Friday, 27 April 2012

வயலோடு சில நினைவுகள்



எல்லோருக்குள்ளும் நினைவுகள் என்ற ஒன்றை சுமந்துகொண்டுதான் அலைகிறோம் .
வாழ்ந்து வந்த தடங்களின் தொகுப்புகளாக அவை நெஞ்சில் நிலைபெற்று இருக்கும் .
எனக்குள்ளும் சில நினைவுகளை சுமந்தே அலைகிறேன் .

நான்.., 
இன்று செய்வது ஒன்றும் அறியாமலேயே..
ஒன்றையும் செய்ய இயலாமலேயே 
உலகத்தைக் கணிணிமுன் அமர்ந்து 
வெற்றாய்ப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் .
காலமாற்றத்தில் விவசாயக்
குடும்பத்தில் பிறந்து விவசாயம் மறந்த ஒருவனாக நானும் இருக்கிறேன் .

திரும்பி வராத நாட்கள் அவை .
இன்றும் எங்கள் வீட்டிற்கு விவசாய இடங்கள் சொந்தமாய் இருந்தாலும் யாரோ அவற்றை குத்தகைக்கு விவசாயம் செய்கிறார்கள் .

காவிரி ஆற்றின் கடைநிலை விவசாயிகள் நாங்க... ,கல்லணையில் தண்ணீர் திறந்தால்..,
தண்ணீர் இரண்டு வாரம் கழித்தே எங்கள் ஊர் வந்தடையும் .


தண்ணீர் வந்தவுடன் பயிர் நெல் எடுத்து ஆற்றின் கரையோரம் மூட்டையில் ஊறவைத்து மூன்றாம் நாள் வெளியே எடுத்தால் முளைப்பயிர் விட்டு இருக்கும். அதைச் சேற்றுவயலில் நெல் பாவுவதற்கு எடுத்துச் சென்றால், அங்கே சிறு குழந்தைகள் கையில் சிறு ஓலைப் பெட்டிகள் வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருப்பார்கள் .வயலில் நெல் விதைத்து விட்டு மீதமிருக்கும் நெல்லை வந்தவர்களுக்கு இரண்டு கைவீதம் போடுவார்கள் .வாங்கிய சிறுவர்கள் நெல் பாவும் ஒவ்வொரு வயலாக தேடிச்சென்று நெல் வாங்குவார்கள் .
மாலையில் அந்த நெல் வறுத்தெடுக்கப்பட்டு..
நெல்குத்தி .., அவலாக மாறியிருக்கும் .
இன்று வயலுக்கு
செல்லும் குழந்தைகளையும் .அவல் குத்தி எடுக்க அம்மாக்களையும் காணோம் .

குருநெல் ..,பெருநெல் என நெல்வயதுக்கு தகுந்து நெல் பாவி, நாற்று பறிக்கும் ,நாற்று எடுக்கும் நாளும் மாறுபடும் .நாற்றங்காலில் வயல் நிறைய ஆண்களும் பெண்களுமாக நிறையப்பேர் அமர்ந்து பறிப்பார்கள் ..
சிலர் அதிவேகமாகப் பறிப்பார்கள் .
அவர்கள் பறிப்பதைப் பார்க்கவே ஆசையாக இருக்கும் 
நூறு நாற்று முடிகள் கொண்டது ஒரு கட்டு .
ஒரு கட்டு பறிக்க அன்று ஒரு ரூபாய் மட்டுமே ..

இவ்வாறு ஒரு இடத்தில் பறித்து நாற்றுகள் வேறு ஒரு இடத்தில் இருக்கும் வயலுக்கு கொண்டு போகப்படும் .இன்று வயல் நிறைய குவிந்து நாற்று பறித்தெடுக்கும் ஆட்களை காணோம் .காண்ட்ராக்ட் பறியல் என்று சொல்லி குழுவாக பறிக்கிறார்கள் .அதற்கும் ஆள் கிடைப்பதே இன்று சிரமமாக இருக்கிறது .

இனி நாற்று நடுவது குறித்து பார்ப்போம்
நாற்று நடுவதற்கு கங்காணிகளிடம் சொன்னால் போதும் அவர்களுக்கு ஒவ்வொரு வயலும் எத்தனை மா என கணக்கு தெரியும் .
அவர்கள் அதற்குத் தகுந்த மாதிரி இத்தனை ஆட்கள் வேண்டும் எனக் கேட்பார்கள் .நாம் அவற்றில் ஓரிரண்டு ஆட்களைப் பேசி குறைத்துக்கொள்ளலாம் .
பேசியபடி சரியாக வயலுக்கு வந்துவிடுவார்கள் .


எங்கள் வீட்டு நடவுக்கு எங்க அம்மா சொல்வது 
கோயிந்தி அக்கா அல்லது அம்மணி அக்கா இந்த இருவரிடமும்தான்.
இதில் கோயிந்தி அக்காவிடம் காசு என்று சொல்லச் சொன்னால் சொல்லாது .
சல்லி என்று தான், தான் இறக்கும் வரை சொல்லியது .
ஏன் என்றால் அக்காவின் கணவர் பெயர் காசி .
இந்த கோயிந்தி அக்கா தன் வீட்டின் பின்புறம் நின்ற புளியமரத்தில் தூக்கு போட்டு இறந்து விட்டது .
அம்மணி அக்கா இன்னும் இருக்கிறது ,நடை தளர்ந்து வயோதிகத்தின் இறுதி நாட்களில் இருக்கிறது.
ஊருக்குச் சென்று இருக்கும்போது பார்த்துவிட்டு வந்தேன் .



நாற்று நடுவதற்கு வயதான பெண்கள் மட்டும் அல்ல 
இளம் பெண்களும் கலந்தே வந்து இருப்பார்கள் .
நாற்று நடும் முன்பு ரோட்டோர வயல் என்றால் 
முதல் வேலையாக ஒரு நாற்றுமுடியை ரோட்டின் நடுவே வைத்துவிடுவார்கள் .


அதன் பின்பு வயதில் பெரியவர் ஒருவர் 
முதல் நாற்று நடுவார் .

அதன் பின்பு எல்லோரும் நாற்று நட ஆரம்பிப்பார்கள். நாற்று நடும்போது, 
ரோட்டில் ஒரு கண் வைத்தே நடுவார்கள் .
யாராவது ..,நடந்தோ சைக்கிளிலோ ,
ஒரு சிலர் மோட்டார் பைக்கிலோ வருவது தெரிந்தால் ஒன்று சேர்ந்தாற்போல் குலவையிட்டு பாடுவார்கள். வருபவர்கள் காசுகளை நாற்று முடி அருகில் போட்டு செல்வார்கள் .

இன்று யார் குலவையிட்டு பாடுறாங்க ..???
ஒருத்தரும் இல்லை .
நான் என் தம்பி ,என் அண்ணன் எல்லோரும் 
நாற்று விளம்பிக் கொடுத்துக்கொண்டு இருப்போம் .
நாற்று விளம்பும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக 
தள்ளி நின்று விளம்புவோம் .
அப்படி இருந்தாலும் கூட நம்மைச் சுற்றி 
நாற்று நட்டு விடுவார்கள் .
அப்படி நட்டு விட்டால் பணம் குடுக்காமல் வெளியாக முடியாது .
நாங்க மாமன் மச்சான் கிடையாதுதான்..,
நாற்று நடும் பெண்களுக்கு ...
இருந்தாலும், ஒரு அன்பால் சுற்றி நடுவார்கள் .
இப்பொழுது யார் இருக்கா ..??
நம்மைச் சுற்றி நாற்று நடுவதற்கும்..??
நாம் விவசாயம் பார்ப்பதற்கும்..?? .

என் வம்சத்தில் இனி வரும் குழந்தைகளுக்கு மியூசியத்தில் கொண்டுபோய் காட்டும் நிலை வரலாம் விவசாயம் என்று ஒன்று இருந்தது என..

இன்றும்.. 
எனக்கு மட்டுமல்லாது, 
ஊருக்கே சோறு போட்ட என வயலை நினைக்கிறேன் ..நாம் மறந்துவிட்ட விவசாயத்தை நினைக்கிறேன் ..
என் கண்கள் நீரினால் நிறைகிறது .. 
கணிணி முன் அமர்ந்து இதுகுறித்து கவலைப்படுவதுவும் .. கண்ணீர் விடுவதும் தவிர்த்து எனக்கு வேறு எதுவும் தெரியவில்லை 

ஆனா உறுதியாச் சொல்றேன் . 
ஒரு நா வரும்... 
அன்று உடுக்க உடை இருக்கலாம் 
வசிக்க ..மாட மாளிகைகள் இருக்கலாம் .. 
ஆனா உண்ணச் சோறிருககாது..
இதுதான் சாவடிக்கும் உண்மை.. என் மக்கா...!!!

8 comments:

  1. ஆகா....

    வயில்வெளிக்கே கூடிட்டு போயிட்டீங்க :-)

    கண்ணுக்கு குளிர்ச்சியான படங்கள்...

    வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
  2. @ஆமினா
    மிக்க என்றி .புது வரவான என் பதிவுகள் படித்து என்னை ஊக்குவிப்பதற்கு

    ReplyDelete
  3. ஆம் முற்றிலும் உண்மை.எனக்கும் அதுபோல் நினைவுகள் வந்து மோதுகின்றன.எங்கள் நாஞ்சில் நாட்டு தோவாளை சானல் கரையோரம் உள்ள வயலில் வேலை பார்த்த நினைவுகள் வருகின்றன.

    ReplyDelete
  4. ஆனா உறுதியாச் சொல்றேன் .
    ஒரு நா வரும்...
    அன்று உடுக்க உடை இருக்கலாம்
    வசிக்க ..மாட மாளிகைகள் இருக்கலாம் ..
    ஆனா உண்ணச் சோறிருககாது..
    இதுதான் சாவடிக்கும் உண்மை.. என் மக்கா...!!!
    அருமையான பதிவு. நெஞ்சை நெகிழ வைக்கிறது.
    கசப்பான உண்மைகள்.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நிறைய எழுதுங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. நெஞ்சை நெகிழ வைக்கிறது.கசப்பான உண்மைகள்.

    ReplyDelete
  6. நெஞ்சை நெகிழ வைக்கிறது.
    கசப்பான உண்மைகள்.

    ReplyDelete
  7. vivasaayam seyya aasai padukirathu manathu.nalla pathivu.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. எனக்கும் இந்த அனுபவம் உண்டு நானும் ஒரு விவசாய குடும்பத்தில் வத்தவன் தான் அனால் இப்போது விவசாயம் எல்லாம் பொய்த்து விட்டது தண்ணீர் இல்லை வேலைக்கு ஆள் இல்லை என பல தடகள்கள்.

    ReplyDelete