே எங்கள் ஊர் வந்தடையும் .


தண்ணீர் வந்தவுடன் பயிர் நெல் எடுத்து ஆற்றின் கரையோரம் மூட்டையில் ஊறவைத்து மூன்றாம் நாள் வெளியே எடுத்தால் முளைப்பயிர் விட்டு இருக்கும். அதைச் சேற்றுவயலில் நெல் பாவுவதற்கு எடுத்துச் சென்றால், அங்கே சிறு குழந்தைகள் கையில் சிறு ஓலைப் பெட்டிகள் வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருப்பார்கள் .வயலில் நெல் விதைத்து விட்டு மீதமிருக்கும் நெல்லை வந்தவர்களுக்கு இரண்டு கைவீதம் போடுவார்கள் .வாங்கிய சிறுவர்கள் நெல் பாவும் ஒவ்வொரு வயலாக தேடிச்சென்று நெல் வாங்குவார்கள் .
மாலையில் அந்த நெல் வறுத்தெடுக்கப்பட்டு..
நெல்குத்தி .., அவலாக மாறியிருக்கும் .
இன்று வயலுக்கு
செல்லும் குழந்தைகளையும் .அவல் குத்தி எடுக்க அம்மாக்களையும் காணோம் .

குருநெல் ..,பெருநெல் என நெல்வயதுக்கு தகுந்து நெல் பாவி, நாற்று பறிக்கும் ,நாற்று எடுக்கும் நாளும் மாறுபடும் .நாற்றங்காலில் வயல் நிறைய ஆண்களும் பெண்களுமாக நிறையப்பேர் அமர்ந்து பறிப்பார்கள் ..
சிலர் அதிவேகமாகப் பறிப்பார்கள் .
அவர்கள் பறிப்பதைப் பார்க்கவே ஆசையாக இருக்கும் 
நூறு நாற்று முடிகள் கொண்டது ஒரு கட்டு .
ஒரு கட்டு பறிக்க அன்று ஒரு ரூபாய் மட்டுமே ..

இவ்வாறு ஒரு இடத்தில் பறித்து நாற்றுகள் வேறு ஒரு இடத்தில் இருக்கும் வயலுக்கு கொண்டு போகப்படும் .இன்று வயல் நிறைய குவிந்து நாற்று பறித்தெடுக்கும் ஆட்களை காணோம் .காண்ட்ராக்ட் பறியல் என்று சொல்லி குழுவாக பறிக்கிறார்கள் .அதற்கும் ஆள் கிடைப்பதே இன்று சிரமமாக இருக்கிறது .

இனி நாற்று நடுவது குறித்து பார்ப்போம்
நாற்று நடுவதற்கு கங்காணிகளிடம் சொன்னால் போதும் அவர்களுக்கு ஒவ்வொரு வயலும் எத்தனை மா என கணக்கு தெரியும் .
அவர்கள் அதற்குத் தகுந்த மாதிரி இத்தனை ஆட்கள் வேண்டும் எனக் கேட்பார்கள் .நாம் அவற்றில் ஓரிரண்டு ஆட்களைப் பேசி குறைத்துக்கொள்ளலாம் .
பேசியபடி சரியாக வயலுக்கு வந்துவிடுவார்கள் .


எங்கள் வீட்டு நடவுக்கு எங்க அம்மா சொல்வது 
கோயிந்தி அக்கா அல்லது அம்மணி அக்கா இந்த இருவரிடமும்தான்.
இதில் கோயிந்தி அக்காவிடம் காசு என்று சொல்லச் சொன்னால் சொல்லாது .
சல்லி என்று தான், தான் இறக்கும் வரை சொல்லியது .
ஏன் என்றால் அக்காவின் கணவர் பெயர் காசி .
இந்த கோயிந்தி அக்கா தன் வீட்டின் பின்புறம் நின்ற புளியமரத்தில் தூக்கு போட்டு இறந்து விட்டது .
அம்மணி அக்கா இன்னும் இருக்கிறது ,நடை தளர்ந்து வயோதிகத்தின் இறுதி நாட்களில் இருக்கிறது.
ஊருக்குச் சென்று இருக்கும்போது பார்த்துவிட்டு வந்தேன் .



நாற்று நடுவதற்கு வயதான பெண்கள் மட்டும் அல்ல 
இளம் பெண்களும் கலந்தே வந்து இருப்பார்கள் .
நாற்று நடும் முன்பு ரோட்டோர வயல் என்றால் 
முதல் வேலையாக ஒரு நாற்றுமுடியை ரோட்டின் நடுவே வைத்துவிடுவார்கள் .


அதன் பின்பு வயதில் பெரியவர் ஒருவர் 
முதல் நாற்று நடுவார் .

அதன் பின்பு எல்லோரும் நாற்று நட ஆரம்பிப்பார்கள். நாற்று நடும்போது, 
ரோட்டில் ஒரு கண் வைத்தே நடுவார்கள் .
யாராவது ..,நடந்தோ சைக்கிளிலோ ,
ஒரு சிலர் மோட்டார் பைக்கிலோ வருவது தெரிந்தால் ஒன்று சேர்ந்தாற்போல் குலவையிட்டு பாடுவார்கள். வருபவர்கள் காசுகளை நாற்று முடி அருகில் போட்டு செல்வார்கள் .

இன்று யார் குலவையிட்டு பாடுறாங்க ..???
ஒருத்தரும் இல்லை .
நான் என் தம்பி ,என் அண்ணன் எல்லோரும் 
நாற்று விளம்பிக் கொடுத்துக்கொண்டு இருப்போம் .
நாற்று விளம்பும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக 
தள்ளி நின்று விளம்புவோம் .
அப்படி இருந்தாலும் கூட நம்மைச் சுற்றி 
நாற்று நட்டு விடுவார்கள் .
அப்படி நட்டு விட்டால் பணம் குடுக்காமல் வெளியாக முடியாது .
நாங்க மாமன் மச்சான் கிடையாதுதான்..,
நாற்று நடும் பெண்களுக்கு ...
இருந்தாலும், ஒரு அன்பால் சுற்றி நடுவார்கள் .
இப்பொழுது யார் இருக்கா ..??
நம்மைச் சுற்றி நாற்று நடுவதற்கும்..??
நாம் விவசாயம் பார்ப்பதற்கும்..?? .

என் வம்சத்தில் இனி வரும் குழந்தைகளுக்கு மியூசியத்தில் கொண்டுபோய் காட்டும் நிலை வரலாம் விவசாயம் என்று ஒன்று இருந்தது என..

இன்றும்.. 
எனக்கு மட்டுமல்லாது, 
ஊருக்கே சோறு போட்ட என வயலை நினைக்கிறேன் ..நாம் மறந்துவிட்ட விவசாயத்தை நினைக்கிறேன் ..
என் கண்கள் நீரினால் நிறைகிறது .. 
கணிணி முன் அமர்ந்து இதுகுறித்து கவலைப்படுவதுவும் .. கண்ணீர் விடுவதும் தவிர்த்து எனக்கு வேறு எதுவும் தெரியவில்லை 

ஆனா உறுதியாச் சொல்றேன் . 
ஒரு நா வரும்... 
அன்று உடுக்க உடை இருக்கலாம் 
வசிக்க ..மாட மாளிகைகள் இருக்கலாம் .. 
ஆனா உண்ணச் சோறிருககாது..
இதுதான் சாவடிக்கும் உண்மை.. என் மக்கா...!!!

Thursday 26 April 2012

புத்தகங்கள் என் வாழ்க்கையோடு......




நான் எப்படி புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தேன் யோசிக்கும்போது  ஆச்சரியமாக இருக்கிறது .இன்றும் கூட தினசரி பத்திரிக்கைகள் மாலையில் தான் வந்து சேரும் கடைகோடி கிராமத்தில் உள்ள நான் எப்படி வாசிப்பு பழக்கத்திற்கு ஆளானேன் .




என் முதல் வாசிப்பு எதுவென யோசிக்கையில் தினத்தந்தி பத்திரிக்கையின் கன்னித்தீவு படக்கதையே நினைவுக்கு வருகிறது .இன்றும் கூட சிந்துபாத் லைலாவை தேடி நீண்ட பயணம் மேற்கொண்டு இருப்பார் ,அந்த முடிவுறா பயணம் போலவே என் புத்தகங்கள் வாசிப்பும் .




அதற்க்கு அடுத்து காமிக்ஸ் புத்தகங்கள் .முத்து காமிக்ஸ் ,லயன் காமிக்ஸ் ,ராணி காமிக்ஸ் என் எல்லா காமிக்ஸ் புத்தகங்களும் அடங்கும் .அதில் வரும் கதாபாத்திரங்கள் ஜேம்ஸ்பாண்ட் ,ஆர்ச்சி ,ஸ்பைடர் மேன்,இரும்புக்கை மாயாவி என அந்த உலகம் எனக்குள் எப்பொழுதும் உலவிக்கொண்டே இருந்தது .




என் பள்ளி நண்பர்கள் நாலைந்து பேர் சேர்ந்து வாங்குவோம் ,சில நேரங்களில் என் நண்பன் திருக்குமரன் [இவன்  இன்று இவ்வுலகில் இல்லை ] மட்டும் வாங்குவான் .அதே நேரத்தில் இன்னொரு நண்பன் விநாயகமூர்த்தி அம்புலி மாமா கொண்டு வருவான் ,அவன் அப்பா ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் ,பள்ளிக்கு வரும் புத்தகம் அது .






நான் படித்த முதல் நாவல் யவன ராணி சாண்டில்யன் எழுதியது .என் அண்ணன் நூலகத்தில் உறுப்பினராக இருந்தார் ,அவர் வாங்கி வரும் புத்தகம் எல்லாம் விளங்கியும் விளங்காமலும் படித்து முடித்துவிடுவேன் .இதே சமயங்களில் என் நண்பன் சங்கர் வீட்டில் குமுதம் வாங்குவார்கள் [இவனும் இன்று இவ்வுலகில் இல்லை ]சங்கர் அப்பா எங்கள் ஊரின் போஸ்ட் மாஸ்டர் .குமுதம் வந்தவுடன் நாங்கள் பார்ப்பது முதலில் ஆறு வித்தியாசம் .அதன் பின்பே மற்றதெல்லாம் .குமுதத்தில் தான் எனக்கு அறிமுகம் ஆனார் எழுத்தாளர் சுஜாதா அவரின் விக்ரம் திரைப்பட தொடர் மூலம் .




ஸ்டெல்லா அக்கா மறக்க முடியாதவர்கள் .இவர் நூலக கண்காணிப்பாளர் [வேறு எப்படி சொல்வது என தெரியவில்லை ]என்னை நூலக உறுப்பினராக்கி என்ன என்ன புத்தகங்கள் படிக்கலாம் என சொல்லிகொடுப்பார்கள் .அவர்கள் மூலம் என் வாசிப்பும் கொஞ்சம் விரிவடைந்து இருந்தது .




நான் முதன் முதலில் காசு கொடுத்து வாங்கிய நாவல் இன்னும் நினைவில் இருக்கிறது .ராஜேஷ் குமார் எழுதிய நந்தினி நானுற்றி நாற்பது வோல்டேஜ் கிரைம் நாவலில் வந்தது .அதன் பின்பு சுபா தொடர்ச்சியாக எழுதிய சூப்பர் நாவல் [இந்த நாவலின் அட்டை படம் அன்று எடுத்தவர் இன்று பிரபல ஒளிப்பதிவாளர் இயக்குனர் கே வி ஆனந்த்] இந்த இதழில் வந்த ஒரு கதைதான் ஆனந்த் எடுத்த முதல் படம் கனாக்கண்டேன் என வந்தது .








அப்புறம் பட்டுகோட்டை பிரபாகர் தொடர்சியாக எழுதிய உல்லாச ஊஞ்சல்,பாலகுமாரன் எழுதிய பல்சுவை நாவல் ,தேவிபாலா எழுதிய குடும்ப நாவல் ,ரமணி சந்திரன் எழுதிய நாவல் என எல்லா புத்தகங்களும் .
ஆனந்த விகடன் ,குமுதம் ,வண்ணத்திரை ,கல்கண்டு ,முத்தாரம் என கலவையாக புத்தகங்கள் வாங்கினேன் .என் அம்மா இப்படி புத்தகம் படிக்கா படிப்பு வராது என சத்தம் போடுவார்கள் .அதே போல மேல்நிலை பள்ளி யோடு என் படிப்பும் முடிந்தது .








இன்று இலக்கிய எழுத்தாளர்களோடு எல்லாவிதமான புத்தகங்களும் படிக்கிறேன் .சுந்தரராமசாமி யின் ஒரு புளியமரத்தின் கதை ,ஜே ஜே சில குறிப்புகள் ,ஜெயமோகன் ,எஸ் ராமகிருஷ்ணன் ,வண்ணநிலவன் ,கலாப்ரியா ,மேலாண்மை பொன்னுசாமி ,இன்னும் யார் யாரெல்லாமோ .இணையத்தில் நிறைய ப்ளாக் படிக்கிறேன்.




இதுதான் என இல்லை ,என்னால் எதையும் படிக்க முடிகிறது .இலக்கியம் மட்டுமே அல்ல எல்லாமும் படிக்கவேண்டும் ,அதுவே என் ஆசை.

Wednesday 25 April 2012

நொண்டி அண்ணன்




தலைப்பு பார்த்துவிட்டு தலையை சொரிந்துகொல்லாதீர்கள் .நான் உங்களை அறுத்தெடுக்க போவதில்லை .இது ஒரு மனிதன் பற்றிய கதை அல்ல .என் வீட்டில் பால் கறக்கும் பசுமாடுகள் இல்லாமல் போனதற்கு நொண்டி அண்ணனும் ஒரு காரணம் .அதுதான் நொண்டி அண்ணன் என தலைப்பு .
நொண்டி அண்ணன் எனக்கு விவரம் தெரியும்போதே அப்படித்தான் அழைக்கபட்டுக்கொண்டு இருந்தார் .எங்கள் ஊரில் எல்லோருக்குமே அவர் நொண்டி அண்ணன் தான் .அவரின் உண்மையான பெயர் அவரின் குடும்பத்தார் அறிவார்களோ என்பதே சந்தேகம்தான்.

நொண்டி அண்ணன் மிக ஒல்லியாக ஒரு நாற்பது கிலோ தாண்டதவராய் இருப்பார் .அழுக்கடைந்த கைலி ஒரு மேல் துண்டு ஒரு நீண்ட வழவழப்பான கம்பு ஒன்று ,அழுக்கடைந்த உடம்பு முள்ளு முள்ளாய் அங்கொன்றும் இங்கொன்றும் நீட்டிக்கொண்டு இருக்கும் தாடி ,மஞ்சள் பல்வரிசை இப்படியாக இருப்பார் அவர் .அவர் நடக்கும்போது ஒரு கால் லேசாக விந்தி நடப்பார் .ஒரு கை எப்பொழும் மடங்கிய நிலையில் இருக்கும் .இதனாலேயே அவர் நொண்டி அண்ணன் என அழைக்கபட்டார் .


நொண்டி அண்ணனுக்கு எல்லோரையுமே தம்பி அல்லது தங்கச்சி என அழைக்கும் .அவர் அவர்கள் வீட்டில் உள்ள மாடுகளை மேய்ச்சலுக்கு ஒட்டி செல்வார் .அவங்க வீட்டில் மாடுகள் நிறைய இருக்கும் .அண்ணன் மாடு ஒட்டிவருவதே அழகாக இருக்கும் .அண்ணன் வருவது நடையும் இல்லாமல் ஓட்டமும் இல்லாமல் இரண்டிற்கும் இடையில் தொங்கோட்டமாக ஓடி வரும் .அவர்கள் மாட்டோடு எங்கள் வீட்டு மாடும் இன்னும் பத்துக்கு மேற்ப்பட்ட குடும்பங்களின் மாடுகளை மேய்க்கும் .அவங்க வீட்டில் கிளம்பும்போது இருந்த இருபது மாடுகள் எங்கள் வீட்டை கடக்கும்போது நூறு மாடுகளை தாண்டி மந்தையாக மாடுகளை ஒட்டி செல்லும் .எல்லா மாடுகளுக்கும் அது பேர் வைத்து இருக்கும் .கிடாரி,செவலை,வெள்ளை என அது மாடுகளை அதட்டும்போது பார்க்கும் நமக்கு ஆச்சரியமாக இருக்கும் .அது பேர் சொல்லி கூப்பிடும் மாடு அண்ணனை திரும்பி பார்க்கும் .மந்தையில் போகும் எல்லா பசுவுக்கும் ஏதோ ஒரு பெயர் இருக்கும் .எங்கள் வீட்டின் ஒரு பசுவுக்கு அது வைத்து இருந்த பெயர் இன்னும் என் நினைவில் இருக்கு .அந்த பெயர் சின்ன கிடாரி .காலையில் எங்கள் வீட்டு மாடு சத்தம் போட்டது என்றால் மணி பத்தரை என்று அர்த்தம் .அந்த நேரம்தான் அண்ணன் மாடு மேய்க்க வெளியாகும் நேரம் .


மாலையில் மாடுகளை திரும்ப ஒட்டிக்கொண்டு வரும் .மணி சரியாக ஐந்தரை ஆகி இருக்கும் .அண்ணன் அவர்கள் வீட்டிற்கு சென்று மாடுகளை கட்டிவிட்டு முகம் கழுவிவிட்டு நேராக எங்கள் வீட்டிலோ அல்லது எங்கள் உறவினர்கள் வீட்டு வாசலிலோ நின்றுகொண்டு தங்கச்சி என அழைக்கும் .ஒரு மாடு மேய்ப்பதர்க்கு மாதம் ஒன்றுக்கு மூன்று ருபாய் வாங்கும் .எங்கள் வீட்டில் பசுக்கள் கன்றுக்குட்டி என எழு மாடுகள் .இதேபோல மற்ற வீடுகளிலும் இருக்கும் .என் அம்மா வந்தவுடன் பணம் குடுக்க மாட்டாங்க .தங்கச்சி தங்கச்சி என கெஞ்சிக்கொண்டு இருக்கும் .நொண்டி அண்ணன் பணம் வாங்குவது குடிப்பதற்காக .

என் அம்மா நான் காசு கொடுத்தா நீ குடிக்க போயிடுவே என்று சொல்வாங்க .இருந்தும் கெஞ்சி வாங்கி விடும் ஐந்து ரூபாயாவது .திரும்பி போகும்போது என் அம்மாவிடம் தங்கவிலாஸ் புகையிலை கொஞ்சம் குடு என்று அதையும் வாங்கி வாயில் அதக்கிகொண்டு போகும் .ஒரு பாக்கெட் சாராயம் நான்கு ருபாய் என நினைவு எனக்கு .எப்படியும் இரண்டு பாக்கெட் சாராயத்திற்கு பணம் சேர்த்துக்கொண்டு போகும் .என் அம்மா மாதம் முடிந்து அண்ணனிடம் கணக்கு சொல்லும் வாங்கிய பணத்திற்கு .இரண்டு மடங்கு கூடுதலாக பணம் வாங்கி இருப்பார் .என் அம்மா இந்த மாதம் பணம் கிடையாது என்று சொல்லி அனுப்பினாலும் மறுநாள் எங்கள் வீட்டின் முன் நிற்பார் .


நொண்டி அண்ணனுக்கு கல்யாணம் நடந்தது என்று சொல்வார்கள் .ஆனால் அந்த பெண் அவரோடு வாழவில்லை .அதை எல்லாம் எழுதினால் ஒரு கிளை கதை எழுதலாம் .நொண்டி அண்ணனை வருடத்தில் ஒரு நாள் புத்தம் புது மனிதனாக பார்க்கலாம் .அந்த நாள் மாட்டுப்பொங்கல் .புதிய கைலி புது சட்டை புது துணி ,ஷேவ் செய்த முகம் என வித்தியாசமாக இருக்கும் .பொங்கல் கடையில் மாடுகள் கூடும் வரை ஒவ்வொரு மாடாக பார்த்துகொண்டு வரும் .அன்று அது முகத்தில் அவ்வளவு சந்தோசம் இருக்கும் .மாடுகள் மட்டுமே என தன் வாழ்வை மரணம் எட்டும்வரை வாழ்ந்தவர் அவர் .


இன்று எங்கள் வீட்டில் ஒரு பசுமாடு கூட இல்லை .வயல்காடுகள் குத்தகைக்கு விட்டதால் உழவுமாடும் இல்லை .என் வீட்டை போன்றே என் உறவினர்கள் வீடுகளிலும் இல்லை பத்து வருடங்களுக்கு மேலாக .நொண்டி அண்ணன் ஒருவர் மட்டுமே இறக்கவில்லை .அவர் இறந்தவுடன் அவர் சொல்லுக்கு கட்டுப்பட்ட அத்தனை மாடுகளும் தங்கள் வாழ்வை தொலைத்து காணமல் போய்விட்டன .இன்று அந்த மாடுகள் அடி மாடுகளாய் போனவா இல்லை மூப்பெய்தி இறந்து போனவா என்பது தெரியவில்லை .ஒரு மனிதன் இறப்புக்கு பின் ஒரு நூறு மாடுகளின் வாழ்வும் காணமல் போனது