Monday, 9 July 2012

நான் ஈ - என் பார்வையில் விமர்சனம்......நான் நிறைய சினிமாக்கள் பார்ப்பவன் .மொழி புரியாத படத்தைக்கூட கடைசிவரை பார்ப்பேன் .அப்படித்தான் நேற்று நான் ஈ படத்தை மொழி மாற்று படம் என நினைத்து பார்த்தேன் .ஆனால் தமிழில் எடுத்துள்ளார்கள் .

இப்போ நான் எழுதுவது விமர்சனம் அல்ல .சராசரி சினிமா ரசிகனாய் இதை எழுதுகிறேன் .கடைசியில் சொல்வதை விட முதலிலேயே சொல்லி விடலாம் .குடும்பத்தோடு போய் பாருங்க இந்த படத்தை .நிச்சயம் பெரியவர்களையும் இளைஞர்களையும, குழந்தைகளையும் சந்தோசப்படுத்தும் இந்தப்படம் .

கதை படத்தின் தலைப்பை போலவே கொசு அளவே கதை .தன்னை கொன்றவனை மறுஜென்மம் ஈ உருவில் எடுத்து பழிவாங்குவதே கதை .


படம் ஆரம்பிக்கும்போதே வில்லனின் குணம் இதுதான் என முதல் காட்சியில் உணர்த்திவிடுகிறார் இயக்குனர் .வில்லன் சுதீப் மிக அற்புதமாக நடித்துள்ளார் .சுதிப்பை கதாநாயகன் எனக்கூட சொல்லலாம் .

நானி படம் ஆரம்பித்து முப்பத்து ஐந்து நிமிடங்களே வந்தாலும் சொல்லி அடித்து நடித்து இருக்கிறார் .துரு துரு வென இருக்கிறது அவரது அசைவும் நடிப்பும் .ஒன்றும் இல்லாமல் மொட்டையாக வரும் மெசேஜ்க்கு அவரது சந்தோசமும் நண்பன் கேட்கும் கேள்விக்கு சொல்லும் பதிலும் அட்டகாசம் .


சமந்தா...... இவரைப்பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை .திரையில் பார்த்த அவரது சிரிப்பு இன்னும் மனசுக்குள்ளேயே இருக்கு .சமந்தா நடித்த சில படங்கள் தெலுங்கு மொழியில் பார்த்து இருக்கிறேன் .அவை ஒரு கதாநாயகி என்ன செய்வாளோ அது போன்று நடித்து சென்று இருப்பார் .இந்த படத்தில் காட்சியின் தன்மை உணர்ந்து நடித்து உள்ளார் .அவர் முகத்தில் நானியை பார்க்கும்போதெல்லாம் ஏற்ப்படும் பரவசம் அவ்வளவு அழகா இருக்கும் .

சமந்தாவும் சுதிப்பும் சாப்பிடும்போது அவர் நானியை பார்க்கும் பார்வையில் ஒரு அழகு இருக்கும் .காதலிக்கும்போது ஏற்படும் வெட்கமும் பரவசமும் ஒரு பெண்ணுக்கு எப்படி ஏற்படுமே அதை அப்படியே திரையில் கொண்டு வந்து உள்ளார் சமந்தா .ஈ உருவில் இருப்பது நானிதான் என தெரிந்த பின்பு சமந்தாவும் ஈ யும் அசைவிலேயே உரையாடுவது சான்ஸே இல்லை வேறு யாரு நடித்து இருந்தாலும் இப்படி வந்து இருக்குமா என .சமந்தாவுக்கு இனி தமிழில் நல்ல எதிர்காலம் இருக்கிறது .


சிஜி யில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரமாக ஈ  இருந்ததாலும்கூட அது செய்யும் அட்டகாசங்கள் சிரிப்பையும் வியப்பையும் ஏற்ப்படுத்துகிறது .நானி  ஈ உருவம் அடைந்தவுடன் சிறுவர்கள் விளையாடும்போது பறக்கும் நுரை முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து விளையாடும்போதே நமக்கும் பரவசம் பற்றிக்கொள்கிறது .சுதிப்பை முதன்முதலில் பார்த்த உடனே சிறு பிள்ளைகள் கோபப்பட்டு அடிக்க வருவதுபோல இருக்கும் ஈ யின் செய்கைகள். 

சுதிப் கன்னத்தில் மோதி தொப்பென்று கீழே விழும் .மறுபடி மறுபடி முயன்று பச்சை இலை தேநீர் கிண்ணத்துக்குள் விழுந்து தண்ணீர் சுழலுக்குள் மாட்டி மயக்கநிலைக்கு போகும்போது தன்னை கொன்றது நினைவுக்கு வந்து சிலிர்த்து எழும் பாருங்க உங்களுக்கே விசில் அடிக்க தோன்றும் .இதுக்கு மேலே சொல்ல கூடாது திரையில் பாருங்க ஈ யின் அட்டகாசத்தை .


இயக்குனர் ராஜமௌலி ஒரு வரி கதையை வைத்துக்கொண்டு மிக கடுமையாக உழைத்து இருக்கிறார் .
வசனம் கிரேசிமோகன் நீண்ட நாட்களுக்கு பின்பு எழுதி இருக்கிறார் .அவரது எடக்கு மடக்கு பாணி வசனங்கள் ,நானி பேசும் வசனங்கள் எல்லாமே அருமை .

ஒளிப்பதிவு அருமை .பின்னணி இசை அருமை .மொத்தத்தில் படம் அருமை .இந்தியாவில் முழுமையாக கிராபிக்ஸ் செய்து வந்த படத்தில் இது மிக அருமை .

முன்பே சொன்னதுதான் .குடும்பத்தோடு போய் பாருங்க .குழந்தைகளோடு போய் பாருங்க இந்த படத்தை

3 comments: