Friday, 20 December 2013

வெங்கட் பிரபு சமைத்த பிரியாணி- சாப்பாடு திருப்தி......ஏவ்வ்வ்வ்வ்வ்வ்......மதியம் ரெண்டுமணிக்கு பின்பே பேஸ்புக்கில் பிரியாணி படம் வெளியானதே தெரியும் .இன்னைக்கு வெள்ளிக்கிழமை என்பதால் எப்போதும்போல பிரியாணி சாப்டுவிட்டு பேஸ்புக் பார்த்தபோதுதான் திரை அரங்கிலும் கண்ணுக்கும் காதுக்கும் பிரியாணி விருந்து இருக்கு என்பது தெரிந்து அவசர அவசரமா மூணுமணி காட்சிக்கு ஓடினேன் .டிக்கெட்டும் கிடைச்சு படமும் பார்த்து இதோ அதைப்பற்றி என் மடிக்கணினி மூலம் உங்களிடம் சொல்ல வரேன் .

ஒவ்வொரு இயக்குனரும் ஒவ்வொரு பாணியில் படத்தை இயக்குவார்கள் .வெங்கட் பிரபுவோ எதைப்பற்றியும் கவலை இல்லாமல் ,திரைக்கதையில் மெனக்கெடாமல் ,ஒரே ஆர்டரில் படம் எடுக்காமல் போகிற போக்கில் கதை சொல்லி வெற்றி ஏற்றதுபோல இந்த படத்திலும் வெற்றி பெற்று இருக்கிறார் .

கதை என இடைவேளை வரை எதுவுமே இல்லை .படம் பாட்டுக்கு ஓடிகிட்டு இருக்கு .திரை அரங்கில் இடைவேளை சிரிச்சுகிட்டே இருந்தாங்க .நானும் சிரிச்சுகிட்டே இருந்தேன் .கதைக்குள் போகாமல் முதல்பகுதியை சிரிப்பாகவே நகர்த்தி விட்டார் .

கதை இடைவேளைக்கு பத்து நிமிடம் முன்பு ஆரம்பிக்கிறது .ஆம்புருக்கு கடை திறப்பு விழாவிற்கு வந்து விட்டு இரவு பார்ட்டியில் மது அருந்தி திரும்பும் வழியில் கார்த்திக் பிரியாணி சாப்பிடவேண்டும் என்கிறார் .எப்பொழுது மது அருந்தினாலும் அதற்க்கு சைட் டிஷ் பிரியாணிதான் சாப்டுவேன் என பிரியாணிக்கு பேர் போன ஆம்பூரில் பிரியாணி கடை தேடி அலைந்து ஒரு கடையில் சாப்பிடுகிறார்கள் .அப்ப அங்கே அழகிய இளம்பெண் ஒருவரும் வந்து சாப்பிட்டுவிட்டு செல்கிறார் .அவரை பின்தொடர்ந்து கார்த்திக்கும் ,பிரேம்ஜியும் செல்ல பின்பு அந்த பெண்ணோடு தங்கி மது அருந்துகிறார்கள் .காலையில் அதிகப்படியான போதையில் கார்த்திக் மட்டும் காரில் இருக்க பின்பு இரவு தங்கிய ஹோட்டலுக்கு பிரேம்ஜியை தேடி போக அங்கெ ஒரு துப்பாக்கியும் ரத்த கரைகளும் இருக்க அங்கே இருந்து இருவரும் தப்பிக்க தங்கள் காரிலேயே நாசரின் பிணம் இருக்க அந்த கொலைப்பலியில் இருந்து எப்படி தப்பிக்கிறாங்க என அதிரிபுதிரியாக சொல்லி இருக்காங்க .

படத்தின் கடைசிவரை யார் கொலையாளி என்பது தெரியாமல் படத்தை நகர்த்தி இருக்கின்றார் வெங்கட் பிரபு .கொலையாளி யார் என்பது தெரியாமல் என்ன படத்தை முடிக்கபோறாங்க என நினைக்கும்போது கடைசிக்காட்சியில் முடிச்சு அவிழும்போது அட இவரா வில்லன் என தோன்றுகிறது .இதே போல நிறைய படங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் தமிழுக்கு வித்தியாசமா இருக்கு .இன்னும் ரெண்டுநாளில் இது இந்த படத்தின் அப்பட்டமான காப்பி என யாரேனும் சொல்லக்கூடும் .அதையெல்லாம் கண்டுக்காம படம் பாருங்க போரடிக்காமல் போகும் .

கார்த்திக்கு இந்த படமும் ஓடாமல் இருந்து இருந்தால் அப்புறம் எல்லா படமும் பனால்தான் .தப்பித்து விட்டார் .சண்டை காட்சிகளில் நன்றாக உழைத்து இருக்கின்றார் .நன்றாக சண்டை அமைக்கபட்டு இருக்கு .கொஞ்சம் நடிக்கவும் செய்து இருக்கின்றார் .
ஹன்சிகாவுக்கு கதாநாயகி அதிகபட்சமா என்ன செய்வாரோ அதுவே இப்படத்திலும் .
பிரேம்ஜிக்கு நடிக்கவே வரவில்லை என்றாலும் ஏனோ சிரிப்பு வருவதை தடுக்கமுடியவில்லை .கதாநாயகனுக்கு இணையாக படம் முழுதும் வருகின்றார் .உபயம் அண்ணன் இயக்குனர் .

ஏகப்பட்ட நடிகர்கள் நடிச்சு இருக்காங்க .இவ்வளவு போரையும் வேலை வாங்கி இருக்கார் .ஒவ்வொரு சீனில் யார் தலைகாட்டினாலும் அந்த இடத்திற்கு அவர்கள் தேவையாக இருக்கு .
உமா ரியாஜ் சண்டை எல்லாம் போட்டு நடிச்சு இருக்கார் .சமீப காலங்களில் இந்த அளவுக்கு சண்டை போட்டு நடித்த பெண் யாரும் இருக்காங்களா என தெரியவில்லை .
இசை யுவன் .நன்றாக இருக்கு .
ஒளிப்பதிவும் ஓகே .சண்டைகாட்சிகளும் ஓகே .
படத்தில் நடித்து இருக்கும் நடிகர்களின் ஒரிஜினல் பெயர்கள் வேறு கதாபாத்திரங்களுக்கு சூட்டபட்டு இருக்கு .இது யதார்த்தமா அமைந்ததா அல்லது இயக்குனர் யோசித்ததா என தெரியவில்லை .

சின்ன சின்ன ஐடியாக்களால் படம் முழுவதும் தோரணமாக கோர்த்து ரசிக்கும் விதமாக படம் இயக்கி இருக்கின்றார் வெங்கட் பிரபு.

காமடியும் ,அதிரி ஆக்சனும் கலந்த படமாக வந்து இருக்கு பிரியாணி .

பிரியாணி சீரகசம்பா பிரியாணி .முழு ப்ளேட் சாப்ட்ட திருப்தி .

Saturday, 2 November 2013

அமர்க்களமான, அட்டகாசமான “ஆரம்பம்”


அஜீத் ரசிகர்களுக்கு இது தல தீபாவளிதான் சந்தேகமே இல்லை .யார் சொல்வதையும் கேக்காமல் திரைஅரங்கில் சென்று விசில் அடிச்சு கொண்டாடலாம் அஜீத் ரசிகர்கள் .

நேற்று என்னால் படம் பார்க்கமுடியவில்லை அதனால பேஸ்புக்கில் வந்த விமர்சனங்களை படித்துக்கொண்டு இருந்தேன் .அப்ப்பப்பா இவர்களின் விமர்சன பார்வையை என்ன சொல்வது .ஆங்கில பட காப்பி .முக்கால்வாசி படத்துக்கு பின்பு சரி இல்லை .நயன்தார செத்து போகிறார் என கதை கதையா அடிச்சு விட்டத படித்தபோது எனக்கே திரை அரங்கம் செல்வோமா வேணாமா என ஒரு குழப்பம் வந்துவிட்டது .

இது உலகப்படம் இல்லை லாஜிக் மேஜிக் எல்லாம் பார்த்து எடுக்க .அஜித் ஆர்யா எனும் இரண்டு குதிரைகளுக்கு சரியான தீனி போடவேண்டும் .அதை இயக்குனர் சரியாகவே செய்து இருக்கார் .

கதை நாம எப்பவும் செய்திகளில் பார்க்கும் படிக்கும் ஊழல் ,பேரம் பேசுதல்தான் கதை .எல்லா காலங்களிலும் இதை ஒட்டி எடுக்கப்படும் படம் வந்துகிட்டே இருக்கு .அதுனால கதை பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை .இங்க நிறைய பேர் கதை எழுதிக்கிட்டு இருக்காங்க அதுனால அது வேணாம் .


 

அஜீத் நடிப்பைப்பற்றி எப்பொழுதும் இப்படி விமர்சனம் வரும் நடந்துகிட்டே இருக்கார் என .இதிலும் அப்படித்தான் ஆனால் ரசிக்கும்படி நடக்கிறார் .சில இடங்களில் அவர் வசனம் பேசும்போது அஜித் ரசிகர்களுக்கு தன்னையறியாமல் விசில் அடிக்க வரும் .
ஆர்யாவுக்கு இடம் கொடுத்து நடித்து இருக்கிறார் .இது பெரிய விஷயம் .

ஆர்யா மிக சரியாக பொருந்தி போகிறார் அவரது கதாபாத்திரத்துக்கு .இரண்டு ஹீரோ ஒன்றாக பயணிக்கும்போது அது உருத்தக்கூடாது.அஜித் ஆர்யாவை நடிக்க விட்டு வேடிக்கை பார்ப்பதால் கிடைக்கும் கேப்களில் ஸ்கோர் செய்துவிடுகிறார் .


நயன்தாரா முகம் பார்க்க முடியவில்லை முதிர்ச்சி தெரிகிறது என நேற்று நிறையப்பேர் எழுதி இருந்தாங்க .அது என்னங்க ஆங்கில படங்களில் நடிக்கும் நடிகைகளை புகழும்போது அவர்கள் வயது மட்டும் தெரியவில்லை இவர்களுக்கு .நாற்ப்பது வயதுக்குமேல் இருக்கும் ஆங்கிலப்பட நடிகைகளுக்கு .நன்றாகவே அஜீத் ஆர்யா இருவரோடும் சேர்ந்து நடித்து இருக்கின்றார் .

படத்தின் ஒளிப்பதிவு ,இசை இரண்டும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது .ஏழு புள்ளி ஒன்று டிஜிட்டல் சிஸ்டம் உள்ள திரை அரங்கில் பார்த்தேன் .மிக துல்லியமாக இருந்தது சவுண்ட் .யுவன் நன்றாக பின்னணி இசை அமைத்து இருக்கின்றார் .

ஒளிப்பதிவில் மெனக்கெடல் தெறிகிறது .சண்டைக்காட்சிகள் அஜித் ரசிகர்களுக்கு விருந்து .

கிளைமாக்ஸ் காட்சி கொஞ்சம் நாடகதன்மைதான் இருந்தும் அங்கே அஜீத் இருப்பதால் ஒன்றும் தெரியவில்லை .

எனக்கு திரைக்கதை பற்றி எல்லாம் தெரியாது அதைப்பற்றி பேச .என்னை திரை அரங்கில் கடைசிவரை உக்காரவைக்கிறதா என மட்டுமே பார்ப்பேன் .அப்படி பார்க்கும்போது கடைசிகாட்சி வரை ரசிக்க முடியும் .

மொத்தம் திரை அரங்கம் சென்று பாருங்கள் .

ஆரம்பம் முதல் முடிவரை அமர்க்களமாய் இருக்கும் உங்களுக்கு

Monday, 30 September 2013

ராஜா ராணி


ஒரு கல்யாணம்.ரென்டு காதல்.ஒரு முடிவு.
படம் தொடக்கமே எங்கோ வெறித்து பார்த்தபடி ஆர்யா நயன்தாரா இருக்க அவர்கள் இருவருமே மனதளவில் ஒப்புதல் இல்லாமல் கல்யாணம் நடக்கிறது அவர்கள் இருவருக்கும்.
முதலிரவு தொடங்கி ஒருவரை ஒருவர் வெறுத்து ஒதுங்குவதுமாக இருக்கின்றார்கள்.ஆர்யாவின் செயல்களால் மனம் உடைந்து அழும்போது நயன்தாராவுக்கு முடியாமல் வந்துவிடுகிறது.ஆர்யா நயன்தாராவை மருத்துவமனையில் சேர்க்கிறார்.பின்பு இதற்க்கு முன்பு உங்களுக்கு இது போல நடந்து இருக்கா என கேக்கும்போது அங்கே தொடங்குகிறது ஜெய்க்கும் நயந்தாராவுக்குமான கதை.மிக அழகியழோடு படமாக்கப்பட்ட காதல் கதை.அதை நான் இங்கே சொல்ல போவது இல்லை.திரையில் பாருங்கள்.நயந்தாரா அழகாகவும் அதே அளவு நடிப்புமாக கலக்கி இருக்கின்றார்.ஜெய்யும் நடிப்பில் அசத்தி இருக்கின்றார்.இவர்கள் இருவருக்குமான கதையில் மிக அழகாக பொருந்தகூடிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நயன்ந்தாரா அப்பாவாக.மொத்தத்தில் ஒரு சிறந்த சிறுகதை படத்தின் முதல் பகுதி.


படத்தின் இரன்டாம் பகுதியும் காதல் கதைதான்.நஸ்ரியாவின் துள்ளல் நடிப்பும் ஆர்யாவின் நடிப்பும் நன்றாக இருக்கு .முதல் பகுதி போல இரண்டாம் பகுதி வேகம் இல்லையெனினும் நஸ்ரியாவின் சிரிப்பும் ,இடை இடையே சந்தானம் கோஸ்ட்டி அடிக்கும் கூத்துமாக நகர்கிறது.
இந்த இரண்டு காதலின் முடிவும் ஒரு தோல்வியில் முடிந்து ஒரு கல்யாணத்தல் இனைந்து இருவரும் ஒன்றமுடியாமல் இருப்பதும் பின்னர் இனைவதும் கதை.

க்லைமாக்ஸில் ஜெய் திரும்ப வருவதும் ஆர்யாவிடம் பேசும் அந்த நாலுவரி வசனமும் படத்தின் திருப்புமுனை என இயக்குனர் நினைத்து இருந்தாலும் அது எரிச்சலையே தருகிறது.
நயன்ந்தாரா,நஸ்ரியா இருவரும் முழுப்படத்தையும் தாங்குகிறார்கள்.மற்றபடி படம் நிச்சயம் திரை அரங்கில் பார்க்கலாம்.


அட்லீக்கு முதல்படம் இது.நல்ல இயக்கம்.அடுத்த படம் நிச்சயம் இதைவிட நன்றாக தருவார் எனம் நம்பிக்கை தருகிறது இந்த படம்.இசை வழக்கம் போல. ஒளிப்பதிவு அருமையா இருக்கு.
படத்தின் சின்ன சின்ன காட்சிகலாக செதுக்கி நன்றாக இருக்கு.சில காட்சிகள் மனதில் நிற்க்கும்.
திரை அரங்கம் சென்று பாருங்கள்.
ராஜா ராணிக்கு ராணி ராஜாவுக்கு

Saturday, 7 September 2013

வருத்தம் மறந்து சிரிக்க வைக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம்ஒரு படம் உங்களை என்ன செய்யனம்.கவலைகள் மறக்கடிக்க செய்யனும்.அதை நன்றாகவே இந்த படம் செய்கிறது.

கதையெல்லாம் நான் சொல்ல தேவையும் இல்லை ,அப்படி ஒன்றும் புதுமையான கதையும் இல்லை.லாஜிக் ,மேஜிக்,திடிர் திருப்பம் என எதுவுமே இல்லை.ஆனாலும் படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும்வரை சிரித்துக்கொண்டே இருக்க முடிகிறது.

சிவகார்த்திகேயன்,பரோட்டா சூரி இருவரும் செய்யும் அதகளமே தியேட்டரை அதிர செய்கிறது.படம் பார்த்துக்கொண்டு இருந்த அனைவருமே சிரித்ததை பார்த்தேன்.

சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் மனநிலை நன்றாக தெரிந்து இருக்கிறது.தனக்கு என்ன வரும் என்பதை உணர்ந்து நடித்து இருக்கிறார்.அவர் பேச ஆரம்பித்தாலே நாம் சிரிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.பக்கபலமாக சூரி வேறு இருக்கிறார்.வானவேடிக்கை நடத்தி இருக்கின்றனர்.வடிவேலு பார்த்திபன் போல சிவகார்த்திகேயன் சூரி இருவரையும் சொல்லலாம்.
கதாநாயகி புதுமுகம் போலருக்கு.பக்கத்து வீட்டு பெண்ணைப்போல இருக்கிறார்,நன்றாக நடித்தும் இருக்கிறார்.


சத்தியராஜ் அறிமுக காட்சியில் கைது செய்யப்படும்போது சீரியசாக நினைத்து பார்க்க ஆரம்பித்தால் கடைசியில் அதுவும் காமடியிலேயெ முடிகிறது.அவரின் அல்லக்கைகள் நாளு பேரின் பாராட்டிலேயே இவரும் லொல்லடிக்கிறார்.
ஆரம்பத்தில் இரன்டொரு காட்சிகளில் மட்டுமே வந்தாலும் இளசுகளின் கைதட்டலை பிந்து மாதவி அள்ளி செல்கிறார்.மறைந்த சில்க் ஸ்மிதாவின் பார்வையை அப்படியே பிரதிபலிக்கிறா

பாடல்கள் ஏற்க்கனவே பிரபலம் ஆனதுதான்.நன்றாகவே இருக்கு.ஒளிப்பதிவு பாலசுப்ரமனியெம் அதிகமாக மெனக்கெடவில்லை.இந்த படத்திற்க்கு மெனக்கெடவேன்டியதில்லை என அளவாக முடித்துக்கொண்டார்.
வசனம் ஓகே ஓகே இயக்குனர் .ஸ்டேன்டப் காமடி மாதிரி போகிற போக்கில் சிரிக்கவைக்கவேண்டும் என எழுதி இருக்கிறார்.அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்.

படம் உங்களை நிச்சயம் மகிழ்விக்கும் கருத்து குத்து எதுவும் இல்லாமல் அட்வைஸ் செய்யாமல்.நிச்சயம் திரை அரங்கில் போய் படம் பார்த்து சிரித்துவிட்டு வரலாம்.

வருத்தபடாமல் ,மனம் நொந்து போகமல் விழுந்து சிரிக்க ஒரு படம்

Tuesday, 13 August 2013

தலைவா.............. தடைபோட ஒன்றுமில்லை.......தலைவா............

விமர்சனம் எழுதும் முன்பு ஒரு செய்தி.நான் விஜய் ரசிகன்.ஆனால் இந்த விமர்சனம் அதை தான்டி எழுதும் நிலை உள்ளது.

அமலாபால் அழகாய் இருக்கிறார்.ஆஸ்த்ரேலியா அழகா இருக்கு.நீரவ்ஷா ஒளிப்பதிவு மிக நன்றாக இருக்கு.சன்டை காட்சிகளும் நல்லா இருக்கு.விஜய் நடிப்பும் கூட ஓகேதான்.ஆனால் இது மட்டும் போதுமா ஒரு படத்துக்கு.

நாயகன்,தளபதி,பாட்ஷா,தேவர்மகன் என தமிழ் படங்களின் சில காட்சிகளை மாத்தி எடுத்தால் படம் பார்க்கும் ரசிகனுக்கு புரியாமல் போய் விடுமா என்ன.
நாயகன் படத்தின் கமல் வேடத்தை சத்தியராஜும்,கமலை சுட்டுக்கொல்லும் அந்த மனவளர்ச்சி குன்றியவர் வில்லனாகவும் படத்தில் இடம் பிடித்து உள்ளனர்.அனேக காட்சிகள் பாட்ஷா ,மற்றும் தளபதி படத்தின் மறு ஆக்கம்.

படம் ஆரம்பித்து இடைவேளைவரை ஆஸ்த்திரேலியாவில் ஆமை போல நகர்கிறது.அமலாபால் அழகை கான்பிப்பதற்க்காக இவ்வளவு செலவா.காதல் காட்சிகள் ஒட்டவே இல்லை மனதில்.சந்தானம்
வாயசைத்து செல்வதற்க்கு எதற்க்கு இந்த படத்தில்.

சத்தியரஜ் சிகப்பு துன்டை குறுக்கே போட்டு வசனம் பேசி செல்கிறார்.
கருப்பு ஆடாக பொன்வன்னன்.
பாடல் காட்சிகள் செட்டிங் எல்லாமே நாயகன் படத்தை நினைவு படுத்துகின்றன.

விஜய் நன்றாக நடித்து இருக்கிறார் என சொன்னாலும் அன்டர்ப்ளே செய்து நடிக்கிறேன் என சில இடங்களில் எரிச்சலையும் வரவழைத்துவிடுகிறார்.

மொத்தம் படத்தில் சில காட்சிகள் நன்றாக இருந்தாலும் மொத்த படத்தையும் பொருமையாகத்தான் பார்க்கவேன்டும்.
விஜய் ரசிகர்களுக்காக எந்த காட்சிகளும் படத்தில் இல்லை வாங்கனா வனக்கங்கனா பாட்டை தவிற.
நான் மறியான் போன்ற மிக ஸ்லோவான படத்தையும் ரசித்து பார்த்து இருக்கிறேன்.ஆனால் விஜய் ரசிகனாக இப்படி ஒரு ஸ்லோவான படத்தை ரசிக்க முடியவில்லை.
இந்த படத்தை தமிழகத்தில் எதற்க்காக திரையிடவிடாமல் செய்து இருக்காங்க என தெரியவில்லை

Monday, 8 July 2013

சீறிய சிங்கம்லே சூர்யா.........
கொஞ்சநாளாக புதிய டிரென்ட் என வெறும் காமடி படங்களாக வந்துகொண்டு இருந்தது .சில படங்கள் சினிமாவில் உதவி இயக்குனராககூட வேலை செய்யாமல் குறும்படங்கள் எடுத்த அனுபவத்தில் படம் எடுத்து நன்றாக ஓடியது .அந்த படங்களை தூக்கிவைத்து கொண்டாடவும் செய்தனர் .அதை ஒற்றி பெரிய இயக்குனர்கள் கூட நகைச்சுவை படம் எடுத்தனர் .கடைசியாக வந்த தில்லு முள்ளு ,தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களும் நகைச்சுவை படங்களே .என்னதான் திரை அரங்கில் சென்று படம் பார்த்து சிரித்துவிட்டு வந்தாலும் அதில் ஒரு என்ட்டர்டிரைனர் இல்லாது போலவே இருந்தது .இதுவே டிரென்ட் ஆகிருமோ என இருக்கும்போது சரியாக களத்தில் சிங்கம் .

சூர்யா கடைசியாக வந்த இரண்டு படம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாததால் கட்டாய வெற்றி தேவை பட்டது .இயக்குனர் ஹரியோடு சேர்ந்து சொல்லி அடிச்சு இருக்கார் சிங்கம் இரண்டாம் பாகம் மூலம் .படம் ஆரமிக்கும்போது சிங்கம் முதல் பகுதியின் சில காட்சிகளோடு ஆரம்பிக்கிறது .படத்தின் முதல் பகுதியில் விஜயகுமார் சொன்னது போல போலீசாக இல்லாமல் பள்ளிகூடத்தில் என் சி சி ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டு தூத்துக்குடி கடற்க்கரையோரங்களில் ஆயுத கடத்தல் நடைபெறுகிறதா என கண்காணித்து வருகிறார் .வேலை பார்க்கும் பள்ளியில் ஹன்சிஹா மாணவியாக இருக்கிறார் .ஹன்சிஹாவுக்கு சூர்யா மேல் காதல் வருகிறது .

அதே ஊரில் இருக்கும் இருவர் பரம விரோதியாக இருக்கின்றனர் .ஒருவர் நல்லவர் .ஒருவர் கேட்டவர் .அந்த நல்லவர் ஹன்சிஹா சித்தப்பா .
ஆயுத கடத்தல் என நினைத்து வேவு பார்க்க போன இடத்தில் அங்கே நடப்பது போதை மருந்து கடத்தல் என தெரிய வருகிறது .இந்த போதை மருந்து கடத்துபவர்கள் பரம விரோதியாக கருதப்படும் இருவரும் ஒன்றாக சேர்ந்து என சூர்யாவிற்கு தெரிய வருகிறது .

இவர்களின் மிக முக்கியமான ஆளை கைது பண்ணும்போது அங்கே ஒரு நைஜீரியனும் கைது செய்ய படுகிறான் .அவனை இரவோடு இரவாக ஜெயிலை உடைத்து தப்பிக்க வைக்கிறார்கள் .அவனை பற்றி ஆராயும்போதுதான் தெரிகிறது அவன் ஒரு இண்டர்நேசனல் போதை பொருள் கடத்தல் காரன் என .இவ்வளவுதான் கதை .

மிக சாதாரண கதைதான் .படம் ஆரம்பித்து மெதுவாக நகரும் .காமடிக்கு சந்தானம் வருவார் .ஹன்சிஹா துரத்தி காதலிக்க அதை மறுத்துக்கொண்டு இருப்பார் சூர்யா .வில்லனின் அடியாள் தம்பியை பப்பில் வைத்து ஒருவர் அடித்துவிட அவரின் தங்கையை கடத்தும்போது வேகம் எடுக்கும் படம் இருதிகாட்சிவரை தடதடத்து ஓடிக்கொண்டே இருக்கும் .
முன்பகுதியில் வந்த முக்கியமான கதாபாத்திரம் அத்தனையும் சரியான இடத்தில் வருமாறு கதை அமைத்து இருக்கின்றார் .படத்தில் வரும் எந்த வசனமும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது .

சண்டைகள் நன்றாக படம் ஆக்கபட்டு இருக்கு .சண்டைகள் படமாக்கியவிதத்தில் ஒளிப்பதிவாளரின் பங்கு மிக முக்கியமானது .எல்லா சண்டை காட்சியிலும் முந்திய படத்தில் ஒரு கையை உயர்த்தி ஓங்கி பிடரியில் அடிப்பது போல கவனமாக சேர்த்து இருக்காங்க .சண்டை காட்சிகள் நிச்சயம் அதிரி புதிரியானவை .

பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை .சூர்யா விஜய் போல ஆட முயற்சித்து இருக்கிறார் .அவரது உயரம் அதற்க்கு தடையா இருக்கு .அனுஷ்கா அழகு பதுமையாக வந்து போகிறார் .கதையின் ஓட்டத்துக்கு ஹன்சிஹா உதவியாக இருக்கிறார் .இந்த படத்தில் நடிக்கவும் செய்து இருக்கிறார் ஹன்சிஹா .

வில்லன்கள் பிரகாஷ்ராஜ் அளவுக்கு இல்லை .இருந்தும் பரவா இல்லை .படத்தின் நிறைய காட்சிகள் அந்தரத்தில் இருந்து ஒளிப்பதிவு செய்யபட்டு உள்ளது .பிரியன் மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்து இருக்கின்றார் .

படத்தில் நிறைய நடிகர்கள் இருந்தாலும் சூர்யா ஒற்றை ஆளாக அவ்வளவையும் சுமந்து நடித்து இருக்கின்றார் .சூர்யாவிற்கு நிறைவான படம் இரத்து .

இயக்குனர் ஹரிக்கு படம் பார்க்க வருபவர்களின் ரசனை எப்படி இருக்கும் என தெரிந்து இருக்கு .வசனத்தை பற்றி இந்த கவலையும் இல்லாமல் பரபர திரைக்கதையால் சூர்யா ஓடிக்கொண்டு இருக்க நம்மையும் சேர்ந்து சூர்யோவோடு ஓடுவது போல ஆக்கி இருக்கார்.அதுதான் ஹரியின் பலம் .

நகைச்சுவை படம் பார்த்து அலுத்து இருந்த நேரத்தில் நல்ல பொழுதுபோக்கு படமாக சிங்கம் வந்து இருக்கு .

சிங்கம் சீறும்

Thursday, 13 June 2013

கொஞ்சம் எழுதலாம்

மிக நீன்டநாட்க்கள் ஆகிவிட்டது ப்ளாக்கரில் எழுதி.இனிமேல் அவ்வபோது இங்கே எட்டிபார்த்து கொஞ்சம் எழுதும் எண்ணம் இருக்கிறது.எப்பொழுதும்போல உங்கள் ஆதரவு இருக்கும் எனும் நம்பிக்கையில் எழுதபோகிறேன்

Friday, 15 March 2013

கதையை சொல்ல மாட்டேன் -பரதேசி !!!!!


படத்திற்கு விமர்சனம் எப்படி எழுதுவது என தெரியவில்லை .நான் கதைக்குள் செல்ல விரும்பவில்லை .இந்நேரம் உங்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் தெரிந்து இருக்கும் .ப்ளாக்கரில் அல்லது பேஸ்புக்கில் படத்தின் கதையை விரிவாக குறை சொல்லியோ அல்லது நல்லதாகவோ எழுதி இருப்பார்கள் .ஆகவே விரிவாக கதைக்குள் நான் பயணிக்கவில்லை .

இன்று படம் வெளியாகும் வரை படத்தின் விளம்பர முன்னோட்டம் பார்த்து பாலாவை விமர்சனம் எனும் போர்வையில் கஞ்சி காய்சியவர்களை முதலில் இந்த படத்தை பார்ப்பதற்கு பணிக்கவேண்டும் .

படத்தின் கதையை போலவே இன்றும் வேறுவிதமான கொத்தடிமைத்தனம் ஒன்று சத்தமில்லாமல் தமிழக கிராமங்களில் நடக்கிறது .தாலிக்கு வேலை {சுமங்கலி திட்டம் }.

கிராமங்களுக்கு ஏஜண்டுகள் வந்து முன்பணம் கொடுத்து படிப்பை நிப்பாட்டிய பெண்களை வேலைக்கு அழைத்து செல்கிறார்கள் .இப்பொழுது நடப்பது நவீன கொத்தடிமை .

முதல் படம் வந்து பதினாலு வருடங்கள் .இந்த பதினாலு வருடங்களுக்குள் மொத்தம் ஆறு படம் மட்டுமே .நினைத்தால் வருடத்திற்கு ஒரு படம் எடுத்து இருக்கலாம் .சதையை நம்பி படம் எடுக்காமல் கதையை நம்பி படம் எடுப்பதால் வெறும் ஆறு படம் மட்டும் .

எடுத்த படம் அத்தனையும் விளிம்புநிலை மனிதர்களை மட்டுமே பேசியது .இதற்க்கு முன்பு வந்த படங்களில் இறுதிக்காட்சி மிக அகோரமாய் இருக்கும் .நான்கு படங்களில் பைத்தியத்துக்கு அருகில் உள்ள நிலைமையில் இருக்கும் கதா பாத்திரம் .அவன் இவன் படம் எடுக்கும்போதே படம் பார்க்கும் நீங்க பாலாவை வெறுப்பீர்கள் என சொல்லியே எடுத்தார் .அதே மாதிரி விமர்சனம் எனும் பேரில் நாம் துவைத்து எடுத்துவிட்டோம் .

பரதேசி பற்றி என்ன சொல்வது என தெரியவில்லை எனக்கு .படம் டைட்டில் ஆரம்பித்ததில் இருந்து படம் முடியும்வரை ஏதோ என்னை ஆட்க்கொண்டது போல காட்சிகள் கடந்து கொண்டு இருக்கும்போது பொசுக்கென கண்ணீர் துள்ளிகள் அடிக்கடி எட்டி பார்த்துக்கொண்டே இருந்தது .

அதரவா இந்த கதைக்கான முகச்சாயல் இருப்பதாலேதான் பாலா தேர்ந்து எடுத்து இருப்பார் போலருக்கு .வாழ்ந்து இருக்கின்றார் .வேதிகா அழகான பொம்மையாக வந்து போனவரை எவ்வளவு அழகாக செதுக்கி எடுத்து இருக்கிறார் .எல்லா நடிகர் நடிகைக்குள்ளும் பாலாவே புகுந்து வந்தால் ஒழிய இவ்வளவு சாத்தியம் இல்லை .யாரை குறித்து எழுதினாலும் பாலா பாலா என மட்டுமே எழுத முடியும் .


விடுதலைக்கு உழைத்த பெரியவர்களை மட்டுமே பேசியே காலம் கடந்து வந்து இருக்கின்றோம் .பஞ்சத்தையும் ,உழைத்த உழைப்பிற்கான ஊதியம் பெறாமல் சுரண்டலை சந்தித்து வந்த மனிதர்களையும் மறந்துவிட்டோம் .அவர்களின் ரத்தத்தில் எழுதபட்ட வாழ்க்கையை இன்று நாம் சொகுசாக வாழ்ந்து வருகின்றோம் .

இந்த படம் பார்க்கும்போது உங்கள் மனதில் ரெத்தம் வடியவில்லை எனில் ,உணர்ச்சிகளுக்கு நீங்கள் ஆட்ப்படவில்லை எனில் உங்கள் மனங்களில் கோளாறு .

படம் ஹீரோயிசம் பற்றிய படம் அல்ல .குத்து பாட்டுக்கான படம் இல்லை .இது சண்டைகளுக்கான படம் இல்லை .

உண்மைகளுக்கான படம் இது .உண்மையை பேசத்துடிக்கும் படம் .
உலகப்படம் என எண்ணி நீங்க போக வேணாம் .உள்ளூர் படம் உலகத்துக்கான படம் என எண்ணி பார்க்கவேண்டிய படம் .

நான் கடைசிவரை இங்கே கதையை எழுதவில்லை .பாலா எனும் கலைஞனுக்கு நான் செய்யும் மரியாதை அது மட்டுமே .திரை அரங்கில் பாருங்கள் .

Friday, 8 March 2013

தடம் மாறிய பெண்ணும் தடுமாறாத நானும்....ஆறு வருடம் இருக்கும் .ஒரு நாள் கோலாலம்பூர் மஸ்ஜீத் இந்தியா எனும் இடத்தில் நான் என் தம்பி மற்றும் எங்க உறவிறனர் பையன்கள் என ஆறு ஏழு பேர் இருக்கும் சுத்திக்கொண்டு இருந்தோம் .

நாங்கள் எல்லோரும் நடந்து வந்துகொண்டு இருக்கும்போது எங்களை பார்த்த ஒரு பெண் ஓடி ஒளிந்தது .அப்ப என் தம்பி சொன்னான் ஒரு வாரம் முன்பும் நானும் இன்னொருவனும் இங்கே வந்தோம் எங்களை பார்த்துவிட்டு இதே பெண் ஓடியது என சொன்னான் .சரி வாங்க நம்மை பார்த்து யாரு ஓடுவது பார்ப்போம் என அந்த பெண் மறைந்த மைதீன் ஸ்டோர் பின்புறம் சென்றோம் .

அங்கே பார்த்த பெண் எங்கள் ஊரை சேர்ந்த பெண்தான் .என்னோடு படித்த பெண்ணின் அக்கா அது .தலை குனிந்தவாறு நின்றது .எனக்கு ஊரிலேயே அந்த பெண்ணை தெரியும் .மற்றவர்களுக்கு தெரியவில்லை .கணவர் இறந்து ஒரு பெண் குழந்தைக்கு தாயான பெண் .

வந்து நின்றது பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக .ஊரிலும் இலைமறைகாயாக அப்படிதான் அந்த பெண் இருந்தது .அந்த பெண் கொஞ்சகாலம் வீட்டு வேலை சிங்கப்பூரில் செய்து வந்ததால் என்னோடு வந்த பையனுகளுக்கு தெரியவில்லை .ஆனால் அந்த பெண் எங்க ஊர் பையன்கள் எல்லோரையும் தெரிந்து வைத்து இருந்ததால் ஒவ்வொருமுறையும் இந்த மாதிரி ஓடி ஒளிந்து இருக்கு .

அதன்பின்பு நான் கேட்டேன் ஏன் இங்கே வந்தீங்க என .கொஞ்சநேரம் மவுனமாக நின்றது .அதன்பின்பு நான் என்ன செய்ய முடியும் .ஊரில் ஒண்டியாக இருந்தபோதும் என்னை ஆண்கள் தொந்தரவு செய்யவே செய்தார்கள் .அம்மா மற்றும் பெண் குழந்தை இருக்கு .அவர்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டாமா என்றது .என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை .

அப்புறம் சொன்னது நான் இந்த தொழில்தான் செய்யபோறேன் என தெரிந்தே வந்தேன் .ஆனால் நம் ஊரை சேர்ந்தவர்கள் இங்கே நிறைய இருப்பார்கள் என நான் நினைக்கவில்லை .அதுவே எனக்கு பெரிய அவஸ்த்தையா இருக்கு .யாரை பார்த்தாலும் ஓடி ஒளியுறேன் என சொன்னது .என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை அதன் பின்பு .அதன் பின்பு அங்கு இருந்து சென்று விட்டோம் .

இப்ப ஊருக்கு போய் இருக்கும்போது அவங்க அம்மாவிடம் கேட்டேன் எங்கே உங்க பொண்ணு என .அவள் இறந்துவிட்டாள் என சொன்னார்கள் .அந்த பெண்ணின் சாயலிலேயே அங்கு வயதுக்கு வந்த பெண்ணாக நின்றது அந்த பெண்ணின் மகள் .
அந்த பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றவர்கள் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கவிட்டு விட்டார்க்கள் என சொன்னார்கள் ஊரில் .

தவறான பாதையை தேர்ந்தெடுத்து இன்று இந்த உலகத்தில் இல்லாமல் தன் குழந்தை தாயும் இன்றி தந்தையும் இன்றி தனியாக தன் பாட்டியோடு இருக்கு 

Saturday, 2 February 2013

கடல் பார்க்க ஐஞ்சு ரூவாக்கு மேல செலவு செய்யாதீங்க


கடல் எப்பொழுது எனக்கு முதல் பரிச்சயம் நினைவுபடுத்தி பார்க்கிறேன்.

மூன்றாவது படிக்கும்போது சென்ற சிறிய இன்ப சுற்றுலாதான் முதன் முதலில் கடல் பார்த்த அனுபவம்.

அந்த சுற்றுலாவுக்கு ஒரு சர்பத் சேர்த்து போய் வர மொத்தமே ஐந்து ரூபாய் மட்டுமே.மதிய உணவு புளிச்சோறு கட்டி எல்லாக்குழந்தகளும் கொண்டுபோனோம்.கூடுதலாக வீட்டில் ஐந்து ரூபாய் கொடுத்தார்கள்.

சுற்றுலா சென்ற இடம் பேராவூரனிக்கு அருகில் உள்ள மனோரா.

கடலும் கடல் ஒட்டி மனொரா கம்பீரமாக நின்றது அந்த வயதில் ஆச்சரியம்.பேருந்து தூர வரும்போதே உயரமாக தெரிந்த மனோரா பார்த்து எல்லா குழந்தைகளும் கை கொட்டி சந்தோசமாய் ஆர்ப்பரித்தது நினைவில் இன்னும் இருக்கு.

இருபத்து அய்ந்து பைசா கொடுத்து மொனோரா உள்ளே சென்று ஆட்டம் போட்டதும் உச்சிவரை சென்று கீலே பார்த்தபோது பயமாக இருந்தது.

அதன் பின்பு கடல் நோக்கி ஓடினோம்.கடல் அலை இல்லாத கடல்.இப்ப சென்று பார்த்தாலும் அமைதியாகவே இருக்கும் கடல்.சகதியும் பாசிகள் அடர்ந்தும் கடலோரம் இருந்தது.இருந்தும் கால் நனைத்து விளையாடியத்தும் ,சங்கு சிப்பிகள் தேடி எடுத்ததும் ஒருவரை ஒருவர் துரத்தி விளையாடியதும் இன்னும் நினைவில் இருக்கு.

மாலை நேரம் நெருங்கியவுடன் ஆசிரியர் வீடு திரும்ப அழைத்ததும் எல்லோரும் கடலையும் மனோராவையும் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வந்தது பசுமையாக இருக்கு.

இப்பவும் மனோரா சென்றே வருகிறேன்.காலாங்கள் கடந்தும் கம்பீரமாக நிற்க்கிறது மனோரா.
கடலும் அன்று பார்த்தது போலவே அலைகள் இல்லாமல் அமைதியாகவே இருக்கு.

Friday, 1 February 2013

டேவிட் - நறுக் விமர்சனம்


போதையோடு ஆரம்பித்து போதையோடு நகர்கிறது படம்.

விக்ரம் ,ஜீவா இருவரும் இருக்கிறார்கள் ஆக்ஸன் படம் அல்லது வேகமாக இருக்கும் என படத்திற்க்கு சென்றீர்கள் என்றால் அது இரண்டும் இல்லை.

இது வேறு தளத்தில் இயங்கும் படம்.இருவர் நடிப்பும் மட்டும் அல்ல எல்லோருடைய நடிப்பும் நன்றாக இருக்கு.அதற்க்காக உங்களால் பொருமையாக படம் பார்க்கமுடியும் என்று என்னை சொல்ல சொன்னால் என்னால் முடியாது.இருக்கையில் நெளிவதை ஒருபோதும் தடுக்க முடியாது.

இது போன்ற படம் ஹிந்தியில் நன்றாக ஓடுவதற்க்கு சாத்தியம்.தமிழில் முயன்று இருக்கின்றார்கள்.ரசிகர்கள் மனநிலை எப்படி இருக்கும் என சொல்ல முடியவில்லை.

விக்ரம் அப்பாவாக வருபவர் இறந்து ஆவியாக வருபவராக நடித்து இருக்கின்றார்.அவர் காட்சி வருகின்றபோது கொஞ்சம் சிரிக்க முடிகிறது.

மற்றபடி ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது.

இசை நிறைய பேரின் பெயர் டைட்டிலில் வருகிறது.அவ்வளவுதான்.

படம் பார்க்கலாம் என்று கேட்டால் பார்க்கலாம் என சொல்வேன் வேறுவிதமான தளத்தில் படம் பார்க்க ஆசைப்பட்டால்.

பொழுதுபோக்கு சித்திரமாக நினைத்து போனீர்கள் என்றால் நிச்சயம் ஏமாந்து போவீர்கள்.......


Friday, 18 January 2013

முகநூளில் முகம் காட்டியவை .......


ஜன்னலோர பேருந்தில்
கடக்கும் முகங்களுக்குள்
எந்நாளும் தேடிக்கொண்டு
இருக்கிறேன்
உன் ஒற்றை புன்னகைதனை!!!!


-------------------------------கவிதை எழுதனும்
என்பதற்க்காக உன்
கண்களை பார்க்கவில்லை
உன் கண்களை
பார்த்ததால் கவிதை
எழுதினேன்
கவிதை எழுதனும்
என்பதற்க்காக உன்
கண்களை பார்க்கவில்லை
உன் கண்களை
பார்த்ததால் கவிதை எழுதினேன்!!


--------------------------------------------
  ஏதேனும் எழுதிக்கொண்டு இருக்கும்போது அங்கங்கே கருத்துகந்தசாமி எட்டிப்பார்ப்பதை தடுக்குமுடிவதில்லை எல்லோருக்கும் மற்றும் எனக்கும் இதோ இப்படி டக்குனு தோனுச்சு .....தூரம் அதிகமில்லை ஓட்டப்பந்தயத்தில் முதலில் வந்தவருக்கும் அடுத்த நிலையில் வந்தவருக்கும்.இங்கே தோல்வி என எதுவும் இல்லை தூரமும் அதிகமில்லை.அதுபோலத்தான் வாழும் வாழ்க்கையும் செல்லும் பயணங்களும்.!இழப்புகள் ஏற்ப்பட்டு இருக்கலாம் ஆனால் வாழ்க்கயை இழந்துவிடவில்லைதானே.

பார்வையை முன்னோக்கி மட்டுமே வையுங்கள் எல்லாமே நம் கைகளுக்குள்  அடங்கும்!

Monday, 14 January 2013

மாட்டுப்பொங்கலும், மாடில்லாத நாங்களும்.....
மாட்டுப்பொங்கல் வாழ்த்து சொல்ல எல்லோரும் இனையத்தில் மாடுகள் படம் தேடி எடுத்துப்போட்டு வாழ்த்து சொல்றாங்க.நானோ எப்படி சொல்வது என வருந்திகொண்டு இருக்கிறேன்.

மாடுகள் இருந்த வீடு என் வீடு.உழவு மாடு ஜோடி ஒன்றும் சில பசுக்களும் இருந்தன முன்பு.இன்று என் வீட்டில் ஒரு மாடு கூட இல்லை.நாங்க வீட்டுபொங்கல் கொண்டாடவிட்டாலும் மாடுகள் இருந்ததால் எங்க வீட்டு வேலையாள் மூலம் மாட்டுபொங்கல் கொண்டாடுவோம்.இன்று மாடுகளும் இல்லை தனிப்பட்ட வேலையாளும் இல்லை எங்க வீட்டில் இன்னும் விவசாயம் பன்ன இடங்கள் இருந்தும்.

பொங்கலுக்கு இரண்டு நாள் முன்பே மாடுகளுக்கு புது கயிறுகள் ,கொம்புகலுக்கு பெயின்டு என வாங்கி வந்துவிடுவோம்.எங்க வீட்டு மாடுகளுக்கு கருப்பு சிகப்பு கலரில் பெயின்டு அடிப்போம்.எங்க வீட்டில் எல்லோரும் திமுக என்பதால்.

மாட்டுபொங்கல் இரவு அன்று மாட்டுக்கடை என சொல்லும் இடதிற்க்கு உழவு மாட்டை மட்டும் வீட்டு வேலையாள் கொண்டுபோய் கட்டுவார்.நண்பர்கள் எல்லோரும் அங்கே போவோம்.இரவு பனிரெண்டு மணிக்குமேல் பொங்கல் படையலிட்டு சாமி கும்பிட்டுவிட்டு தீப்பந்தம் ஏந்தி இளைஞர்கள் ஊர் எல்லைவரை ஓடிசென்று வருவார்கள்.அதன்பின்பு மாடுகளுக்கு படையல் இட்ட சோற்றை ஊட்டுவார்கள்.

மறுநாள் காலை மறுபடியும் வீட்டில் உள்ள எல்லா மாடுகளையும் பொங்க கடைக்கு ஓட்டி செல்வோம்.அங்கே ஊர் மாடுகள் அத்தனையும் கொண்டுவரப்பட்டு இருக்கும்.மாடுகள் கலர் கலராக ஜோடிக்கபட்டு இருக்கும்.யார் எந்த கட்சியில் இருக்காங்களோ அந்த கட்சி கலர் பெயின்ட் கொம்புகளில் அடிக்கபட்டு இருக்கும்.சில மாடுகள் குஞ்சம் கட்டி இருக்கும்,சிலவற்றில் பணமும் சேர்த்து கட்டி இருக்கும்.ஊரே ஒரே இடத்தில் இருக்கும்.

ஒன்பது மணிக்கு வெடிவிட்டு மாடு கூடுவார்கள்.மாடுவிறட்டி கையில் கிடைத்ததை பறிப்போம்.

அதன் பின்பு கிராமிய விளையாட்டு போட்டிகள் நடக்கும்.வழுக்குமரம் ஏறுதல்,பானை உடைத்தல்,போர்த்தேங்காய் உடைத்தல்,பெண்கள் கோலாட்டம் கும்மியாட்டம்,சிருவர்களுக்கு விளையாட்டுபோட்டிகள் என களைகட்டும் மாலைவரை.

தாவணிகளும் தாவணிகளை சுற்றும் காளைகளும் என சந்தோசமாக இருக்கும் அன்றய பொழுது.

இன்றோ எண்ணிக்கயில் ஒரு மாடுகூட என் வீட்டில் இல்லை.

எல்லாம் கணாக்காணும் காலம் ஆகிவிட்டது.

உழவர்கள் அனைவருக்கும் என் அண்பான உழவர் மாட்டுப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்