Wednesday, 4 July 2012

கிராமத்து ஆலமரம்............
எல்லா கிராமங்களிளிலும் ஊரின் மத்தியிலோ அல்லது ஒதுக்குபுறத்திலோ ஒரு ஆலமரமேனும் இருக்கும் .ஆலமரம் அதன் இடத்தில் இருந்துகொண்டு எத்தனை பேரின் வாழ்வை பார்த்துகொண்டு இருக்கிறது .சில ஆலமரங்களுக்கு கொஞ்சம் விசேஷமும் இருக்கும் .ஊரின் எல்லை தெய்வங்களில் ஒன்று அங்கே இருக்கு என கிராமத்தினர் நம்பவும் செய்வர் .அது காளியாகவோ முனியாகவோ அல்லது கறுப்பர் ,வீரபத்திரரராகவோ இருக்ககூடும் .அப்படி இருப்பின் அந்த ஆலமரத்தின் அடியில் சிறு மண்மேடு செய்து அதில் கம்பு வளைத்து ஊன்றி அதில் மாலைகளும் தொங்கி கொண்டு இருக்கும் .


என் ஊரிலும் ஒரு ஆலமரம் உண்டு .என் மீசை முளைக்கும் முன்பு அனேக நாட்கள் அந்த ஆலமரமே எடுத்துக்கொண்டது .இந்த ஆலமரத்தின் அடியிலும் ஒரு காளி இருக்கு என இன்னும் கும்பிட்டுகொண்டுதான் இருக்கின்றனர் .நானும், சங்கரும் ,சாகுலும் ,குமாரும் இன்னும் சிலரும் பள்ளிக்கூடம் விட்டவுடன் இங்கேதான் இருப்போம் சங்கர் இன்று இவ்வுலகில் இல்லை தரையில் ஓடி பிடித்து விளையாடுவதை நாங்கள் ஆலமரத்தில் கிளைகளில் தாவி விளையாடிக்கொண்டு இருந்தோம் .அங்கே குரங்குகள் இருந்து இருப்பின் எங்களோடு போட்டிபோட பயந்து ஓடி இருக்கும் .


ஆலமரம் தான் காதலித்து கட்டிக்கொண்டது போல தன்னுள்ளே ஒரு பனை மரத்தையும் சேர்த்து வைத்து இருந்தது .சாரையும் நல்லபாம்பும் பிணைந்து இருப்பது போல...
இளம் மனைவியை இறுக கட்டி அணைத்து இருப்பதுபோல இருக்கும் ஆலமரத்தில் நடுவில் பனைமரம் இருப்பது .ஆலமரம் பனைமரத்திற்கு தாலி கட்டிக்கொண்டு இருப்பது போன்று இரண்டையும் ஆதண்டகொடிகள் பிணைத்து இருக்கும் [ஆதண்ட வத்தல் செய்யும் காய் ]முட்கள் நிறைந்த ஆதண்ட கொடிக்குள் பச்சைநிறத்தில் சிறு சிறு காய்கள் இருக்கும் .அதை போட்டிபோட்டு பறிக்கும்போது முட்கள் உடம்பை பதம் பார்க்கும் .காய் யார் அதிகமாக பறிப்பது என்கிற ஆர்வத்தில் முட்கள் குத்தி வலிப்பது மறந்து இருப்போம் .சங்கர் பறிக்கும் காய்களை எனக்கோ அல்லது சாகுலுக்கோ அனைத்தையும் கொடுத்து விடுவான் .சங்கருக்கு சுண்டுவிரலும் அதன் அருகில் இருக்கும் விரலும் ஒட்டி இருக்கும் .


ஆலம்பழம் பழுக்கும் காலங்களில் மைனாக்களும் குருவிகளும் ஆலமரத்தில் நிறைய வந்து அமர்ந்து பழம் கொத்தி தின்றுகொண்டு இருக்கும் .மைனாக்கள் சத்தம் ஏதோ சந்தோசமாக அவை பாட்டு பாடிக்கொண்டு இருப்பதுபோல இருக்கும் .நாங்களும் ஆலம்பழம் சாப்பிடுவோம்


 .மைனா கொத்திய பழமாக தேடி சாப்பிடுவோம் .ஆலம்பழம் ருசி புளிப்பும் இனிப்பும் சேர்ந்த கலவையில் இருக்கும் .பழத்தின் தோலை உரித்து விட்டு அதன் உள்ளே இருக்கும் சிறு விதைகளை நீக்கிவிட்டு சாப்பிடுவோம் .ஆலமரத்தின் கீழே விவசாய இடங்களுக்கு போகும் வண்டிபாதை செல்லும் .ஒவ்வொரு நாளும் இதன் கீழே நெல் அறுவடை காலங்களில் நெல் கதிர் வண்டிகளும் ,கடலை பறிக்கும் காலங்களில் கடலை வண்டிகளும் எள் அறுவடையின் போது எள் கட்டுக்கள் ஏற்றிய வண்டிகளும் வருடத்தின் எல்லா நாட்களிலும் ஏதோ ஒரு மாட்டுவண்டி கடந்துகொண்டே இருக்கும் ஆலமரத்தை .


ஆலமரத்தின் கீழேதான் முருகன் ,சித்திரவேலு ,சேக்தாவுது இன்னும் நிறைய பேர் காசு கட்டி ஏட்டுக்காசு விளையாடுவார்கள் .இரண்டு ஒற்றை ரூபாய் நாணயங்களை ஒட்டி வைத்து மேலே எறிவார்கள்.கீழே விழும்போது பூவா தலையா கேட்பார்கள் .யார் கேட்டது சரியாக விழுகிறதோ அவர்களுக்கு காசு .நாங்கள் சிறுவர்கள் அவர்கள் விளையாடுவதை பார்த்துகொண்டு இருப்போம் .போக போக சைடு மாஸ் கட்ட ஆரம்பித்துவிட்டோம் .ஆனால் எங்களை நேரடியாக ஏட்டுக்காசு எரியவிடமாட்டார்கள் .இதையும் ஆலமரம் பார்த்துக்கொண்டே இருக்கும் .
இதே ஆலமரத்தின் கீழேதான் (நான் சீட்டு விளையாட கற்றுக்கொண்ட பின்பு) முப்பது ரூபாய் கட்டி ரம்மி விளையாடுவோம் .காலையில் சாப்பிட்டுவிட்டு சீட்டு விளையாடபோனால் என் அம்மா மதிய சாப்பாடு சாப்பிட திட்டிக்கொண்டே கூப்பிட வரும்போதுதான் தெரியும் மணி மூன்றை தாண்டி ஓடிக்கொண்டு இருப்பது .
சில தினங்களில் ஆலமரத்தின் கீழே சாராயம் குடித்து தீர்ந்த பிளாஸ்டிக் பைகளும் சிதறி கிடக்கும் .இரவுகளில் குடித்து கதை பேசியவர்களும் இருந்தார்கள் ஆலமரத்தின் கீழே .
சில நேரங்களில் ஆலமரத்தின் கீழே வீசும் இனிய காற்றுக்காக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்போம் .அப்படி பேசிக்கொண்டு இருக்கும்போது  யாரவது ஆலமரத்தின் கீழே இருக்கும் காளியை கும்பிட்டுவிட்டு தேங்காய் வெல்லம் கலந்த ஊறவைத்த அரிசி வாழை இலையில் வைத்து கொடுப்பார்கள் .அதை வாங்கி தின்றுகொண்டே பேசிக்கொண்டு இருப்போம் .


எனக்கு விவரம் தெரியும்போதே ஆலமரத்தை பழைய மரம் என சொல்வார்கள் .இன்று நான் நாற்பதுகளின் ஆரம்பத்தில் இருக்கிறேன் .இன்னும் அந்த ஆலமரம் இருக்கு .ஆனால் அங்கே சிறுவர்கள் விளையாடுவதோ இல்லை பெரியவர்கள் காற்றுவாங்க அமர்ந்து பேசுவதோ இல்லை .யாருமற்று தனிமையாக ஆலமரம் இருக்கு .மாட்டுவண்டி கடந்த பாதையில் இன்று ட்ராக்டர்கள் கடக்கின்றன ஆலமரத்தை .எனக்கு முன்பு ஒரு தலைமுறை பார்த்து நான் பார்த்து வளர்ந்து என் மகனும் இருபதுகளில் இன்று வளர்ந்து நிற்கிறான் .எல்லாம் பார்த்த ஆலமரம் இன்று தனிமையாக இருப்பதாய் உணர்கிறேன் நான்.


17 comments:

 1. இளைப்பாற, பஞ்சாயத்து பேச, சீட்டாட, தூளி கட்டி குழந்தையை தூங்க வைக்க என்று எல்லாக்கிராமத்திலும் ஆலமரம் உண்டு..... அருமையான பதிவு.

  ReplyDelete
  Replies
  1. மிக்கநன்றி கஸாலி

   Delete
 2. இளைப்பாற, பஞ்சாயத்து பேச, சீட்டாட, தூளி கட்டி குழந்தையை தூங்க வைக்க என்று எல்லாக்கிராமத்திலும் ஆலமரம் உண்டு..... அருமையான பதிவு. repeatu

  ReplyDelete
  Replies
  1. ரியாஜ் மிக்க நன்றி .அடிக்கடி இங்கே வாப்பா

   Delete
 3. சார் அருமையான பதிவு...சுவாரஷ்யமாகவும் இருந்தது...
  பதிவினை படிக்கும் போது எங்க ஊரு ஆலமரம் கண்முன்னே வந்து போயிச்சு..

  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. சிட்டுக்குருவி மிக்க நன்றி உங்கள் வருகைக்கு .எல்லோருக்கும் நிச்சயமாக என் போன்றே வாழ்வியல் அனுபவங்கள் இருக்கும் .ஆலமரம் இல்லா கிராமமோ அதை சார்ந்து வாழ்ந்த அனுபவங்கள் இல்லாமல் கிராமிய வாழ்வது .மறுபடியும் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

   Delete
 4. Replies
  1. மிக்க நன்றி கவிதை வீதி

   Delete
 5. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
  http://www.valaiyakam.com/page.php?page=votetools

  நன்றி

  வலையகம்
  http://www.valaiyakam.com/

  ReplyDelete
 6. என் ப்ளாக்கிற்கு நீங்க இன்னும் ஒரு முறை கூட வராததுனால உங்க ப்ளாக்கிற்கு நான் வர மாடேன்... டுக்கா!!

  ReplyDelete
 7. எனக்கு இதுவரைக்கும் நீங்க ஓட்டு போடாததுனால தமிழ் மணத்துல 4வது ஓட்டு நான் போடல! டுக்கா!

  ReplyDelete
 8. ஹி..ஹி..ஹி.. சும்மா சொன்னேன்...

  சரி பதிவுக்கு வரேன்...

  பனைமரத்தோட இணைந்த ஆலமரமா? போட்டோ போட்டிருக்கலாமே அண்ணா... நாங்களும் பார்த்து சரிச்சுருப்போமே...

  மரத்தடியில் விளையாடுவதே ஒரு சுகம் தான். மாறும் சூழ்நிலைக்கேற்ப இன்று சிறுவர்கள் அனைவரும் வீட்டிலேயே தங்கள் ஓய்வு நேரத்தை கழிப்பதால் ஆலமரம் பாவம் தன்னந்தனியாய் நிற்க வேண்டிய சூழல் வந்துவிட்டது...

  அருமையான பழைய நினைவுகளை சில நிமிடங்கள் மீட்டியெடுக்க வைத்த பதிவு.

  நன்றி அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. நான் இங்கே புதியவன் சகோதரி .இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பதிவுலகம் பற்றி அறிந்து வருகிறேன் .இனிமேல் நீங்க மட்டும் அல்ல அனைத்து பதிவுகளுக்கும் சென்று வருவேன் .தங்கள் வருகைக்கு என் நன்றி சகோதரி

   Delete
 9. எங்க ஊர்ல ஆல மரம் இல்லாம போய்டுச்சே..

  ReplyDelete
  Replies
  1. கோவி தங்கள் வருகைக்கு நன்றி .ஆலமரமே உங்க ஊர்ல இல்லையா .இல்லை ஆலமரம் இருந்தும் இல்லாமல் போயிடுச்சா

   Delete
 10. வலைச்சர அறிமுகத்திற்குப் பாராட்டுகள்.

  ReplyDelete