Wednesday 2 May 2012

அஞ்சல் செய்யப்படாத கடிதம்.......



என்னால் உனக்கு அஞ்சல் செய்யப்படாமல் போன கடிதம் காதலி 

அன்புள்ள என ஆரம்பிக்கிறேன் இந்த கடிதத்தை ,அதன் பின்பு என்ன எழுதுவது என யோசிக்கிறேன் .அன்பே எனவா இல்லை காதலி எனவா .உன் கைக்கு சேரும் முன்பு உன் அப்பாவோ இல்லை அண்ணனோ இந்த கடிதத்தை பிரிக்கலாம் .பிரித்தவுடன் என் மேல் கொலைவெறி கோபமோ இல்லை உன்னை அடிக்கவோ முற்படலாம் இல்லை இது நடக்காமலும் போகலாம் .எது நடப்பினும் நம் காதல் நிஜமன்றோ.


உன் வீட்டை நான் கடக்கும் ஒவ்வொருமுறையும் ஒரு மலைதாண்டிய உணர்வு எனக்கு .உன் கண்களை உன் வீட்டின் ஜன்னலில் தேடி இல்லையெனில் உன் வீட்டின் முற்றத்தில் தேடி கடக்கிறேன் தினமும் .உன் பொக்கைவாய் பாட்டி பார்வையிலேயே ஜாக்கிரதை என சொல்வதுபோல இருக்கும் எனக்கு .என் சைக்கிள் ஜெயின் உன் வீட்டு வாசலில் சரியாக கலண்டுகொல்லும்போது உன் அப்பாவின் மொட்டோர்சைக்கில் பயணமும் சரியாகவே இருந்து இருக்கிறது .அவர் பார்வையில் அன்பு இருக்கிறதா ஆணவம் இருக்கிறதா அறியமுடிவதில்லை என்னால் .உன் அண்ணனுக்கும் என்னைப்போல யார்மீதாவது காதல் இருக்கலாம் ,சோதித்து பாரேன் உன் அண்ணன் விட்டம் பார்த்துகொண்டு யோசிப்பதை .






நான் உன்னை எப்பொழுது பார்த்தேன் எனக்குள் எப்பொழுது நீ அரும்பாக மலர்ந்தாய் என்பதை யோசிக்கிறேன் .பதிலற்ற கேள்வியாக இருக்கிறது .காலம் நேரம் குறித்து வைக்கவில்லை நீ என்னுள் காதலாக அரும்பியதை ,நான் என்ன ஜோசியமா பார்க்க போகிறேன் நாள் நேரம் குறித்து .

நீ எல்லா நாட்களிலும் என்னை கடந்து இருக்கிறாய் புன்னகைக்க மறந்து .அது கூட என்னுள் சலனத்தை உருவாக்கி இருக்கலாம் .பேசிக்கொண்டே வந்த உன் தோழியிடம் பேசாமல் இறேன் என நீ எரிந்து விழுந்ததும் என்னுள் ஏதோ ஒன்றை உருவாக்கி சென்று இருக்கலாம் .ஏன் இப்படி இருக்கிறாய் என காரணம் தேடியளைந்தே நான் காதலுக்குள் விழுந்து போனேன் உன்னிடம் .

உன்னிடம் ஒரு வார்த்தை பேசுவதற்கு முன்பு உன் தோழிகளிடம் ஓராயிரம் முறை பேசி இருப்பேன் உன்னைப்பற்றி .அனைவரும் சிரித்தனர் அசடு நான் என .எங்களுக்கே புரியாத எங்கள் தோழியிடம் என்ன கண்டீர்கள் என கேட்டனர் .பதில் எங்கே என்னிடம் இருக்கு ,பதில் தெரிந்தா எனக்குள் காதல் பூத்தது .







இன்னும் எழுதலாம் நான் இடம் இல்லை இந்த கடிதத்தில் .ஒன்றை மட்டும் சொல்லி இந்த கடிதம் முடிக்கிறேன் ,உன் வெட்கத்தின் புன்னகை பார்த்தது பள்ளியின் முக்கில் சைக்கிள் வளைக்கிறேன் என போட்டு விழுந்து தூக்கிவிட ஆளில்லாமல் அதிரிச்சியும் வெட்கமுமாய் அண்ணார்ந்து நீ பார்க்க அசடாட்டம் நான் பார்க்க உன் இதழோரம் மெல்லியதாய் அரும்பிய புன்னகை இன்னும் ஏன் கண்ணுக்குள் என் காதலி....

1 comment:

  1. காதலுடன் கடிதம்!பிடித்தமாக இருந்தது!

    ReplyDelete