Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Saturday, 2 February 2013

கடல் பார்க்க ஐஞ்சு ரூவாக்கு மேல செலவு செய்யாதீங்க


கடல் எப்பொழுது எனக்கு முதல் பரிச்சயம் நினைவுபடுத்தி பார்க்கிறேன்.

மூன்றாவது படிக்கும்போது சென்ற சிறிய இன்ப சுற்றுலாதான் முதன் முதலில் கடல் பார்த்த அனுபவம்.

அந்த சுற்றுலாவுக்கு ஒரு சர்பத் சேர்த்து போய் வர மொத்தமே ஐந்து ரூபாய் மட்டுமே.மதிய உணவு புளிச்சோறு கட்டி எல்லாக்குழந்தகளும் கொண்டுபோனோம்.கூடுதலாக வீட்டில் ஐந்து ரூபாய் கொடுத்தார்கள்.

சுற்றுலா சென்ற இடம் பேராவூரனிக்கு அருகில் உள்ள மனோரா.

கடலும் கடல் ஒட்டி மனொரா கம்பீரமாக நின்றது அந்த வயதில் ஆச்சரியம்.பேருந்து தூர வரும்போதே உயரமாக தெரிந்த மனோரா பார்த்து எல்லா குழந்தைகளும் கை கொட்டி சந்தோசமாய் ஆர்ப்பரித்தது நினைவில் இன்னும் இருக்கு.

இருபத்து அய்ந்து பைசா கொடுத்து மொனோரா உள்ளே சென்று ஆட்டம் போட்டதும் உச்சிவரை சென்று கீலே பார்த்தபோது பயமாக இருந்தது.

அதன் பின்பு கடல் நோக்கி ஓடினோம்.கடல் அலை இல்லாத கடல்.இப்ப சென்று பார்த்தாலும் அமைதியாகவே இருக்கும் கடல்.சகதியும் பாசிகள் அடர்ந்தும் கடலோரம் இருந்தது.இருந்தும் கால் நனைத்து விளையாடியத்தும் ,சங்கு சிப்பிகள் தேடி எடுத்ததும் ஒருவரை ஒருவர் துரத்தி விளையாடியதும் இன்னும் நினைவில் இருக்கு.

மாலை நேரம் நெருங்கியவுடன் ஆசிரியர் வீடு திரும்ப அழைத்ததும் எல்லோரும் கடலையும் மனோராவையும் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வந்தது பசுமையாக இருக்கு.

இப்பவும் மனோரா சென்றே வருகிறேன்.காலாங்கள் கடந்தும் கம்பீரமாக நிற்க்கிறது மனோரா.
கடலும் அன்று பார்த்தது போலவே அலைகள் இல்லாமல் அமைதியாகவே இருக்கு.

Friday, 18 January 2013

முகநூளில் முகம் காட்டியவை .......


ஜன்னலோர பேருந்தில்
கடக்கும் முகங்களுக்குள்
எந்நாளும் தேடிக்கொண்டு
இருக்கிறேன்
உன் ஒற்றை புன்னகைதனை!!!!


-------------------------------



கவிதை எழுதனும்
என்பதற்க்காக உன்
கண்களை பார்க்கவில்லை
உன் கண்களை
பார்த்ததால் கவிதை
எழுதினேன்
கவிதை எழுதனும்
என்பதற்க்காக உன்
கண்களை பார்க்கவில்லை
உன் கண்களை
பார்த்ததால் கவிதை எழுதினேன்!!


--------------------------------------------
  ஏதேனும் எழுதிக்கொண்டு இருக்கும்போது அங்கங்கே கருத்துகந்தசாமி எட்டிப்பார்ப்பதை தடுக்குமுடிவதில்லை எல்லோருக்கும் மற்றும் எனக்கும் இதோ இப்படி டக்குனு தோனுச்சு .....



தூரம் அதிகமில்லை ஓட்டப்பந்தயத்தில் முதலில் வந்தவருக்கும் அடுத்த நிலையில் வந்தவருக்கும்.இங்கே தோல்வி என எதுவும் இல்லை தூரமும் அதிகமில்லை.அதுபோலத்தான் வாழும் வாழ்க்கையும் செல்லும் பயணங்களும்.!இழப்புகள் ஏற்ப்பட்டு இருக்கலாம் ஆனால் வாழ்க்கயை இழந்துவிடவில்லைதானே.

பார்வையை முன்னோக்கி மட்டுமே வையுங்கள் எல்லாமே நம் கைகளுக்குள்  அடங்கும்!

Tuesday, 4 September 2012

ஒரு கிராமத்தானின் பதிவுலக மாநாட்டு அனுபவங்கள்

ஒருநாள் நண்பர் கஸாலி போன் செய்து சென்னை பதிவர் சந்திப்புக்கு வந்துவிடு என சொன்னார் .நானும் சரி என சொல்லிவிட்டேன் .இரண்டுநாள் கழித்து நானும் என் மனைவியும் அவங்க அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டர் சைக்கிளில் திரும்பிக்கொண்டு இருந்தோம் .அப்பொழுது பேச்சோடு பேச்சாக நான் சனிக்கிழமை சென்னைக்கு போகிறேன் என்று சொன்னேன் .எதற்கு என கேட்டாள்.ப்ளாக்கர் மீட்டிங் என சொன்னேன் .நானும் வருகிறேன் என சொன்னாள்.நான் கூட்டிட்டு போக முடியாது .உன்னை கொண்டுபோய் ஹோட்டலில் விட்டுவிட்டு மறுபடியும் கூட்டிட்டு வருவதற்கு எதற்கு சென்னைக்கு வரவேண்டும் என மறுத்துவிட்டேன் .ஒரு வழியாக சம்மதம் வாங்கி வெள்ளிக்கிழமை இரவு அறந்தாங்கியில் இருந்து இரவு எட்டு மணிக்கு பயணமானேன் .பஸ் இடையிலேயே கெட்டுபோக போகுது என தெரியாமலே .

பயணம் சென்றுகொண்டு இருக்கும்போது திருச்சிதாண்டியவுடன் பஸ் கெட்டுபோய் விட்டது .அதன்பின்பு இரண்டுமணி நேரம் கழித்து வேறு ஒரு பஸ் வந்து எங்களை ஏற்றிக்கொண்டு சென்னை பயணம் ஆனது .காலை ஐந்து மணிக்கு சென்னையில் இருக்கவேண்டிய பஸ் எட்டு மணிக்கு கோயம்பேட்டில் என்னை இறக்கிவிட்டு சென்றுவிட்டது .

ராஜேந்திரகுமார் நாவலில் வரும் ஞே எனும்  சொல்லுக்கு ஏற்றார் போல என் விழி பிதுங்கி எழும்பூருக்கு எப்படி போவது என தெரியாமல் நின்றேன்.ஒரு வழியாக எழும்பூர் வந்து ஹோட்டல் ரீகலில் தங்கினேன் .கொஞ்சநேரம் ஓய்வெடுத்துவிட்டு உணவருந்த சரவணபவன் உணவகம் சென்றேன் .ரெண்டு இட்லி ஒரு வடை ஒரு தோசை சாப்பிட்டேன் .ப்ரெஷர் உள்ள ஆளாக இருந்தால் நிச்சயம் எனக்கு மயக்கமே வந்து இருக்கும் கொண்டுவந்து கொடுத்த பில்லை பார்த்து .பெரிய இட்லியாக பத்து ரூபாய்க்கு ஐந்து இட்லி கிடைக்கும் ஊரில் பிறந்த எனக்கு நூற்றி பதினாறு ரூபாய் என்பது மிக மிக அதிகம் .டிப்ஸ் பத்து ரூபாய் வேறு

ஹோட்டலுக்கு நண்பர் அருள் எழில் வந்து சந்தித்தார் .அவருடன் ஒருமணி நேரத்திற்கு மேல் பேசிக்கொண்டு இருந்தேன் .அதன்பின்பு நண்பர் கஸாலி இருக்கும் இடம் நோக்கி சென்றேன்  ,கஸாலியிடம் நீண்டநேரம் உரையாடிக்கொண்டு இருந்தேன் .மதிய உணவருந்தும் நேரமும் வந்து விட்டது .கஸாலி நான் சாப்டுற சாப்பாடு உனக்கு சரிவராது .பக்கத்தில் கேரள உணவகம் ஒன்று இருக்கு .அங்கே போய் சாப்பிடு என சொன்னார் .நானும் அந்த கேரள உணவகம் குமரகோம் தேடிசென்று விறு விறு என உள்ளே சென்று
அமர்வதற்கு இடம் தேடினேன் .அப்பொழுது ஒருவர் சார் என பின்னாடி நின்று ர
அழைத்தார் .என்ன என கேட்டபோது வெளியில் அமருங்கள் .உங்கள் முறை வரும்போது அழைப்போம் என சொன்னார் .அப்போ;அப்பொழுதுதான்
கவனித்தேன் ஏற்கனவே பத்து பேருக்கு மேல் தங்கள் முறைக்கு அமர்ந்து இருப்பதை .இவ்வாறு சனிக்கிழமை ஓடி விட்டது .

ஞாயிறு காலையில் பதிவர் சந்திப்பு நடக்கும் இடத்திற்கு செல்வதற்கு கஸாலிக்கு போன் செய்து வழி கேட்டேன் .அப்படியே ஆட்டோ காரரிடம் போய் அஞ்சுவிளக்கு செல்லவேண்டும் என சொன்னபோது கொல்லு கொலைக்கு அஞ்சாமல் நூற்றி ஐம்பது கேட்டார் .என்னங்க விலை கூடுதலாக கேக்குறீங்க என சொன்னபோது நான் திரும்பி வரும்போது வெறும் ஆளாக வரவேண்டும் என சொன்னார் .வேறுவழி அதே ஆட்டோவில் மண்டபம் வந்து சேர்ந்தேன் .

மண்டபத்தில் இறங்கி கஸாலிக்கு போன் செய்து  எங்கே இருக்கே என்றேன் .மேலே ஏறிவா என சொன்னார் .மேலே ஏறி சென்றவுடனே நிறைய பேர் என்னிடம் வந்து தங்களை அறிமுகபடுத்திகொண்டு என்னையும் நலம் விசாரித்தனர் ,சிலர் மிக நெருக்கமாக நெடுநாள் பழகியவர்கள் போல பேசினார்கள் .அப்பொழுதுதான் தெரிந்தது கஸாலி ஏற்கனவே என் கொள்கை பரப்பு செயலாளராக செயல்பட்டு இருக்கிறார் என்பது .மிக்க நன்றி கஸாலி .

அப்புறம் திடிர்னு என் கையில் மைக்கை கொடுத்து உங்களை அறிமுகபடுத்திகொள்ளுங்கள் என சொன்னார்கள் .தபூசங்கர் கவிதை தலைப்பு வெட்கத்தை கேட்டாள் என்ன தருவாய் என்பது போல வெட்கம் பிதுங்கி திங்க முதலில் பேச மறுத்தேன் ,பின்பு ஒரு வழியாக பேசி முடித்தேன் ,பின்பு நிறைய நண்பர்களிடம் பேசினேன் ,அதன்பின்பு மச்சான் சிராஜுதீன் வந்தார் .கஸாலி அவருக்கு தெரிந்த நண்பர்கள் அனைவரிடமும் அறிமுக படுத்தினார் .

பின்பு பதிவர்கள் அறிமுகம் நடந்தது .ஏறக்குறைய எல்லோருமே தயார் நிலையில் வந்து இருப்பார்கள் போல .மைக் சில நேரம் தன்வேலையை சரிவர
செய்யாத போதும் பதிவர்கள் தங்களை மிக அழகாக அறிமுகபடுத்திக்கொண்டார்கள் .அப்பொழுதுதான் எனக்கு தெரிந்தது மறுபடி மேடையில் என்னை அறிமுகபடுத்திகொள்ள வேண்டும் என்பது .ஏனோ இந்த நேரத்தில் மன்னன் ரஜினி கவுண்டமணி தியேட்டர் காமடி நினைவுக்கு வந்தது .மேடையில் நான் ஏறி நின்றபோது என் காலடியில் ஏனோ பூமி நழுவி ஓடிக்கொண்டு இருந்தது .மேடையில் கேபிள் சங்கர் என்ன சொன்னார் நான் என்ன பேசினேன் என்பது தெரியவில்லை .ஒருவழியாக பதிவர்கள் அறிமுகம் முடிந்து உணவருந்தும் வேலை தொடங்கியது .அதன் பின்பு எல்லோரிடமும் பேசிக்கொண்டு இருந்தேன் .

மண்டபத்திற்கு வெளியே நின்று பேசிக்கொண்டு இருந்தோம் .திடிரென பட்டுக்கோட்டை பிரபாகர் நடந்து வந்துகொண்டு இருந்தார் .மனம் திடிரென துள்ளிக்குதித்தது .இளம் வயதில் அவர் எழுதிய நாவல்களை விரும்பி படித்தவன் நான் .தொட்டால் தொடரும் நாவல் ஆனந்தவிகடனில் வெளிவந்தபோது அறந்தாங்கி சென்று புக் வாங்கி வந்து படிப்பேன் .அந்த அளவு
பிகேபி பைத்தியம் நான் .விழா மேடையில் பிகேபி அமர்ந்து இருந்தபோது அவர் அருகில் சென்று என்னை அறிமுகபடுத்திகொண்டேன் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் கிராமம் நான் என .

மறுபடியும் மூத்த பதிவர்களை சிறப்பிக்கும் விழா பிகேபி தலைமையில் நடந்தது .ஒவ்வொருவராக அறிமுகபடுத்தி சிறப்பித்துகொண்டு வரும்போது திடிரென என் பெயரை சொல்லி அழைத்தார்கள் மூத்தபதிவர் ஒருவருக்கு சால்வை போர்த்துவதற்கு .மேடை ஏறியபொழுது விழாவை வழி நடத்திக்கொண்டு இருந்த சுரேகா என் தலைமுடி ரகசியம் கேட்டார் .அதையும் சொல்லிவிட்டு சால்வை போர்த்திவிட்டு இறங்கி என் பணியை முடித்தேன் .

இன்னும் நிறைய எழுதலாம் .இங்கே எல்லோரும் எழுதி விட்டார்கள் .அதனால் இதை என் அனுபவமாக மட்டுமே எழுதினேன் .யாரையும் குறிப்பிட்டு எழுத முடியவில்லை .விழாவுக்கு வந்த அனைத்து பதிவர்களுக்கும் என்னிடம் உரையாடிய நண்பர்கள் ,விழா சிறக்க உழைத்த பதிவர்கள் எல்லோருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்




Monday, 18 June 2012

என் மலரும் நினைவுகள்.......



என் கல்யாணத்தின்போது அனைத்து வேலைகளையும் நானே செய்தேன் .என் அண்ணனுக்கும் எனக்கும் மூன்று நாள் இடைவெளியில் கல்யாணம் நடந்தது .என் அண்ணன் கல்யாணத்திற்கு பத்து நாளைக்கு முன்புதான் ஊருக்கு வந்தார் .அதனால் ஏறக்குறைய அனைத்து வேலைகளையும் நானே செய்தேன் .

அப்படி இருக்கும்போது எனது தந்தை என்னை கூப்பிட்டு உன் கல்யாணத்தன்று பாட்டுக்கச்சேரி ஏற்பாடு செய் என சொல்லிவிட்டார் .அண்ணனுக்கு வெளியூர் பொண்ணு ,எனக்கு உள்ளூர் பொண்ணு .அண்ணன் வரவேற்பும் ,அன்றே எனக்கு திருமணமும் என ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .

கல்யாண வீடுகளில் டெக்கரேஷன் செய்வது அப்பொழுதுதான் ஆரம்பம் ஆகி இருந்த நேரம் .அப்ப அறந்தாங்கியில் சுபால் டெக்கரேஷன் என ஒருவர் நடத்திக்கொண்டு இருந்தார் .அவர் மதுரையை சேர்ந்தவர் .அவரிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன் பாட்டுக்கச்சேரி வைக்கணும் என .அவர் மதுரையில் எனக்கு தெரிந்த நிறைய குருப் இருக்கு வாங்க போய் பேசிவிட்டு வருவோம் என சொன்னார் .நானும் அவருடன் மதுரைக்கு கச்சேரி புக் செய்ய சென்றேன் .

நாங்க மதுரையில் அப்பொழுது பிரபலமாக இருந்த ஒயிட் ரோஸ் என்ற குருப்பை போய் பார்த்தோம் .அவர்கள் எங்களிடம் சொன்னார்கள் எங்கள் குருப் மட்டும் வந்தால் ஒரு ரேட்.இங்கே நெல்லை பிரபாகர் என்பவர் மிக பிரபலம் அவரை அழைத்து வந்தால் கூடுதல் தொகை என சொன்னார்கள் .அவர் பாடிய விடியோவையும் போட்டு காட்டினார்கள் .எஸ் பி பாலசுப்ரமணியம் குரலை நகல் எடுத்து இருந்தது அவர் குரல் .எனக்கும் மிக பிடித்து விட்டது .அட்வான்ஸ் கொடுத்து புக் செய்துவிட்டேன் .

ஊருக்கு வந்து நெல்லை பிரபாகர் கலக்கும் மதுரை ஒயிட் ரோஸ் இன்னிசை குழுவினரின் இசைக்கச்சேரி நடைபெறும் என நோட்டிஸ் அடித்து எங்கும் ஒட்ட சொல்லிவிட்டேன் .

கல்யாணத்தன்று இரவு இசைக்குழுவும் வந்து மேடையில் ஆர்கெஸ்ட்ரா பொருட்களை சரி செய்துகொண்டு இருந்தார்கள் .நல்லகூட்டம் கூடி விட்டது .எனக்கு ஊரில் நண்பர்கள் வட்டமும் கொஞ்சம் பெரியது .எல்லோரும் வந்துவிட்டார்கள் .சரியாக ஒன்பது மணிக்கு கச்சேரி ஆரம்பம் ஆனது .முதலில் இஸ்லாமிய பாடல்கள் பாடினார்கள்

.அனால் மேடையில் நெல்லை பிரபாகரோ,பெண் பாடகியோ யாரும் இல்லை .இரண்டு மூன்று பாடல்கள் முடிந்தபின்பு வருவார்கள் என பார்த்தோம் .மூன்று பாடல் முடிந்த பின்பும் நெல்லை பிரபாகர் வரவில்லை .நான்காவது பாடலுக்கு இரண்டு நபர்கள் மைக்கை பிடித்து தயாராக இருந்தார்கள் .இசை ஆரம்பம் ஆகி பாட ஆரம்பித்தார்கள் .என் முகம் போனபோக்கை இன்று பார்த்தாலும் சொல்ல வார்த்தை இருக்காது .அந்த இருவரில் ஒரு ஆண் பெண் குரலில் பாடினார் .என் நண்பர்கள் எல்லோரும் என்னை கேலி செய்தே நோகடித்து விட்டனர் .நெல்லை பிரபாகரும் வரவில்லை .பெண் பாடகியும் வரவில்லை .இன்று வரைக்கும் என் நண்பர்கள் அந்த கச்சேரியை சொல்லி சிரிப்பார்கள் .

நெல்லை நண்பர்களே இன்னும் அந்த நெல்லை பிரபாகர் பாடிக்கொண்டு இருக்கின்றாரா .

மதுரை நண்பர்களே இன்னும் அந்த ஒயிட் ரோஸ் இசைக்குழு இயங்கிக்கொண்டு இருக்கிறதா

Wednesday, 2 May 2012

அஞ்சல் செய்யப்படாத கடிதம்.......



என்னால் உனக்கு அஞ்சல் செய்யப்படாமல் போன கடிதம் காதலி 

அன்புள்ள என ஆரம்பிக்கிறேன் இந்த கடிதத்தை ,அதன் பின்பு என்ன எழுதுவது என யோசிக்கிறேன் .அன்பே எனவா இல்லை காதலி எனவா .உன் கைக்கு சேரும் முன்பு உன் அப்பாவோ இல்லை அண்ணனோ இந்த கடிதத்தை பிரிக்கலாம் .பிரித்தவுடன் என் மேல் கொலைவெறி கோபமோ இல்லை உன்னை அடிக்கவோ முற்படலாம் இல்லை இது நடக்காமலும் போகலாம் .எது நடப்பினும் நம் காதல் நிஜமன்றோ.


உன் வீட்டை நான் கடக்கும் ஒவ்வொருமுறையும் ஒரு மலைதாண்டிய உணர்வு எனக்கு .உன் கண்களை உன் வீட்டின் ஜன்னலில் தேடி இல்லையெனில் உன் வீட்டின் முற்றத்தில் தேடி கடக்கிறேன் தினமும் .உன் பொக்கைவாய் பாட்டி பார்வையிலேயே ஜாக்கிரதை என சொல்வதுபோல இருக்கும் எனக்கு .என் சைக்கிள் ஜெயின் உன் வீட்டு வாசலில் சரியாக கலண்டுகொல்லும்போது உன் அப்பாவின் மொட்டோர்சைக்கில் பயணமும் சரியாகவே இருந்து இருக்கிறது .அவர் பார்வையில் அன்பு இருக்கிறதா ஆணவம் இருக்கிறதா அறியமுடிவதில்லை என்னால் .உன் அண்ணனுக்கும் என்னைப்போல யார்மீதாவது காதல் இருக்கலாம் ,சோதித்து பாரேன் உன் அண்ணன் விட்டம் பார்த்துகொண்டு யோசிப்பதை .






நான் உன்னை எப்பொழுது பார்த்தேன் எனக்குள் எப்பொழுது நீ அரும்பாக மலர்ந்தாய் என்பதை யோசிக்கிறேன் .பதிலற்ற கேள்வியாக இருக்கிறது .காலம் நேரம் குறித்து வைக்கவில்லை நீ என்னுள் காதலாக அரும்பியதை ,நான் என்ன ஜோசியமா பார்க்க போகிறேன் நாள் நேரம் குறித்து .

நீ எல்லா நாட்களிலும் என்னை கடந்து இருக்கிறாய் புன்னகைக்க மறந்து .அது கூட என்னுள் சலனத்தை உருவாக்கி இருக்கலாம் .பேசிக்கொண்டே வந்த உன் தோழியிடம் பேசாமல் இறேன் என நீ எரிந்து விழுந்ததும் என்னுள் ஏதோ ஒன்றை உருவாக்கி சென்று இருக்கலாம் .ஏன் இப்படி இருக்கிறாய் என காரணம் தேடியளைந்தே நான் காதலுக்குள் விழுந்து போனேன் உன்னிடம் .

உன்னிடம் ஒரு வார்த்தை பேசுவதற்கு முன்பு உன் தோழிகளிடம் ஓராயிரம் முறை பேசி இருப்பேன் உன்னைப்பற்றி .அனைவரும் சிரித்தனர் அசடு நான் என .எங்களுக்கே புரியாத எங்கள் தோழியிடம் என்ன கண்டீர்கள் என கேட்டனர் .பதில் எங்கே என்னிடம் இருக்கு ,பதில் தெரிந்தா எனக்குள் காதல் பூத்தது .







இன்னும் எழுதலாம் நான் இடம் இல்லை இந்த கடிதத்தில் .ஒன்றை மட்டும் சொல்லி இந்த கடிதம் முடிக்கிறேன் ,உன் வெட்கத்தின் புன்னகை பார்த்தது பள்ளியின் முக்கில் சைக்கிள் வளைக்கிறேன் என போட்டு விழுந்து தூக்கிவிட ஆளில்லாமல் அதிரிச்சியும் வெட்கமுமாய் அண்ணார்ந்து நீ பார்க்க அசடாட்டம் நான் பார்க்க உன் இதழோரம் மெல்லியதாய் அரும்பிய புன்னகை இன்னும் ஏன் கண்ணுக்குள் என் காதலி....

Tuesday, 1 May 2012

மே தினமும்...முன்னேறிய நானும்....



மே தினம் எல்லா வருடமும் என்னை கடந்து சென்ற நாள்தான் .இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் யாருக்கேனும் இந்த நாளில் வாழ்த்து சொல்லி இருக்கேனா என்று யோசித்தால் இல்லை என்ற பதிலே வருகிறது .இந்த முகநூலுக்கு வந்த பிறகு எல்லா நாளிலும் யாருக்கேனும் பிறந்தநாள் வாழ்த்தோ அல்லது விஷேச தின வாழ்த்தோ எழுதிகொண்டுதானிருக்கிறேன்.

உழைப்பாளர் தினம் தொழிலாளிக்கு மட்டுமா அல்லது ஊதியம் கொடுக்கும் முதலாளிக்குமா என்று எனக்கு தெரியவில்லை .எல்லோருக்குமே வாழ்த்துக்கள் சொல்லுவோம் .

நான் முதலாளியாகவும் இருந்து இருக்கிறேன் கிராமத்தில் என் விளைநிலத்தில் வேலை பார்த்த தொழிலாளிகளுக்கு .நான் தொழிலாளியாகவும் இருந்து இருக்கிறேன் மலேசியா வந்து .சில வருடங்கள் உழைத்து கொஞ்சம் பணம் சேர்த்துக்கொண்டு சிறு தொழில் ஒன்றை இங்கே ஆரம்பித்து அதற்க்கு நானே முதலாளியாகவும் நானே தொழிலாளியாகவும் இருந்து இருக்கிறேன் .

சின்ன சறுக்கலில் அந்த தொழிலை இழந்து மறுபடியும் தொழிலாளியாக வேலை பார்த்து இருக்கிறேன் .அந்த முதலாளியிடமே அவரது சிறு தொழில் ஒன்றை விலைபேசி குறைந்த வருமானமாக இருந்தாலும் நிம்மதியா சில மாதங்கள் நடத்திக்கொண்டு இருந்தேன் .என் போதாத காலம் நான் தாயகம் திரும்ப வேண்டி இருந்ததால் அந்த கடையை தெரிந்த நண்பரிடம் பார்த்துக்க சொல்லி விட்டு வந்தேன் ,ஆனால் அவர் வேறு ஒருவரிடம் கடையை கொடுத்து அந்த ஆள் அந்த கடையின் மேல் கடன் வைத்து அந்த கடனால் நான் மலேசியா மறுபடி வந்தபோது உதடு தெறித்து மூக்குடைந்து ரத்தம் வழிய வழிய அடி வாங்கி இருக்கிறேன் ,என்னால் என் தம்பியும் அடி வாங்கினான் .

அதில் இருந்து மீண்டு மறுபடியும் வேலை செய்தேன் .வேலை செய்யும்போதே வினை ஒன்று பக்கத்தில் வேலை செய்பவன் ரூபத்தில் இருந்தது .அவனால் மீண்டும் அந்த வேலையை உதறிவிட்டு மறுபடியும் சிறு தொழில் ஒன்றை நண்பர்களிடம் கடன் வாங்கி ஆரம்பித்து நடத்தினேன் .அதில் என் நண்பன் ஒருவனும் பங்குதாரர் .திடிரென அவன் கடையில் நான் இருந்து பார்த்துக்கொள்கிறேன் .நீ வேறு கடை பார் என்றான் .அதற்கும் தலையாட்டிவிட்டு வெளியில் வந்தேன் .

மறுபடியும் சிறிய கிராமம் ஒன்றில் கடை திறந்தேன் .அந்த கடையையும் மூடிவிட்டு நான் பார்க்க தொழிலாளியாக இருந்த ஒருவரிடம் தொழிலாளியாக சேர்ந்தேன் .அப்பொழுது நான் அடைந்த மன உளைச்சலுக்கு அளவே இல்லை .

இப்பொழுது எல்லாம் கடந்து சிறு தொழில் ஒன்றை வெற்றிக்கரமாக நடத்திக்கொண்டு வருகிறேன் .வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் சகஜம் .எப்பொழுதும் நம் மனதினை எல்லாவற்றிலும் பொருந்திகொல்லுமாறு வைத்து இருக்கவேண்டும் .முதலாளியா இருந்த நாம் வேலை பார்ப்பதற்கு சங்கடபட்டோம் என்றால் நாம் வீழ்வதை யாரும் தடுக்க முடியாது .

நம்மால் முடியாது என்பது எதுவும் இல்லை என நினையுங்கள் நம்மால் எதுவும் முடியும் .இதுவே நான் என் வாழ்வில் கற்றுக்கொண்ட பாடம் .

உங்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்

Monday, 30 April 2012

காலமாற்றங்களும் இசைவட்டுக்களும் நானும்


நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு போகும் முன்பு எப்பொழுதும் போல் உணவகம் சென்றேன் .உணவருந்தி முடித்துவிட்டு அங்கிருக்கும் வை பை உபயோகபடுத்தி எனது செல்போனில் பாடல்கள் பதிவிறக்கம் செய்தேன் .முப்பத்து எட்டு பாடல்கள் ஒன்றரை மணிநேரத்தில் பதிவிறக்கம் செய்து முடித்தேன் .

காலமாற்றங்கள் மிக விநோதங்கள் கொண்டது .கிராமபோன் எனும் இசைதட்டுக்களில் ஆரம்பித்து இன்று ப்ளுரே குறுந்தகடுகளில் வந்து நிற்கிறது .



எனது சிறுவயது பாடல்கள் கேட்கும் அனுபவங்கள் இலங்கை வானொலியை சேர்ந்தே இருந்தது .அந்த வானொலி அறிவிப்பாளர்கள் பாடல் ஒளிபரப்பும் முன்பு பேசுவது அந்த தமிழ் உச்சரிப்பு இன்று கேட்க முடிவதில்லை .





எங்கள் வீட்டு ரேடியோ மிக பெரியதாக இருக்கும் .எங்கள் ரேடியோ போலவோ நான்கைந்து ரேடியோக்கள் எங்கள் கிராமத்து வீடுகளில் இருந்தது .அவை எல்லாம் மலேசியாவில் இருந்து கொண்டுவரப்பட்டவை .


வருடத்தில் கிராமங்களுக்கு இரண்டொதொரு தடவை அதிகாரிகள் வீடு தேடி வரும்பொழுது எல்லா வீட்டு ரேடியோக்களும் துணிகள் சுற்றப்பட்டு அறைகளில் ஒளித்து வைக்கப்படும் .அன்று ரெடியோக்களுக்கு லைசென்ஸ் எடுக்கவேண்டும் .அந்த ரேடியோவில் தான் குரு,திரிசூலம் போன்ற திரைப்படங்களின் ஒலிசித்திரங்கள் ஞாயிறுகளில் கேட்பது .வீட்டில் உள்ள பெண்கள் விவித பாரதியில் இரவு ஏலே முக்கால் மணிக்கு ஒலிபரப்பாகும் நாடகங்கள் கேட்பர் 




.

ரேடியோக்களுக்கு பிறகு கல்யாணவிடுகளில்,காது குத்து விழாக்களில் பெரிய இசை தட்டுக்களில் கேட்ட பாடல்கள் .எல்லா கல்யாண வீடுகளிலும் வாராயோ தோழி வாராயோ இல்லாமல் பாடல்கள் கிடையாது .பாடல் குழாய்களில் ஒலிக்கும்போது கிராமபோன் அருகே ஆள் கண்டிப்பாக அமர்ந்து இருக்கும் .சரியான வேகத்தில் சுழலா விட்டால் பாடல் வாய்க்குள் கூழாங்கற்கள் போட்டு பாடுவது போல் இருக்கும் ,அதனால மைக்செட் ஓட்டுபவர் பக்கத்திலேயே இருப்பார் .நான் அவர்களோடு அமர்ந்து அந்த பெரிய தட்டுக்களின் அட்டை படத்தில் இருக்கும் படத்தையும் பாடல் பாடியவர்கள் பெயரையும் படித்துக்கொண்டு இருப்பேன்.



இதன் பிறகுதான் கேசட் பிளேயர் வந்தது .கேசட்டுக்களில் பிடித்த பாடல் பதிந்து கேட்பது ஒரு சுகம் .ஆனால் எங்கு நல்ல பாடல்கள் கிடைக்கும் ,எங்கே நன்றாக பாடல் பதிந்து கொடுப்பார்கள் என்று தேடியலைந்து பாடல்கள் பதிந்தது இன்று நினைத்தாலும் வேடிக்கையாக இருக்கிறது .நான் பாடல்கள் பதிந்தது பெரும்பாலும் அறந்தாங்கி தாலுகா ஆபிஸ் ரோட்டில் இயங்கிய பொன்னி மியூசிக்கல் கடையில் தான் .இங்கு பதிந்த கேசட்டுக்கள் நன்றாக இருக்கும் கேட்க .ஒவ்வொரு ஊரிலும் இரண்டு மூன்று மியூசிக்கல் கடைகள் இருக்கும் .பெரும்பாலும் கடைகள் பெயர் இளையராஜா பெயர்களில் ஆரம்பித்து இருக்கும் .நிறைய கடைகள் பெயர் ராகதேவன் மியுசிக்கல்ஸ் .




 யார் வெளிநாட்டில் இருந்து வந்தாலும் DTK,SONY 60,90,120 என்ற அளவுகளில் கேசட் வாங்கி வருவார்கள் .இன்று இந்த கேசட்டுக்கள் இருக்கா என்பது தெரியவில்லை .சில நேரங்களில் ஒன் டச் கேசட் வாங்கி பதிவோம் .இந்த ஒன் டச் கேசட் பாடல் பதிந்து வெளிவந்த கேசட்டுக்கள் .

ஒரு கேசட் பதிவதற்கு பாடல் தேர்வு செய்ய ஒருவாரம் ஆகிவிடும் .நண்பர்களிடம் என்ன பாடல் நல்லா இருக்கும் என கேட்டு அம்பது பாடல் தேர்வு செய்து அதிலும் பின்பு பாடல்கள் கழித்து ஒருவழியாக கேசட் கடைக்கு சென்றால் நாம் தேர்வு செய்து வைத்து இருக்கும் பாடல்களில் சில பாடல்கள் அவரிடம் இருக்காது .மறுபடியும் பழைய லிஸ்ட்ல இருந்து சில பாடல்கள் தேர்வு செய்து கொடுத்தால் அவர் வாங்கி கொண்டு இரண்டு வாரம் சென்று வாங்கி கொள்ளுங்கள் என தேதி கொடுப்பார் ,இவ்வாறு ஒரு கேசட் பதிந்து அதை கேட்க ஒரு மாதம் ஆகிவிடும் .அந்த கேசட் வீட்டுக்கு வந்ததில் இருந்து ஒரு வாரம் வரைக்கும் திரும்ப திரும்ப ஓடிக்கொண்டு இருக்கும் .



இதன் பின்பு என் சித்தப்பா கென்வூட் காம்பாக்ட் சீடி பிளேயர் கொண்டு வந்தார் .அதில் முதன் முதலில் பாடல் கேட்க்கும்போது பாடல்களின் இசை பிரிந்து தனியாக ஒலிக்கும்போது மிக வித்தியாசமாக இருந்தது ,நான் பள்ளிக்கூடம் விட்டவுடன் போவது சித்தப்பா வீட்டுக்கு பாடல் கேட்ப்பதற்கு .

இன்றோ ஒரு இணைய இணைப்பு உள்ள செல்போன் இருந்தால் போதும் இருக்கும் இடத்தில் இருந்து விரும்பிய பாடலை இலவசமாக பதிவிறக்கம் செய்து கேட்கலாம் ,ஆனால் பாடல் தேடியலைந்து பதிந்து கேட்ட சுகம் இதில் இல்லை

Friday, 27 April 2012

வயலோடு சில நினைவுகள்



எல்லோருக்குள்ளும் நினைவுகள் என்ற ஒன்றை சுமந்துகொண்டுதான் அலைகிறோம் .
வாழ்ந்து வந்த தடங்களின் தொகுப்புகளாக அவை நெஞ்சில் நிலைபெற்று இருக்கும் .
எனக்குள்ளும் சில நினைவுகளை சுமந்தே அலைகிறேன் .

நான்.., 
இன்று செய்வது ஒன்றும் அறியாமலேயே..
ஒன்றையும் செய்ய இயலாமலேயே 
உலகத்தைக் கணிணிமுன் அமர்ந்து 
வெற்றாய்ப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் .
காலமாற்றத்தில் விவசாயக்
குடும்பத்தில் பிறந்து விவசாயம் மறந்த ஒருவனாக நானும் இருக்கிறேன் .

திரும்பி வராத நாட்கள் அவை .
இன்றும் எங்கள் வீட்டிற்கு விவசாய இடங்கள் சொந்தமாய் இருந்தாலும் யாரோ அவற்றை குத்தகைக்கு விவசாயம் செய்கிறார்கள் .

காவிரி ஆற்றின் கடைநிலை விவசாயிகள் நாங்க... ,கல்லணையில் தண்ணீர் திறந்தால்..,
தண்ணீர் இரண்டு வாரம் கழித்தே எங்கள் ஊர் வந்தடையும் .


தண்ணீர் வந்தவுடன் பயிர் நெல் எடுத்து ஆற்றின் கரையோரம் மூட்டையில் ஊறவைத்து மூன்றாம் நாள் வெளியே எடுத்தால் முளைப்பயிர் விட்டு இருக்கும். அதைச் சேற்றுவயலில் நெல் பாவுவதற்கு எடுத்துச் சென்றால், அங்கே சிறு குழந்தைகள் கையில் சிறு ஓலைப் பெட்டிகள் வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருப்பார்கள் .வயலில் நெல் விதைத்து விட்டு மீதமிருக்கும் நெல்லை வந்தவர்களுக்கு இரண்டு கைவீதம் போடுவார்கள் .வாங்கிய சிறுவர்கள் நெல் பாவும் ஒவ்வொரு வயலாக தேடிச்சென்று நெல் வாங்குவார்கள் .
மாலையில் அந்த நெல் வறுத்தெடுக்கப்பட்டு..
நெல்குத்தி .., அவலாக மாறியிருக்கும் .
இன்று வயலுக்கு
செல்லும் குழந்தைகளையும் .அவல் குத்தி எடுக்க அம்மாக்களையும் காணோம் .

குருநெல் ..,பெருநெல் என நெல்வயதுக்கு தகுந்து நெல் பாவி, நாற்று பறிக்கும் ,நாற்று எடுக்கும் நாளும் மாறுபடும் .நாற்றங்காலில் வயல் நிறைய ஆண்களும் பெண்களுமாக நிறையப்பேர் அமர்ந்து பறிப்பார்கள் ..
சிலர் அதிவேகமாகப் பறிப்பார்கள் .
அவர்கள் பறிப்பதைப் பார்க்கவே ஆசையாக இருக்கும் 
நூறு நாற்று முடிகள் கொண்டது ஒரு கட்டு .
ஒரு கட்டு பறிக்க அன்று ஒரு ரூபாய் மட்டுமே ..

இவ்வாறு ஒரு இடத்தில் பறித்து நாற்றுகள் வேறு ஒரு இடத்தில் இருக்கும் வயலுக்கு கொண்டு போகப்படும் .இன்று வயல் நிறைய குவிந்து நாற்று பறித்தெடுக்கும் ஆட்களை காணோம் .காண்ட்ராக்ட் பறியல் என்று சொல்லி குழுவாக பறிக்கிறார்கள் .அதற்கும் ஆள் கிடைப்பதே இன்று சிரமமாக இருக்கிறது .

இனி நாற்று நடுவது குறித்து பார்ப்போம்
நாற்று நடுவதற்கு கங்காணிகளிடம் சொன்னால் போதும் அவர்களுக்கு ஒவ்வொரு வயலும் எத்தனை மா என கணக்கு தெரியும் .
அவர்கள் அதற்குத் தகுந்த மாதிரி இத்தனை ஆட்கள் வேண்டும் எனக் கேட்பார்கள் .நாம் அவற்றில் ஓரிரண்டு ஆட்களைப் பேசி குறைத்துக்கொள்ளலாம் .
பேசியபடி சரியாக வயலுக்கு வந்துவிடுவார்கள் .


எங்கள் வீட்டு நடவுக்கு எங்க அம்மா சொல்வது 
கோயிந்தி அக்கா அல்லது அம்மணி அக்கா இந்த இருவரிடமும்தான்.
இதில் கோயிந்தி அக்காவிடம் காசு என்று சொல்லச் சொன்னால் சொல்லாது .
சல்லி என்று தான், தான் இறக்கும் வரை சொல்லியது .
ஏன் என்றால் அக்காவின் கணவர் பெயர் காசி .
இந்த கோயிந்தி அக்கா தன் வீட்டின் பின்புறம் நின்ற புளியமரத்தில் தூக்கு போட்டு இறந்து விட்டது .
அம்மணி அக்கா இன்னும் இருக்கிறது ,நடை தளர்ந்து வயோதிகத்தின் இறுதி நாட்களில் இருக்கிறது.
ஊருக்குச் சென்று இருக்கும்போது பார்த்துவிட்டு வந்தேன் .



நாற்று நடுவதற்கு வயதான பெண்கள் மட்டும் அல்ல 
இளம் பெண்களும் கலந்தே வந்து இருப்பார்கள் .
நாற்று நடும் முன்பு ரோட்டோர வயல் என்றால் 
முதல் வேலையாக ஒரு நாற்றுமுடியை ரோட்டின் நடுவே வைத்துவிடுவார்கள் .


அதன் பின்பு வயதில் பெரியவர் ஒருவர் 
முதல் நாற்று நடுவார் .

அதன் பின்பு எல்லோரும் நாற்று நட ஆரம்பிப்பார்கள். நாற்று நடும்போது, 
ரோட்டில் ஒரு கண் வைத்தே நடுவார்கள் .
யாராவது ..,நடந்தோ சைக்கிளிலோ ,
ஒரு சிலர் மோட்டார் பைக்கிலோ வருவது தெரிந்தால் ஒன்று சேர்ந்தாற்போல் குலவையிட்டு பாடுவார்கள். வருபவர்கள் காசுகளை நாற்று முடி அருகில் போட்டு செல்வார்கள் .

இன்று யார் குலவையிட்டு பாடுறாங்க ..???
ஒருத்தரும் இல்லை .
நான் என் தம்பி ,என் அண்ணன் எல்லோரும் 
நாற்று விளம்பிக் கொடுத்துக்கொண்டு இருப்போம் .
நாற்று விளம்பும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக 
தள்ளி நின்று விளம்புவோம் .
அப்படி இருந்தாலும் கூட நம்மைச் சுற்றி 
நாற்று நட்டு விடுவார்கள் .
அப்படி நட்டு விட்டால் பணம் குடுக்காமல் வெளியாக முடியாது .
நாங்க மாமன் மச்சான் கிடையாதுதான்..,
நாற்று நடும் பெண்களுக்கு ...
இருந்தாலும், ஒரு அன்பால் சுற்றி நடுவார்கள் .
இப்பொழுது யார் இருக்கா ..??
நம்மைச் சுற்றி நாற்று நடுவதற்கும்..??
நாம் விவசாயம் பார்ப்பதற்கும்..?? .

என் வம்சத்தில் இனி வரும் குழந்தைகளுக்கு மியூசியத்தில் கொண்டுபோய் காட்டும் நிலை வரலாம் விவசாயம் என்று ஒன்று இருந்தது என..

இன்றும்.. 
எனக்கு மட்டுமல்லாது, 
ஊருக்கே சோறு போட்ட என வயலை நினைக்கிறேன் ..நாம் மறந்துவிட்ட விவசாயத்தை நினைக்கிறேன் ..
என் கண்கள் நீரினால் நிறைகிறது .. 
கணிணி முன் அமர்ந்து இதுகுறித்து கவலைப்படுவதுவும் .. கண்ணீர் விடுவதும் தவிர்த்து எனக்கு வேறு எதுவும் தெரியவில்லை 

ஆனா உறுதியாச் சொல்றேன் . 
ஒரு நா வரும்... 
அன்று உடுக்க உடை இருக்கலாம் 
வசிக்க ..மாட மாளிகைகள் இருக்கலாம் .. 
ஆனா உண்ணச் சோறிருககாது..
இதுதான் சாவடிக்கும் உண்மை.. என் மக்கா...!!!

Thursday, 26 April 2012

புத்தகங்கள் என் வாழ்க்கையோடு......




நான் எப்படி புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தேன் யோசிக்கும்போது  ஆச்சரியமாக இருக்கிறது .இன்றும் கூட தினசரி பத்திரிக்கைகள் மாலையில் தான் வந்து சேரும் கடைகோடி கிராமத்தில் உள்ள நான் எப்படி வாசிப்பு பழக்கத்திற்கு ஆளானேன் .




என் முதல் வாசிப்பு எதுவென யோசிக்கையில் தினத்தந்தி பத்திரிக்கையின் கன்னித்தீவு படக்கதையே நினைவுக்கு வருகிறது .இன்றும் கூட சிந்துபாத் லைலாவை தேடி நீண்ட பயணம் மேற்கொண்டு இருப்பார் ,அந்த முடிவுறா பயணம் போலவே என் புத்தகங்கள் வாசிப்பும் .




அதற்க்கு அடுத்து காமிக்ஸ் புத்தகங்கள் .முத்து காமிக்ஸ் ,லயன் காமிக்ஸ் ,ராணி காமிக்ஸ் என் எல்லா காமிக்ஸ் புத்தகங்களும் அடங்கும் .அதில் வரும் கதாபாத்திரங்கள் ஜேம்ஸ்பாண்ட் ,ஆர்ச்சி ,ஸ்பைடர் மேன்,இரும்புக்கை மாயாவி என அந்த உலகம் எனக்குள் எப்பொழுதும் உலவிக்கொண்டே இருந்தது .




என் பள்ளி நண்பர்கள் நாலைந்து பேர் சேர்ந்து வாங்குவோம் ,சில நேரங்களில் என் நண்பன் திருக்குமரன் [இவன்  இன்று இவ்வுலகில் இல்லை ] மட்டும் வாங்குவான் .அதே நேரத்தில் இன்னொரு நண்பன் விநாயகமூர்த்தி அம்புலி மாமா கொண்டு வருவான் ,அவன் அப்பா ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் ,பள்ளிக்கு வரும் புத்தகம் அது .






நான் படித்த முதல் நாவல் யவன ராணி சாண்டில்யன் எழுதியது .என் அண்ணன் நூலகத்தில் உறுப்பினராக இருந்தார் ,அவர் வாங்கி வரும் புத்தகம் எல்லாம் விளங்கியும் விளங்காமலும் படித்து முடித்துவிடுவேன் .இதே சமயங்களில் என் நண்பன் சங்கர் வீட்டில் குமுதம் வாங்குவார்கள் [இவனும் இன்று இவ்வுலகில் இல்லை ]சங்கர் அப்பா எங்கள் ஊரின் போஸ்ட் மாஸ்டர் .குமுதம் வந்தவுடன் நாங்கள் பார்ப்பது முதலில் ஆறு வித்தியாசம் .அதன் பின்பே மற்றதெல்லாம் .குமுதத்தில் தான் எனக்கு அறிமுகம் ஆனார் எழுத்தாளர் சுஜாதா அவரின் விக்ரம் திரைப்பட தொடர் மூலம் .




ஸ்டெல்லா அக்கா மறக்க முடியாதவர்கள் .இவர் நூலக கண்காணிப்பாளர் [வேறு எப்படி சொல்வது என தெரியவில்லை ]என்னை நூலக உறுப்பினராக்கி என்ன என்ன புத்தகங்கள் படிக்கலாம் என சொல்லிகொடுப்பார்கள் .அவர்கள் மூலம் என் வாசிப்பும் கொஞ்சம் விரிவடைந்து இருந்தது .




நான் முதன் முதலில் காசு கொடுத்து வாங்கிய நாவல் இன்னும் நினைவில் இருக்கிறது .ராஜேஷ் குமார் எழுதிய நந்தினி நானுற்றி நாற்பது வோல்டேஜ் கிரைம் நாவலில் வந்தது .அதன் பின்பு சுபா தொடர்ச்சியாக எழுதிய சூப்பர் நாவல் [இந்த நாவலின் அட்டை படம் அன்று எடுத்தவர் இன்று பிரபல ஒளிப்பதிவாளர் இயக்குனர் கே வி ஆனந்த்] இந்த இதழில் வந்த ஒரு கதைதான் ஆனந்த் எடுத்த முதல் படம் கனாக்கண்டேன் என வந்தது .








அப்புறம் பட்டுகோட்டை பிரபாகர் தொடர்சியாக எழுதிய உல்லாச ஊஞ்சல்,பாலகுமாரன் எழுதிய பல்சுவை நாவல் ,தேவிபாலா எழுதிய குடும்ப நாவல் ,ரமணி சந்திரன் எழுதிய நாவல் என எல்லா புத்தகங்களும் .
ஆனந்த விகடன் ,குமுதம் ,வண்ணத்திரை ,கல்கண்டு ,முத்தாரம் என கலவையாக புத்தகங்கள் வாங்கினேன் .என் அம்மா இப்படி புத்தகம் படிக்கா படிப்பு வராது என சத்தம் போடுவார்கள் .அதே போல மேல்நிலை பள்ளி யோடு என் படிப்பும் முடிந்தது .








இன்று இலக்கிய எழுத்தாளர்களோடு எல்லாவிதமான புத்தகங்களும் படிக்கிறேன் .சுந்தரராமசாமி யின் ஒரு புளியமரத்தின் கதை ,ஜே ஜே சில குறிப்புகள் ,ஜெயமோகன் ,எஸ் ராமகிருஷ்ணன் ,வண்ணநிலவன் ,கலாப்ரியா ,மேலாண்மை பொன்னுசாமி ,இன்னும் யார் யாரெல்லாமோ .இணையத்தில் நிறைய ப்ளாக் படிக்கிறேன்.




இதுதான் என இல்லை ,என்னால் எதையும் படிக்க முடிகிறது .இலக்கியம் மட்டுமே அல்ல எல்லாமும் படிக்கவேண்டும் ,அதுவே என் ஆசை.

Wednesday, 25 April 2012

நொண்டி அண்ணன்




தலைப்பு பார்த்துவிட்டு தலையை சொரிந்துகொல்லாதீர்கள் .நான் உங்களை அறுத்தெடுக்க போவதில்லை .இது ஒரு மனிதன் பற்றிய கதை அல்ல .என் வீட்டில் பால் கறக்கும் பசுமாடுகள் இல்லாமல் போனதற்கு நொண்டி அண்ணனும் ஒரு காரணம் .அதுதான் நொண்டி அண்ணன் என தலைப்பு .
நொண்டி அண்ணன் எனக்கு விவரம் தெரியும்போதே அப்படித்தான் அழைக்கபட்டுக்கொண்டு இருந்தார் .எங்கள் ஊரில் எல்லோருக்குமே அவர் நொண்டி அண்ணன் தான் .அவரின் உண்மையான பெயர் அவரின் குடும்பத்தார் அறிவார்களோ என்பதே சந்தேகம்தான்.

நொண்டி அண்ணன் மிக ஒல்லியாக ஒரு நாற்பது கிலோ தாண்டதவராய் இருப்பார் .அழுக்கடைந்த கைலி ஒரு மேல் துண்டு ஒரு நீண்ட வழவழப்பான கம்பு ஒன்று ,அழுக்கடைந்த உடம்பு முள்ளு முள்ளாய் அங்கொன்றும் இங்கொன்றும் நீட்டிக்கொண்டு இருக்கும் தாடி ,மஞ்சள் பல்வரிசை இப்படியாக இருப்பார் அவர் .அவர் நடக்கும்போது ஒரு கால் லேசாக விந்தி நடப்பார் .ஒரு கை எப்பொழும் மடங்கிய நிலையில் இருக்கும் .இதனாலேயே அவர் நொண்டி அண்ணன் என அழைக்கபட்டார் .


நொண்டி அண்ணனுக்கு எல்லோரையுமே தம்பி அல்லது தங்கச்சி என அழைக்கும் .அவர் அவர்கள் வீட்டில் உள்ள மாடுகளை மேய்ச்சலுக்கு ஒட்டி செல்வார் .அவங்க வீட்டில் மாடுகள் நிறைய இருக்கும் .அண்ணன் மாடு ஒட்டிவருவதே அழகாக இருக்கும் .அண்ணன் வருவது நடையும் இல்லாமல் ஓட்டமும் இல்லாமல் இரண்டிற்கும் இடையில் தொங்கோட்டமாக ஓடி வரும் .அவர்கள் மாட்டோடு எங்கள் வீட்டு மாடும் இன்னும் பத்துக்கு மேற்ப்பட்ட குடும்பங்களின் மாடுகளை மேய்க்கும் .அவங்க வீட்டில் கிளம்பும்போது இருந்த இருபது மாடுகள் எங்கள் வீட்டை கடக்கும்போது நூறு மாடுகளை தாண்டி மந்தையாக மாடுகளை ஒட்டி செல்லும் .எல்லா மாடுகளுக்கும் அது பேர் வைத்து இருக்கும் .கிடாரி,செவலை,வெள்ளை என அது மாடுகளை அதட்டும்போது பார்க்கும் நமக்கு ஆச்சரியமாக இருக்கும் .அது பேர் சொல்லி கூப்பிடும் மாடு அண்ணனை திரும்பி பார்க்கும் .மந்தையில் போகும் எல்லா பசுவுக்கும் ஏதோ ஒரு பெயர் இருக்கும் .எங்கள் வீட்டின் ஒரு பசுவுக்கு அது வைத்து இருந்த பெயர் இன்னும் என் நினைவில் இருக்கு .அந்த பெயர் சின்ன கிடாரி .காலையில் எங்கள் வீட்டு மாடு சத்தம் போட்டது என்றால் மணி பத்தரை என்று அர்த்தம் .அந்த நேரம்தான் அண்ணன் மாடு மேய்க்க வெளியாகும் நேரம் .


மாலையில் மாடுகளை திரும்ப ஒட்டிக்கொண்டு வரும் .மணி சரியாக ஐந்தரை ஆகி இருக்கும் .அண்ணன் அவர்கள் வீட்டிற்கு சென்று மாடுகளை கட்டிவிட்டு முகம் கழுவிவிட்டு நேராக எங்கள் வீட்டிலோ அல்லது எங்கள் உறவினர்கள் வீட்டு வாசலிலோ நின்றுகொண்டு தங்கச்சி என அழைக்கும் .ஒரு மாடு மேய்ப்பதர்க்கு மாதம் ஒன்றுக்கு மூன்று ருபாய் வாங்கும் .எங்கள் வீட்டில் பசுக்கள் கன்றுக்குட்டி என எழு மாடுகள் .இதேபோல மற்ற வீடுகளிலும் இருக்கும் .என் அம்மா வந்தவுடன் பணம் குடுக்க மாட்டாங்க .தங்கச்சி தங்கச்சி என கெஞ்சிக்கொண்டு இருக்கும் .நொண்டி அண்ணன் பணம் வாங்குவது குடிப்பதற்காக .

என் அம்மா நான் காசு கொடுத்தா நீ குடிக்க போயிடுவே என்று சொல்வாங்க .இருந்தும் கெஞ்சி வாங்கி விடும் ஐந்து ரூபாயாவது .திரும்பி போகும்போது என் அம்மாவிடம் தங்கவிலாஸ் புகையிலை கொஞ்சம் குடு என்று அதையும் வாங்கி வாயில் அதக்கிகொண்டு போகும் .ஒரு பாக்கெட் சாராயம் நான்கு ருபாய் என நினைவு எனக்கு .எப்படியும் இரண்டு பாக்கெட் சாராயத்திற்கு பணம் சேர்த்துக்கொண்டு போகும் .என் அம்மா மாதம் முடிந்து அண்ணனிடம் கணக்கு சொல்லும் வாங்கிய பணத்திற்கு .இரண்டு மடங்கு கூடுதலாக பணம் வாங்கி இருப்பார் .என் அம்மா இந்த மாதம் பணம் கிடையாது என்று சொல்லி அனுப்பினாலும் மறுநாள் எங்கள் வீட்டின் முன் நிற்பார் .


நொண்டி அண்ணனுக்கு கல்யாணம் நடந்தது என்று சொல்வார்கள் .ஆனால் அந்த பெண் அவரோடு வாழவில்லை .அதை எல்லாம் எழுதினால் ஒரு கிளை கதை எழுதலாம் .நொண்டி அண்ணனை வருடத்தில் ஒரு நாள் புத்தம் புது மனிதனாக பார்க்கலாம் .அந்த நாள் மாட்டுப்பொங்கல் .புதிய கைலி புது சட்டை புது துணி ,ஷேவ் செய்த முகம் என வித்தியாசமாக இருக்கும் .பொங்கல் கடையில் மாடுகள் கூடும் வரை ஒவ்வொரு மாடாக பார்த்துகொண்டு வரும் .அன்று அது முகத்தில் அவ்வளவு சந்தோசம் இருக்கும் .மாடுகள் மட்டுமே என தன் வாழ்வை மரணம் எட்டும்வரை வாழ்ந்தவர் அவர் .


இன்று எங்கள் வீட்டில் ஒரு பசுமாடு கூட இல்லை .வயல்காடுகள் குத்தகைக்கு விட்டதால் உழவுமாடும் இல்லை .என் வீட்டை போன்றே என் உறவினர்கள் வீடுகளிலும் இல்லை பத்து வருடங்களுக்கு மேலாக .நொண்டி அண்ணன் ஒருவர் மட்டுமே இறக்கவில்லை .அவர் இறந்தவுடன் அவர் சொல்லுக்கு கட்டுப்பட்ட அத்தனை மாடுகளும் தங்கள் வாழ்வை தொலைத்து காணமல் போய்விட்டன .இன்று அந்த மாடுகள் அடி மாடுகளாய் போனவா இல்லை மூப்பெய்தி இறந்து போனவா என்பது தெரியவில்லை .ஒரு மனிதன் இறப்புக்கு பின் ஒரு நூறு மாடுகளின் வாழ்வும் காணமல் போனது